Breaking News :

Saturday, January 18
.

காஞ்சி பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்


செருப்பு இருக்கா? என்று பெரியவர் கேட்டுவிட்டு

 

"நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு"

 

(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)

 

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 

ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது முகத்தில் வேதனை.அது அவர் வளர்க்கும் நாயின் மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது.

 

சென்ற ஒரு வார காலமாக அவரது நாய் உணவு உட்கொள்ளவில்லை. குரைக்கவும் இல்லை. என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ள முடியாமல் எஜமானர் மிருக வைத்தியரிடம் கொண்டு சென்றார்.

 

வைத்தியருக்கும் அந்த நாயின் போக்கு புதிராக இருந்தது.  அதனால் அவரால் அதைக் குணப்படுத்த  இயலவில்லை.

 

உண்ணாமல் மெலிந்து சக்தியில்லாமல் கிடக்கும் அந்த வாயில்லா ஜீவனின் அவஸ்தையை தாங்க இயலாத செல்வந்தருக்கு மனதில் ஒரே வழி தான் தோன்றியது.காஞ்சி மகானே கதி என்று இருக்கும் அந்த பக்தர், மனதில் நம்பிக்கையுடன் தன் செல்ல நாயுடன் காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தார்.

 

நாயை தனது காரிலேயே விட்டுவிட்டு உள்ளே போய், மகானிடம் சென்று நின்றார்.இப்படி தனது நாய்க்கு ஒரு குறை என்று நிவர்த்தி தேடி வந்தது மடத்தில் அபூர்வமாக எல்லோருக்கும் தோன்றியது என்றாலும் அவரது கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தபோது அதற்கு ஸ்ரீகாஞ்சிமகான் அருள வேண்டும் என்று மடத்து அன்பர் ஸ்ரீபாலுவுக்கு மனதில் தோன்றியது.

 

அவருக்கு வந்திருந்தவரின் மனவேதனை நன்கு புரிந்தது. ஆகவே ஸ்ரீபெரியவாளிடம் இந்த செல்வந்தரின் முறையீட்டைப் பற்றி ஸ்ரீ பாலு மெதுவாக எடுத்துரைத்து, அதற்குப் பிறகு பெரியவா அருள வேண்டுமென விண்ணப்பித்தார்.கருணை கரைந்தது.

 

"நாயை இங்கே கொண்டுவந்து சிரமப்படுத்த வேண்டாம் நானே அங்கே வர்ரேன்" என்று அந்த ஜீவகாருண்ய மகான், மெதுவாய் ஸ்ரீமடத்தின் வாசலில்  கார் நிற்குமிடத்திற்கு வந்து நின்றார்.

 

"கார் கதவை திறந்து விடுங்கோ" என்று மகான் சொல்ல, கதவு திறக்கப்பட்டதும் நாய் எதற்கோ கட்டுப்பட்டது போல் மெதுவாக காரை விட்டு இறங்கி நின்றது.

 

"செருப்பு இருக்கா?" என்று பெரியவர் கேட்டுவிட்டு

 

"நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு" என்றார். தொடர்ந்து ஒரு சிப்பந்தி அணிந்திருந்த செருப்பை கொண்டு வருகின்றார். அந்த நாயின் ஒரு பக்கம் வைக்கச் சொல்கிறார். மகான் உடனே பாலுவைப்பார்த்து " நீ போய் ஒரு கிண்ணம் நிறைய பால் கொண்டுவா!" என்று கூற, அவரும் மடத்தினுள் சென்று பாலைக் கொண்டு வந்து வைக்கிறார்.

 

ஸ்ரீபெரியவா தனது கமலங்களை மூடி தியானிப்பது போல் சில நிமிடங்கள் செய்கிறார். அதுவரை சக்தியில்லாமல் சோர்வாகக் கிடந்த நாய் 'மட மட' வென்று அருகே வைத்த பால் அத்தனையும் குடித்து விடுகிறது. அதற்கு புது தெம்பு உண்டானது போல் 'வள்வள்' என்று விடாமல் சில நிமிடங்கள் குரைத்தபின் சமாதானமாகிறது இதைப் பார்த்த செல்வந்தருக்கும்,அங்கே இருந்த அனைவருக்கும் இந்த மகிமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

 

ஆனால் பெரியவாளோ," இதில் அதிசயக்க ஒன்றுமே இல்லை" என்னும் அர்த்தத்தோடு தனது மேன்மையை மறைக்கும் அடக்கத்தோடும் சொல்கிறார்,

 

"திருடங்க வந்தா மந்திர சக்தியாலே நாயை கட்டிப் போட்டுடுவா.தோல் செருப்பாலே அதை போக்கிடலாம்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீமடத்தில் நுழைந்தார்.

 

இந்த ஒரு மாபெரும் தெய்வத்திடம் நாம் கொள்ளும் சரணாகதி, நமக்கெல்லாம் நல்கதி நல்கி சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் அள்ளி வழங்குமென்பது சாத்யமல்லவா?

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.