Breaking News :

Thursday, February 06
.

"தலையில் பள்ளத்தோடு பிறந்த குழந்தை" - காஞ்சி பெரியவா


ஆண் பிள்ளை வேண்டும் என்று,பண்டரிபுரத்தில் பெரியவாளிடம்  பிரார்த்தித்த தாய்
(பெரியவா கொடுத்த பிரசாதத்தால், பள்ளம் மாயமாக மறைந்த சம்பவம்.)

சென்னையைச் சேர்ந்த திருமதி கமலாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண்கள். இரண்டாவது பெண் பிறந்து,  அவளுக்கு எட்டு வயதாகும் போது, கமலா மீண்டும் தாய்மை அடைந்தார். ஏழு மாத கர்ப்பிணியான அவளை அழைத்துக் கொண்டு, அவரது கணவர் மகானை (பெரியவா) பண்டரிபுரத்தில் தரிசித்தார்.

உடன் அவர்களின் மாமாவும் சென்றிருந்தார். அவர்தான் மாமாவிடம்  கமலாவைப் பற்றிய வேண்டுகோளைச்  சொன்னார்.

"இவளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள். பல வருஷங்களுக்குப் பின்னால் மீண்டும் உண்டாகியிருக்கிறாள். இந்தக் குழந்தையாவது ஆணாகப் பிறக்க மகா பெரியவாளின் ஆசி வேண்டும்."

"இரண்டு பெண்ணுங்க ஜாஸ்தின்னா சொல்றே?" என்றார் புன்னகையோடு மகான்.

அவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வியல்லவா இது? மௌனமாக நின்றார்கள்.
"ஏழு மாதம் கழித்து என்னிடம் கேட்டால், நான் என்ன பண்ணுவது?" என்று புன்னகை புரிந்தவாறே புதிர்  போட்டார்.

இப்படிக் கேட்டதும், கர்ப்பிணியான கமலாவிற்கு அழுகை வந்துவிட்டது.

"ஏண்டா அவ அழறா?" என்று ஒன்றுமே அறியாதவர் போலக் கேட்டார். யாரால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்? எதிரில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு மாம்பழத்தை எடுத்து, தனது வலது தொடையில் வைத்துத் தேய்த்துக் கொண்டே இருந்தார்.

பிறகு கமலாவைப் பார்த்து, "இந்தா இதைச் (மாம்பழம்) சாப்பிட்டு விட்டு ஸ்ரீபாண்டுரங்கனைத் தரிசனம் செய்துவிட்டு வா" என்று உத்தரவிட்டார்.

நான்கு நாட்கள் கழித்து மகானின் உத்தரவு பெற்றுக்கொள்ள போனபோது, கமலாவை,"இப்படி வா" என்று தன் அருகில் அழைத்து, "உனக்குப் பிள்ளை குழந்தை பிறந்தால், சந்திரமௌலி என்று பெயர் வைக்கிறாயா? என்று அவளிடம் கேட்க, அவளுடன் வந்த எல்லோரும் அதை தெய்வ வாக்காகவே எடுத்துக் கொண்டனர்.

குழந்தை பிறந்து ஏழாவது மாதம் மகானிடம், ஆசிக்காக எடுத்துக் கொண்டு போனார்கள்.தம்பதிகள். " சந்திரமௌலிதானே?" என்று ஞாபகமாய் குழந்தையைப் பார்த்து அந்த ஞானசேகரர் கேட்டார்.

"பெரியவா சொன்னபடி, சந்திரமௌலி என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால், குழந்தைக்கு தலையில் நீட்டமாக முன் நெற்றி முதல் பின் கழுத்து வரை பள்ளமாக இருக்கிறது" என்றாள் தாய் கமலா.

"குழந்தையை நல்ல வெளிச்சத்தில் துணியில் போடு. தலையில் பள்ளம் இருக்கா?" என்று கேட்டபடி வாழைப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் எடுத்து, அவைகளை குழந்தையின் முன் வைத்தார். பெரியவா.

"இதெல்லாம் உனக்கு வேண்டுமா..  உன்னால் இதைச் சாப்பிட முடியுமா?" என்று குழந்தையிடம் கேட்டுவிட்டு, தாயிடம், "இதையெல்லாம் கொடுக்கலாமா?" என்று வினவினார்.

கமலா தயங்கியபடி, "குழந்தை பால் தான் சாப்பிடும்" என்றதும்;

"எல்லாவற்றையும் மாவு போல் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கஞ்சி போல் கொடுக்கச் சொல்" என்று சொல்லி விட்டு,  எல்லா பழங்களையும் கமலாவிடம் கொடுக்கச் சொன்னார்.

"இவள், என்னிடம் பிள்ளை வேண்டும் என்று எந்த ஊரில் கேட்டாள்?"

"பண்டரிபுரத்தில்" என்றாள் கமலா உடனே...
"அங்கே பாண்டுரங்கனை தரிசனம் செய்தாளா?"
"மகா பெரியவா உத்தரவுபடி நாங்கள் பாண்டுரங்கனை தரிசனம் செய்தோம்"
மகாபெரியவா நிதானமாகச் சொன்னார்;

"வெறும் தரிசனம் இல்லை. ஐந்து ரூபாய் கொடுத்தால், சுவாமியின் தலையில் இருக்கும்,தலைப்பாகையை எடுத்துக் காண்பிப்பார்கள். அந்தப் பாண்டுரங்கனுக்கு தலை இப்படித்தான் பள்ளமாக இருக்கும். வடநாட்டில் பக்தர்கள் எல்லோரும் சுவாமியைக் கையால் தொடும் பழக்கம் உண்டு. அதே போல் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் தலையில் கை வைத்து வணங்கியதால் பள்ளமாகி விட்டது.

இவள் பிள்ளை குழந்தை வேண்டும் என்று பண்டரிபுரத்தில் கேட்டதால், குழந்தைக்கும் தலையில் பள்ளம் உள்ளது. அது தானாகவே சரியாகி விடும்" என்று அந்த மாந்தருள் தெய்வம் சொல்ல, அந்தக் குழந்தை எப்பேர்ப்பட்ட பாக்யம் செய்திருக்க வேண்டும்?

கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.