ஆஸ்திரியக்கார பெண்மணிக்கு அம்பிகையாக காக்ஷி கொடுத்த பெரியவா.
விஸா முடியும் கடைசி நாளில் நடந்த அற்புதம்.
எந்த ஓர் இந்தியனுக்கும் கிடைக்காத புதையலை நெஞ்சத்தில் தாங்கிக்கொண்டு, ஆஸ்திரிய மங்கை ஆகாயவிமானம் ஏறிப் போய்விட்டார்.
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கலவையில் நவராத்திரி மகோத்ஸவம். புதுப் பெரியவாள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். காலை பதினோருமணி. ஏராளமான கூட்டம்.
சென்னை, பாண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாராயணனுக்கு மகாப் பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி. நவராத்திரி புண்ணிய காலத்தில், குருமூர்த்தியைத் தரிசிக்க வேண்டாமா?.
பூஜை நடக்குமிடத்தில் நெருக்கடி. எதிரே இருந்த கட்டிடத்தில் அமைதியாக உட்கார்ந்து விட்டார்.
"ஸார்...நமஸ்தே.."
எதிரே, ஓர் இந்தியப் பெண்மணி, ஓர் ஐரோப்பியப் பெண்மணி.
"எங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?" என்று இந்தியப் பெண்மணி கேட்டார்.
"சொல்லுங்கள்..முடிந்தால் செய்கிறேன்."---நாராயணன்.
"இவருடையவிஸா நாளையோடு முடிவடைகிறது. இந்த அம்மையார் ஆஸ்திரியக்காரர் மகாப்பெரியவாளை தரிசனம் செய்ய வந்திருக்கிறார். சுவாமிகளை இப்போதே தரிசனம் செய்தால்தான் உடனே சென்னை சென்று, விஸா கெடு முடிவதற்குள் புறப்பட்டுச் செல்லமுடியும். ப்ளீஸ் எங்களுக்கு உதவ முடியுமா?..." என்று இந்திய வழிகாட்டிப் பெண்மணி பவ்யமாகக் கேட்டுக்கொண்டாள். நாராயணன் உடனே உள்ளே சென்று அனுமதி பெற்றுக்கொண்டு வந்தார்.
கிணற்றின் ஒருபுறத்தில் பெரியவாள் நின்று கொண்டார்கள். எதிர்ப்புறத்தில், நாராயணனும் இரண்டு பெண்மணிகளும்.
"...என்ன சொல்லணுமோ,சொல்லச் சொல்லு.இல்லை..ஏதாவது வேணும்னா கேட்கச் சொல்லு.."-பெரியவா.
ஆஸ்திரியப் பெண்மணி, வைத்த விழி இமையாமல், ஒரு தெய்வத்தைப் பார்ப்பது போன்ற அந்தரங்கப் பரவசத்துடன், பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தாள்
வாயைத் திறக்கவில்லை. மௌனமாகப் பேசிக் கொண்டிருந்தாள் போலும்! அல்லது சொற்கள் தேவைப்படாத ஓர் ஒட்டுறவில் உரையாடிக் கொண்டிருந்தாளோ?...
பெரியவாள் ஓர்ஆப்பிள் பழத்தைப் பிரசாதமாகக் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று விட்டார்கள்.
இவர்கள் மூவரும் வெளியே வந்தார்கள். சில நிமிஷங்கள் சம்பாஷணை.வந்த காரியம் நிறைவேறி விட்ட மகிழ்ச்சி. அந்த ஆஸ்திரியப் பெண்மணிக்கு, சிறு பருவத்திலிருந்தே, 'நான் இந்திய நாட்டுப் பெண் என்ற உணர்வு இருந்து கொண்டே இருந்ததாம். அவளுடைய சகோதரி ஒருத்தி, சிறிது காலம் பாரதத்தில் இருந்திருக்கிறார் அவளிடமிருந்து பாரதப் பண்பாடு, கலாசாரம்,தத்துவம் பற்றி அறிந்து கொண்டாள்.
"நான் இந்தியாவுக்குப் போகணும் ஆமாம் எப்போதாவது,எப்படியாவது போயாக வேண்டும்.."
மாத வருமானத்தில் ஒரு பகுதியைப் பாரதப் பயணுத்துக்காக ஒதுக்கி வைத்தாள். போதுமான தொகை சேர்ந்ததும், ஒரு மாத சுற்றுப்பயணமாக, தன்னுடைய முப்பதாம் வயதில் பாரதம் வந்து விட்டாள்.
நூற்றுக்கணக்கான துறவிகளை - ஆசிரமம் என்று சொல்லப்பட்ட மாட மாளிகைகளில்- சந்தித்தாள்.
மனம் அடங்கவில்லை. வேறு எதையோ; பெரியதாக எதையோ, மகத்தான எதையோ, மகத்துக்கும் மகத்தான மகத்தையே கண்ணால் காணத் தவித்தது.
'கலவைக்குப் போங்கோ..' என்று யாரோ சொன்னார்கள்.
கலவை என்ன - கல்கத்தாவா, காட்மாண்டுவா - தேசப்படத்தைப்பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு!
விஸா என்ற புலி,பின்னால் உறுமிக் கொண்டிருக்கும் அவசரத்தில் கலவையைக் கண்டுபிடித்து விட்டார்கள்
மாளிகைகள் இல்லை; சிம்மாசனங்கள் இல்லை; ரத்தினக்கம்பளங்கள் இல்லை!
ஓ! இது தான் இறைவியின் இருப்பிடமாக இருக்கமுடியும்.
அந்த ஆஸ்திரியப் பெண்மணிக்கு சிறப்பான ஓர் ஆன்மீக அனுபவம். வெகு காலமாக, ஒரு தேவமங்கை - சொற்கடந்த சோதிப்பிழம்பினாள்-- கனவில் காட்சி கொடுத்து வந்தாராம்.
அவளைத் தேடிக்கொண்டு தான் பாரதப் பயணம்! அவளைக் காணவில்லையே? கனவில் மட்டும் தான் காட்சி கொடுப்பாளோ?
அதோ!..இதோ!..கிணற்றுக்கு அந்தப் பக்கத்தில் (நாம் எல்லோரும் மகாப்பெரியவா என்று சொல்கிற அந்தத் தெய்வ மடந்தை. மயக்கும் அருட்பார்வை; மணக்கும் சுற்றிச்சூழல்; மாலைக் கதிரவனின் செம்மை; முழு நிலவின் அமுதப் பொழிவு....'
எந்த ஓர் இந்தியனுக்கும் கிடைக்காத புதையலை நெஞ்சத்தில் தாங்கிக்கொண்டு,ஆஸ்திரிய மங்கை ஆகாயவிமானம் ஏறிப்போய்விட்டார்.