பிதுரார்ஜித வீட்டை விற்று விட்ட ஒரு பக்தருக்கு பெரியவாளின் அறிவுரை. (அங்கிருந்து ஒரு கல்லையும், ஒரு பிடி மண்ணையும் எடுத்து தற்போதுள்ள வீட்டில் வைக்கச்சொல்லி)
பித்ரு பக்திக்கு இப்படியொரு யோசனை பெரியவாள்தாம் கூற முடியும்
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"உன் பிதுரார்ஜித சொத்து ஜாக்கிரதையாக இருக்கிறதா? என்று கேட்டார்கள் ஸ்ரீ பெரியவாள்.அந்தப் பக்தரைப் பார்த்து.
"பெரியவா உத்தரவுப்படி அதைப் பத்திரமாகப் பூஜை அறையில் வைத்திருக்கிறேன்" என்றார் பக்தர்
ஸ்ரீ பெரியவாள், " என்ன சொத்து தெரியுமா?" என்று தொண்டர்களைக் கேட்டு விட்டு, "வெறும் கல்லும் மண்ணும்தான் .பிதுரார்ஜித சொத்து" என்று கூறி 'வந்தவரைக் கேள்' என்றார்கள்
அருகிலிருந்த அணுக்கத் தொண்டர் வந்தவரைக் கேட்க, அவர் சொன்னார்;
"பிராசீனமான தலைமுறை தத்துவமாய் வந்த வீட்டை விற்றுவிட்டதாகப் பெரியவாளிடம் சொன்னேன்.
ஸ்ரீ பெரியவாள் உடனே, "அது நாராயண ஐயர்,ஆதிசேஷய்யர்,முத்துராமய்யர்,சுப்புராமய்யர்,ராமசாமி அய்யர் பரம்பரையில் ரொம்பகாலம் தலைமுறையாக உள்ள வீட்டை விற்று விட்டாயே? என்ன காரியம் செய்தாய்?.ஏன் இப்படி உனக்குத் தோன்றியது? --- என்றெல்லாம் கேட்டார்கள்.
ஏதோ தவறு நடந்து விட்டது. பையன்களின் சம்சாரம் எல்லாம், கிராமத்தில் வீடு,நிலம் எதற்கு? என்று சொன்னார்கள். அதனால் விற்று விட்டேன் என்று பெரியவாளிடம் சொன்னேன்.
"உங்கள் பிதுரார்ஜித சொத்தான வீட்டில் உள்ள, ஒரு கல்லையும், அங்கிருந்து ஒரு பிடி மண்ணையும் உன் வீட்டிற்கு எடுத்து வா! பித்ருக்கள் (முன்னோர்) ஞாபகம் உங்களுக்கு இருக்க வேணும் என்றார்கள் பெரியவா
பித்ரு பக்திக்கு இப்படியொரு யோசனை, பெரியவாள்தாம் கூற முடியும்.
வேறு யாருக்காவது இப்படித் தோன்றுமா?