Breaking News :

Sunday, July 20
.

தர்மமே தலைக்காக்கும் : தெய்வத்தின் குரல்


புத்தாண்டு பிறக்கப் போவதற்கு அறிகுறியாக இயற்கை அன்னை தனது மர வர்க்கங்களின் அரசிளங் குழந்தைகளான அரசையும் வேம்பையும் முதலில் அடியோடு இலையுதிரச் செய்கிறாள். பிறகு பச்சைத் துளிர்களைத் தழைக்க வைக்கிறாள்.

அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்து அதனடியே விநாயகரையும், நாகராஜனையும் பிரதிஷ்டை செய்வது தொன்று தொட்ட வழக்கு. பனிக் காலத்துக்குப்பின் இலை உதிரும்போது இந்த மரங்களைப் பார்த்தால் இலையே இருக்காது. பிள்ளையாரும் நாகராஜனும் மரத்தின் நிழற்குடையில்லாமல் வெளிச்சம் தங்கள்மேல் படுகிற மாதிரி இருப்பார்கள்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அப்படி அவை நியதிப்படி நடப்பதால்தான் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் நெறிகெட்டுப் போய்விடும். அதாவது லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் சௌக்கியமாக வாழவேண்டும் என்கிற அன்பான எண்ணத்திலேயே அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு தர்மம், நியதி (law) ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்த அன்பைப் பெற நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா? வேண்டும். மரத்துக்கும் மட்டைக்கும் இருக்கிற நியதி நமக்கும் உண்டு. லோக க்ஷேமத்துக்காக அதை நாம் நடத்திக் காட்டுகிற போதுதான் ஈசுவரனின் அன்பைப் பெற பாத்தியதை கேட்கலாம். மனிதனுக்காக உள்ள இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும் மனிதனுக்கு மூளையைத் தந்து ஸ்வாமி விளையாட்டுப் பார்க்கிறார். அந்த மூளையை வைத்துக் கொண்டு இவனும் எதை எதையோ சௌக்கியமாக நினைத்துக் கொண்டு, அவற்றுக்காக அலைகிறான். இதில் தனக்கான தர்மத்தையும் மீறுகிறான். ஆனால் இறுதியில் சௌக்கியத்தைத் தருவது தர்மமே.

உலக வாழ்வுக்கு மனிதன் பணமும் பொருளும் சேர்த்தான். அன்றைய தேவையோடு போதாது என்று எதிர் காலத்துக்காகவும் பொருளீட்டினான். ‘எதிர்காலம்’ என்கிறபோது அது எத்தனை வருஷம் என்ற கேள்வி வந்தது. எப்படியிருந்தாலும் ஒருவன் ஆயிரம் பதினாயிரம் வருஷம் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தது. ஒரு மநுஷ்யனின் ஆயுள் உள்ளவரைக்கும், அந்த மநுஷ்யனின் சந்ததிக்கும் தேவைப்படுகிற சொத்தைத் தேடினான்.

இந்த மநுஷ்ய ஆயுள் முடிந்தபின் அவன் என்ன ஆகிறான் என்ற கேள்வி வந்தது. இந்த உடம்பு போனதோடு மநுஷ்யனும் போய்விடுவதில்லை என்று அந்தந்த தேசத்திலும் தோன்றிய மஹான்கள் கண்டார்கள். ஆனால் இந்த உடம்புக்காகத் தேடிய பணமும் பொருளும் உடம்பு போனபின் அந்த மநுஷ்யனுக்கு சிறிதும் பிரயோஜனமில்லை என்று கண்டார்கள். உடம்பு போனபின் உயிர் நல்ல கதி அடைவதற்குச் செய்ய வேண்டியது எதுவோ அதை அந்த மஹான்கள் கண்டார்கள். பல தேசங்களில் பலவிதத்தில் வழி கண்டார்கள். சிலுவை, நமாஸ், விபூதி, திருமண் எல்லாம் இப்படி வந்தவையே.

இப்போது இவனுக்கு இருக்கிற சுயநலத்தைக் குறைக்க வேண்டும். இவனுக்கு ஈசுவரனின் நினைப்பை உண்டாக்கி, அவனுடைய உடைமையே உலகமெல்லாம் என்ற அறிவை ஏற்படுத்த வேண்டும்’ என்ற அடிப்படையில்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. ‘உன் ஆசைப்படி நடந்து கொண்டு உனக்கேற்ற சொத்து சேர்த்துக் கொள்’ என்று சொல்கிற மதம் எதுவுமே இல்லை. 

ஆனாலும் கடவுள் என்று ஒரு தத்துவம், அதனிடம் பக்தியில் மனசைத் தோய்க்க வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டால் சாமான்ய ரீதியில் அதைப் பிடித்துக் கொண்டு ஸ்திரமாக நிற்கமுடியவில்லை. பக்தியையும் காரிய ரூபத்தில் காட்டுவது என்றாலே சாதாரண ஜனங்களால் முடிகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு மதத்திலும் சடங்குகள்—சந்தியாவந்தனம், ப்ரேயர், நமாஸ்—எல்லாம் வந்திருக்கின்றன. லோக வாழ்க்கையில் இருந்துகொண்டே இப்படி பக்தி செய்கிறபோது உலகில் எப்படி நடப்பது இவனுக்கும் தர்மம் என்பதை மதங்கள் சொல்கின்றன.

