அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், மகானை தரிசிக்க வந்திருந்த பக்தர் கூட்டத்தில் வழக்கத்தைவிடப் பெண்களின் எண்ணிக்கை கூடுதலாகவே இருந்தது. பக்தர்களுக்கு தரிசனம் தந்து பிரசாதம் தந்து கொண்டிருந்த மகான், திடீரென்று, அங்கே இருந்த பெண்கள் கூட்டத்தைப் பார்த்து, "ஸ்த்ரீகள் எல்லாம் வரிசைலேர்ந்து ஒதுங்கி ஒரு இடத்துல உட்கார்ந்து அம்பாள் ஸ்லோகங்களைச் சொல்லுங்கோ!" என்றார்.
மகான் அப்படிச் சொன்னது ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாவிட்டாலும் அங்கே இருந்த பெண்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மடத்தில் ஓர் இடத்தில் அமர்ந்து மகாலக்ஷ்மி துதிகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
கொஞ்ச நேரம் ஆகியிருக்கும். ஸ்ரீமடத்தின் வாசலில் பெரிதாக ஒரு குரல் கேட்டது..."வளையல்...வளையல்..!"
அது ஸ்ரீமடம் என்பதையோ அங்கே மகான் இருக்கிறார் என்பதையோ அறியாத யாரோ ஒரு வளையல் வியாபாரி வாசலில் இருந்து மறுபடி குரல் கொடுத்தார்.
எல்லோரும் குரல் வந்த திசையைப் பார்க்க, அது இடைஞ்சலாக இருப்பதாக நினைத்த சிலர் வளையல் வியாபாரியை அங்கிருந்து போகச் சொல்வதற்காக எழுந்திருக்க, யாரும் எதிர்பாராதவிதமாக மகாபெரியவர் குரல் கொடுத்தார்.
"அந்த வளையல் வியாபாரியை விரட்டாதீங்கோ...உள்ளே வரச் சொல்லுங்கோ!" மகான் சொன்னதும் வேகமாக வெளியே சென்று அவரை உள்ளே அழைத்து வந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.
உள்ளே சன்யாசி ஒருவர் இருப்பதையும், அவரைச் சுற்றி பக்தர்கள் இருப்பதையும் பார்த்த வளையல் வியாபாரி சங்கோஜத்தில் நெளிந்தார்.
"சாமீ மன்னிக்கணும்க.. ஒரு வாரமா வியாபாரமே சரியா நடக்கலைங்க..உள்ளேர்ந்து பொம்பளைங்க பாடற சத்தம் கேட்டதால, வளையல் ஏதாச்சும் விற்கும்னு நினைச்சு குரல் கொடுத்துட்டேன்க!" தயங்கித் தயங்கிச் சொன்னார்.
ஆதுரத்துடன் அவரைப் பார்த்தார் மகான். "சரியான நேரத்துலதான் வந்து குரல் கொடுத்திருக்கே..அது இருக்கட்டும்..நீ சாப்டியோ...பார்த்தா வெயில்ல ரொம்ப களைச்சிருக்கற மாதிரி தெரியுதே..உன் வளையல் மூட்டையை அங்கே வைச்சுட்டு, கைகால் அலம்பிண்டுபோய் சாப்பிட்டுட்டு வா!" சொன்னார் மகான்.
அப்படியே, மடத்தில் அளித்த போஜனத்தை வளையல்காரர் சாப்பிட்டுவிட்டு வர, அப்போதுதான் தன் திருவிளையாடலைத் தொடங்கினார், மகான்.
அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்த மகான், "சென்னைலேர்ந்து ஒருத்தர், இப்போதுதான் வந்து வரிசைல நின்னிருக்கார். அவரை அழைச்சுண்டு வா!" சொன்னார்.
மகான் சொற்படி தொண்டர் சென்று கூப்பிட, வந்ததும் வராததுமாக மகானை தரிசிக்க வாய்ப்பா! என்று ஆச்சரியத்தோடு வந்து மகான் முன் நின்றார், அந்த சென்னை வாசி!
பவ்யமாகத் தன் முன் நின்றவரை பரிவோடு பார்த்தார், பரமாசார்யா. "என்ன, பெண்ணோட கல்யாணம் கைகூடற நேரத்துல தட்டிப் போறாப்புல இருக்கா.. நான் சொல்றபடி செய். இன்னிக்கு வெள்ளிக்கிழமை. இதோ இங்கே இருக்கா பாரு பொம்மனாட்டிகள்..இவா எல்லாருக்கும் நீ கைநிறைய வளையல் வாங்கிக் குடு. அம்பாளோட ஆசிர்வாதத்துல உன் பொண்ணோட கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்!" சொன்னார்.
வந்தவருக்கு ஆச்சரியம்... தான் சொல்லாமலே மகளுடைய திருமணம் தடைபடுவதை எப்படி தெரிந்துகொண்டார் மகான்? அதைவிட ஆச்சரியம், அது நீக்குவதற்கான வழியையும் சொல்லி அதை நிறைவேற்றுவதற்காகவே வளையல் வியாபாரி ஒருவரையும் அங்கே வரவழைத்திருக்கிறார்.
சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும். அங்கே இருந்த எல்லா பெண்களுக்கும் மகானின் ஆணைப்படி, வளையல் வாங்கித் தந்தார் சென்னை வாசி. அதன் முடிவில் நடந்ததுதான் பேரதிசயம்!
எல்லா பெண்களுக்கும் கைநிறைய வளையல் வாங்கியதும், வளையல்காரரிடம் ஒரு ஜோடி வளையலைத் தவிர வேறு எதுவுமே மிஞ்சவில்லை. அந்த அளவுக்கு கனகச்சிதமாகத் தீர்ந்தது மொத்தமும்.
ஒரு டஜன் வளையலாவது விற்குமா என்ற ஏக்கத்தோடு வந்த வியாபாரி முகத்தில் ஒட்டு மொத்தமும் விற்ற மகிழ்ச்சி பிரதிபலித்தது.
தன்னை யார் என்றே அறியாத வளையல் வியாபாரியின் கஷ்டத்தைத் தீர்க்க முன்கூட்டியே தீர்மானித்து, வந்திருந்த பெண்களையெல்லாம் அங்கேயே இருக்கச் சொன்ன மகானின் தீர்க்க தரிசனத்தை நினைத்து சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும்.
மஹா பெரியவா சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர