"இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்"
("இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா. வடக்கத்திக்காராளுக்கு தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா")
புது டெல்லியில் இர்வின் ரோடிலுள்ள 'ஹனுமான் மந்திரில்' ஒவ்வொரு செவ்வாய்க்- கிழமையும்,'மங்கள்'என்று கூறி பக்தர்கள் பெருந்திரளில் குழுமுவர். நீண்டு நிற்கும் 'க்யூ' வரிசையை மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை காணலாம்.ஆலயத்தின் நுழைவாயிலின் இருவசமும் மிட்டாய்க் கடைகள்.
பக்தர்கள் தொன்னைகளிலும், தட்டுகளிலும் லட்டு, பூந்தி,பேடா நிவேதிப்பதற்காக வாங்கிச் செல்வர். பண்டிட்ஜி, மணி ஒலித்து அர்ப்பணித்து நெற்றியில் சிந்தூரத் திலகமிடுவார். 'ஜெய்ராம்ஜி' என்ற த்வனி இரு செவிகளையும் நிறைக்கும்- குருவாயூரில் 'நாராயணா' உச்சாரணம் போல்.
ஒரு செவ்வாய்க்கிழமை மாலை ஹனுமான் மந்திரில் தரிசிக்கச் சென்றிருந்த நான் ஆஞ்சநேயருக்கு ஜிலேபி மாலை அணிவித்திருந்ததைப் பார்த்து வியப்புற்றேன்.
மறுநாள் சென்னை சேர்ந்து வழக்கம் போல் சின்னக் காஞ்சி சிவாஸ்தானம் போனேன். காஞ்சி மாமுனிவர்தரிசனம் நாடி..
ஸ்ரீ பெரியவாளிடம் வடைமாலைக்குப் பதில் அனுமனுக்கு ஜிலேபி மாலை சார்த்தியிருந்ததை விவரித்தேன்.
உடனே தவச்ரேஷ்டர் அத்வைத சிகரத்தை எட்டிவிட்டார்.
"இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்" என்ற அருள்வாக்கால்.
ஆம், இரண்டுக்கும் ஆதார மூலப்பொருள் உளுந்து மாவுதானே !
உடனேயே நமது நிலைக்கு இறங்கி வந்து,
"இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா. வடக்கத்திக்காராளுக்கு தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா" என்றார்கள்.
'என்னைக் காப்பாற்ற நீ நடந்து வந்தாயா ஸ்ரீ ராமா' என்று கசி(னி)ந்துருகினார் தியாகப்ரம்மம். (நனு பாலிம்ப நடசி வச்சிதிவோ) எங்களைக் காப்பாற்ற எழுந்து நடந்து வரவேண்டும் தயாநிதியே என்று எனது நம்முடைய பிரார்த்தனையுடன் இந்த நினைவு மலர்களை தவச்ரேஷ்டரின் பத்மபாதங்களில் அர்ச்சிக்கிறேன்.
சொன்னவர்; டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.