பெரியவாளிடம் ஏழு வயசு சின்னப் பையன் கேட்டது மேலே,
ஒரு சமயம் பரமாசார்யா காஞ்சி மடத்துல இருந்தப்போ அவரை தரிசிக்க ஏராளமான பக்தர் கூட்டம் நிறைஞ்சு இருந்தது. அந்த சமயத்துல ஏழு வயசு இருக்கும் ஒரு சின்னப்பையன் ஓடி வந்து பெரியவா முன்னால நின்னான். யாரும் எதிர்பார்க்காதவிதமா, மகாபெரியவாகிட்டே.
"சார்...இவ்வளவுபேர் உங்களைப் பார்க்க வராளே.. நீங்க வி.ஐ.பிதானே..உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா" அப்படின்னு கேட்டான்.
மகாபெரியவாளை அவன் 'சார்'னு கூப்பிட்டதும் கையெழுத்தைக் கேட்டதும் பலருக்கு பதட்டம். ஆசார்யா என்ன சொல்லப்போறாரோன்னு நினைச்சா. ஆனா அவர் எதுவுமே சொல்லாம அந்தப் பையனைப் பார்த்து மென்மையா சிரிச்சார்.
"நான் வி.ஐ.பி. எல்லாம் இல்லைப்பா. ஆமா. எதுக்கு என்னோட கையெழுத்தைக் கேட்கிறே?"ன்னு கேட்டார்.
தன் கையில இருந்த ஆட்டோ கிராஃப் புத்தகத்தைக் காட்டின அவன்,"இதோ பார்த்தேளா. இதில பெரிய பெரிய முக்கியஸ்தர்கள்கிட்டே எல்லாம் கையெழுத்து வாங்கி சேர்த்து வைச்சிருக்கேன்.உங்க கையெழுத்தையும் போட்டுத் தந்தேள்னா பொக்கிஷமா வைச்சுப்பேன்!" இளங்கன்று பயமறியாதுங்கற மாதிரி சொன்னான்
மடத்துக் காரியதரிசியை கூப்பிட்டார் பெரியவா.
"இந்த நோட்டுல மடத்தோட சீல் போட்டு, ஸ்ரீமந் நாராயண ஸ்துதின்னு எழுதி உன் கையெழுத்தைப் போட்டு இவன்கிட்டே குடு!" - சொன்னார்.
ஒரு சில நிமிஷத்துல அப்படியே செஞ்சு, ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்துண்டு வந்து குடுத்தார் மடத்துக் காரியதரிசி.அதை வாங்கிண்டவன் ,"தாங்க்யூ சார்!" அப்படின்னு சொல்லிட்டு நோட்டை பையில வைச்சுண்டு புறப்பட்டான்.
"ஒரு நிமிஷம் நிக்கறியா?" அவனைக் கூப்பிட்ட பெரியவா, "எனக்கும் ஒன்னோட கையெழுத்து வேணுமே போட்டுத தரியா?" என்று கேட்டார். சந்தோஷமா தலையாட்டினான் அந்தப் பையன். மடத்தோட ரெஜிஸ்டர் நோட்டை எடுத்துண்டு வரச் சொன்ன பெரியவா, அதுல அவனைக் கையெழுத்துப் போடச் சொன்னார். சந்தோஷமா கையெழுத்து போட்ட அவனை ஆசிர்வாதம் செஞ்சார் ஆசார்யா.
அந்தப் பையனுக்கு தானும் ஒரு முக்கியஸ்தன் தான் அப்படிங்கற எண்ணம் வரணும்.அப்படி வந்தாத்தான் அவன் வாழ்க்கைல நன்னா முன்னேறுவான், அதுக்காகத்தான் அவனையும் கையெழுத்துப் போடச் சொன்னேன்?
மகாபெரியவா இந்த வார்த்தையைச் சொல்லலை. ஆனா, அவரோட செயலுக்கான் காரணம் அதுதான்கறது அங்கே இருந்த எல்லாருக்குமே புரிஞ்சுது.
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)