Breaking News :

Friday, January 17
.

கருணை என்றால், இதுவல்லவா, கருணை? - காஞ்சி மகா பெரியவா


நரிக்குறவர்கள் பெற்ற பேறு.  
(இது ஏற்கனவே பல பேரால் படிக்கப்பட்டது, ஆனால்,பங்கு பெற்றவர் வாயால் கேட்பது தத்ரூபமாக உள்ளது)
சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. கும்பகோணம் மடத்துத் தெருவிலுள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மடத்தில், ஒரு சமயம், ஏராளமான வைதீக சிரேஷ்டர்களுக்கு   சமாராதனை ஏற்பாடாகியிருந்தது. அப்போது, வைதீகர்களுக்கு நானும் பரிமாறுவேன்.
மகாசுவாமிகள், என்னைத் தனியே கூப்பிட்டார்.

"இன்னிக்கு, இலைக்கு பட்சணம் லட்டு! தெரியுமோல்லியோ?"
"தெரியும்."

"நீ தானே பரிமாறுவே?.. அவர்கள், வேண்டாம், வேண்டாம் என்று கையைக் கொண்டு வந்து மறுத்தாலும், நீ பட்டுக்கு, ஒவ்வொருத்தருக்கும் லட்டு ரெண்டு,மூணுன்னு போட்டுண்டே போ! அவாளெல்லாம் உன்னைத் திட்டுவா, எறியும்படிவைக்கிறானே? என்று கோபப்படுவா, காது கொடுக்காதே.."

சுமார் அறுபது வைதிக சிரோன்மணிகள் போஜனப் பந்தியில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பரிமாறியதில் நூற்றைம்பது லட்டுக்களைக் காலி செய்து விட்டேன்.

பெரியவா சொன்னது போல, என் காதுபடவே என்னைத் திட்டினார்கள். இந்தத் திட்டுகளுக்கு மேல் உயர்ந்து பெரியவாளின்  கருணை இருந்தது.!
அப்போதெல்லாம், ஒரு இரட்டை மாட்டுவண்டி மடத்துக் கொல்லைப்புறத்தில் இருக்கும். பெரியவா, அந்த வண்டியை கழுவச் சொன்னார்கள்; ஆசனம் கொண்டு வரச் சொன்னார்கள்.அதில் உட்கார்ந்து கொண்டார்கள்.

வைதிகர்கள் உணவருந்தி முடித்தவுடன் எச்சில் இலைகளை கொல்லையில் கொண்டு வந்து போட்டார்கள்சிப்பந்திகள் அப்போது ஓடி வந்தார்கள் ஐம்பது நரிக்குறவர்கள் ஆண்-பெண் குழந்தைகளாய்.ஏக சந்தோஷம், அவர்களுக்கு. அவர்கள் பாஷையில் காச்சு,மூச்சென்று ஒரு இரைச்சல்.ஒரு கும்மாளம்! இலைகளில் மிகுந்திருந்த பண்டங்களை அள்ளி அள்ளிச் சாப்பிட்டார்கள். லட்டுக்களைப் பொறுக்கி மூட்டை கட்டிக் கொண்டார்கள்.

பெரியவா, வண்டியிலிருந்தபடியே, இந்த ஆனந்த அமர்க்களத்தை மனம் நெகிழப் பார்த்து மகிழ்ச்சியுடன் ரஸித்துக் கொண்டிருந்தார்கள்.

"நீ போய், போஜனம் செய்து விட்ட வைதிகர்களை அழைச்சிண்டு வா." வந்தார்கள். நரிக்குறவர்களின் முகத்தில் பேரானந்தத்தைக் கண்டார்கள்.
"நமக்கும்,நேரடியாகத் தரும் பழக்கம் இல்லை." (நேரடியாகக் கொடுத்தால், சமையற் கட்டில் மீதமிருக்கும் லட்டுகள் சேஷமாக-மடி,ஆசாரம் பார்ப்பவர்கள் உண்ணத் தகாததாகப் போய்விடும்.)

இப்படி இலையில் போட்டு, மிகுந்து எறியப்பட்டதை நரிக்குறவர்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு என்ன மேன்மை?
-இந்த கேள்விக்குப் பெரியவா கொடுத்த பதில், நெஞ்சம் உள்ள எல்லோரையும் நெகிழச் செய்யும்.

"ஏதோ, முன்வினைக் கொடுமையால் நரிக்குறவர்களாக ஜன்மம் எடுத்து, குப்பைத் தொட்டியில் போட்ட எச்சில் உணவுப் பண்டங்களை சாப்பிடும் துர்பாக்கியம்  அவர்களுக்கு. இன்று வேதவித்துக்கள் உண்ட  உச்சிஷ்டத்தை சாப்பிட்டு,  பாவமெல்லாம் போய், அடுத்த பிறவியில் நல்ல வேதியர்களாகப் பிறந்து ஆனந்தமாக இருக்கத்தான், இப்படிச் செய்யறது..."

பெரியவாளின் விளக்கத்தைக் கேட்டவர்களுக்கெல்லாம் உடம்பில்  மின்னலை பரவினாற் போலிருந்ததாம்.கருணை என்றால், இதுவல்லவா, கருணை?.

அந்த நரிக்குறவர்களுக்குத் தான் எவ்வளவு பெரும் பேறு?
வேத பண்டிதர்கள் எல்லோரும், பெரியவாளின் அவ்யாஜ கருணையை எண்ணி, அசந்து போனார்கள்!

அப்போது பந்தியில் சாப்பிட்ட வைதிகர்களில் ஒன்றிரண்டு பேர்கள் இன்னமும் சென்னையில் உள்ளார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.