‘ஏதோ ஒரு வழியில் கடவுளை அடைந்து விடுகிறோம். அதற்கப்புறம் இந்த லோக வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய துக்கங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் எதுவும் அடியோடு இல்லை; நீங்காத, நிறைவான ஆனந்தம் மட்டுமே இருக்கும்’ என்று தெரிந்து கொண்டால் இப்போதைக்குப் போதும்.

அப்படிப் பரமாத்மா நம்மைத் தம்மிடம் அழைத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் லோகத்துக்கும், அவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை வழுவில்லாமல் செய்யவேண்டும். இந்தக் கடமைகள்தாம் நமக்கான தர்மம். அதாவது உடம்பு உள்ளபோதும், உடம்பு போன பிற்பாடும் நன்மைப் பயப்பதே தர்மம். உடம்பு போனபின் கைகால் முதலிய அவயவங்கள் இல்லை. எனவே, உடம்பு இருக்கும்போதே அது போன பிற்பாடு நற்கதி பெற வேண்டியதற்கான தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும்.

நாம் போனபின் பிறர் நலனுக்காக ஆயுள் இன்ஷுரன்ஸ் செய்து கொள்வதைவிட இது முக்கியம். ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர இன்ஷுரன்ஸாக இருப்பது தர்மமே. இப்போது ஆயுள் இன்ஷுரன்ஸ் (life insurance) என்று ஒன்றைச் சொல்கிறார்கள்; தர்மமே ஆயுள் போனபிற்பாடும் நன்மை பயக்கிற after life insurance. ஆயுள் உள்ளபோதும் அதே தர்மம் சாந்தியும் சௌக்கியமும் தருகிறது.

எந்த தர்மத்தை நாம் அநுஷ்டிப்பது என்ற குழப்பமே வேண்டாம். பல காலமாகப் பெரியவர்கள் பரம்பரையாக அநுஷ்டித்து வந்த தர்மத்தில் நாம் ஊறியிருக்கிறோம். அநுபவத்தில் அவர்கள் நித்திய ஸெளக்கியத்தை அடைந்திருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் நாம் ஓயாத அதிருப்தியோடு கிளர்ச்சி, (Demonstration) என்று செய்கிற மாதிரி இல்லாமல், அவர்கள் நிம்மதியாக நிச்சிந்தையாக இருந்தார்கள் என்று நிச்சயமாகத் தெரிகிறது.

எனவே, அந்த தர்மத்தை நாம் கடைப்பிடித்தால் போதும். நாமாக ஒன்றைப் புதிதாகப் பண்ணிக் பிடித்துக்கொண்டால் வீண் சிரமம்தான். அது நல்லதாயிருக்குமா கெடுதலாயிருக்குமா என்று நமக்கே ஓயாத சந்தேகமாக இருக்கும். ஆதலினால் முன்பே பெரியவர்கள் அனுஷ்டித்து, நமக்கென்று ஏற்பட்டுள்ள தர்மத்தைக் கைக்கொள்வதே நல்லது. 

ஸ்ரீ ராமனுக்கு வனவாசத்தில் ஏற்பட்ட கஷ்டம், ஆபத்து எல்லாம் பெரியவை. ஊருக்குப் போகும் குழந்தைக்குத் தாயார் கட்டுச்சாதம் கொடுப்பதுபோல், ராமன் வனவாஸம் செல்லும்போது கௌஸல்யையும் செய்தாள். ‘பதினான்கு வருஷம் கெடாமலிருக்கும் பக்ஷணம் எது? குழந்தைக்கு எதைத் தரலாம்?’ என்று நிரம்ப ஆலோசித்தாள் கௌஸல்யை. பிறகு நிரந்தர பக்ஷணமான தர்மத்தைத்தான் கட்டிக் கொடுத்தாள்.

“ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே உன்னைப் பாதுகாக்கும்” என்று சொல்லித் தர்மத்தை ராகவனுக்குத் துணை அனுப்பினாள்.

யம் பாலயஸி தர்ம த்வம் த்ருத்யா ச நியமேன ச |
ஸ வை ராகவ சார்தூல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

தர்மமே இறுதியில் ராமனுக்கு ஜயத்தைப் பெற்றுத் தந்தது. தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகிவிடுவான் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. ஸ்ரீ ராமனை வானரங்களும் ஆதரித்தன. ராவணனையோ சகோதரன் விபீஷணனும் விட்டு விலகினான்.

தர்மமே தலை காக்கும். பத்துத் தலை ராவணன் விழுந்து நாசமாக, ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி விஜயராகவனாகத் தலை நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் தர்மம் தலைகாத்ததுதான். அவரவருக்கும் முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மமே ஒவ்வொரு மதமாயிருக்கிறது.

இந்த தர்மத்தை அவரவரும் தைரியமாக—நியாயமாக பின்பற்றிச் சாசுவத சௌக்கியத்தைப் பெறுவீர்களாக!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.