அதுவரை சராசரியான மனித வாழ்க்கை வாழ்ந்து வந்த மகாத்மா காந்தியின் வாழ்க்கையை அரிச்சந்திரன் கதை மாற்றி அமைத்ததுன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். அன்றிலிருந்து என்ன கஷ்டம் வந்தாலும் பொய் சொன்னதில்லைன்னும் சொல்வாங்க,... காந்தியடிகள் மனசு மாறினதுக்கு காரணமான அரிச்சந்திரன் உண்மையிலேயே பொய்யே சொன்னதில்லையா?
அரிச்சந்திரனும் குறிப்பிட்ட காலம் வரை சராசரி மனித வாழ்க்கையை வாழ்ந்தவர்ன்னு சொன்னால் ஏற்பது கஷ்டம்தான்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை வரும். அன்றிலிருந்து அவங்க வாழ்க்கை முறையே மாறிப்போயிடும். அரிச்சந்திரனின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட திருப்புமுனையைத்தான் பார்க்கப்போறோம். நமக்கு ஒருத்தங்க பிடிச்சு போயிட்டா அவுங்க புராணம்தான் பேசுவோம் . எல்லார்கிட்டயும் அவங்களை பத்தி ஆகோ ஓகோன்னு புகழ்ந்துக்கிட்டிருப்போம். அதுமாதிரிதான் வசிஷ்ட முனிவர், விஸ்வாமித்தர்கிட்ட "என் சீடனான அரிச்சந்திரன் உண்மையே பேசுபவன்.
ஒரு பொய்கூடக் கூறாதவன்"ன்னு பெருமையா சொன்னாரு. வசிஷ்டருக்கும், விஸ்வாமித்திரருக்கும் எப்பயுமே ஆகாது. இருவருக்குள் போட்டி அதிகம். அதனால், நான் அரிச்சந்திரனை பொய் பேச வைக்குறேன். அப்படி இல்லன்னா, என் தவ வலிமையை இழக்குறேன்னு சவால் விட்டார் விஸ்வாமித்திரர்.
அரிச்சந்திரனின் அரண்மனைக்கு வந்த விஸ்வாமித்திரர், பெரிய காட்டு பன்றியாய் அரக்கனை தன்னோட தவ வலிமையால் மாற்றி, அரிச்சந்திரனின் அரண்மனை நந்தவனத்துக்குள் அனுப்பினார். அந்த காட்டுப்பன்றி செடியெல்லாம் பிடுங்கி போட்டு மரத்தை உலுக்கி நந்தவனத்தை பாழ்படுத்தியது. அங்கிருந்த காவல் காக்கும் வீரர்கள் எத்தனை முயற்சி செய்தும் காட்டு பன்றியோட அட்டகாசத்தை அடக்க முடியலை. இந்த சேதி அரிச்சந்திரனுக்கு போச்சு. வில், அம்பினை ஏந்தி ஓடோடி வந்த அரிச்சந்திரன் காட்டு பன்றியை துரத்த ஆரம்பிக்க காட்டு பன்றி அரண்மனையை விட்டு வெளியே ஓடியது. அதை துரத்தியபடியே வந்த அரிச்சந்திரன் அரண்மைனையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டான். காட்டு பன்றி காட்டுக்குள் ஓடி மறைந்தது. அரிச்சந்திரன் களைப்புற்றான்.
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாமேன்னு பக்கத்தில் இருந்த சுணை நீரை குடிச்சுட்டு, அருகிலிருந்த பாறைமேல படுத்து தூங்கிவிட்டார். அங்கே வந்த வயசான பிராமணர் ஒருவர் விஸ்வாமித்திரரிடம் பேச்சு கொடுத்தார். அரிச்சந்திரன் தான் இந்த நாட்டின் அரசன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
தனக்கு தெரிந்த மன்னனுக்கான தர்ம சாஸ்திரத்தினை சொல்ல ஆரம்பித்தார் அந்த பிராமணர். இந்த அத்துவான காட்டில் இப்படியொடு ஞானியா என வியந்தபடியே, அவரைப்பற்றி மேலும் விசாரித்தான். பிராமணரும் தன்னைப்பற்றி சொல்லி, தனக்கு ஒரு மகன் இருக்குறதாகவும், அவனுக்கு கல்யாண வயசு வந்தும் கல்யாணம் முடிக்கலை. காரணம் திருமணத்திற்கு தேவையானவற்றை வாங்க தன்னிடம் பணமில்லைன்னு பிராமணர் அரிச்சந்திரனிடம் சொல்லி வருத்தப்பட்டார்.
நாளைக்கு அரசவைக்கு வாருங்கள். உங்கள் மகன் திருமணத்திற்கு தேவையானதை தருகிறேன் என சொல்லிவிட்டு அரண்மனைக்கு வந்துவிட்டான். மறுநாள் அரசவைக்கு வந்த பிராமணர், தனக்கு அரிச்சந்திரன் அளித்த வாக்கினை நினைவுப்படுத்தினார். உங்கள் மகன் திருமணத்தை தேவையானது என்ன எனக்கேட்க, எனக்கு உன் நாடு, உன் அரண்மனை எல்லாம் வேண்டும் என பிராமணர் கேட்க, அரிச்சந்திரன் சற்றும் தயங்காமல் அவர் கேட்டதை எல்லாம் தானமளித்து விட்டார். அந்த பிராமணர் வேறு யாருமில்லை;
விஸ்வாமித்ரர்தான். தானம் பெற்றபின் அவர் அரிச்சந்திரனிடம், "மன்னா! நீ சொன்னப்டி நான் கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டாய். ஆனால் தானமளித்தபின் தட்சிணை கொடுக்க வேண்டுமே.. அதையும் கொடு" என்றார். தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட அரிச்சந்திரனிடம் கொடுப்பதற்கென ஒற்றை நயாப்பைசா இல்லை. ஆனாலு, அவர் கேட்கும் தட்சிணையைக் கொடுப்பதாகவும் ஆனால் அதற்கு சிறிது அவகாசம் கொடுக்கும்படியும் வேண்டினான்.
தன் மனைவி சந்திரமதியையும் மகன் லோகிதாசனையும் அழைத்துக்கொண்டு புன்னிய நகரான காசிக்கு வந்தான். அங்கு வந்த விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனிடம், "ஏன் இவ்வளவு சிரமப்படுகிறாய்? தட்சிணை கொடுக்க இயலாது என சொல்லியிருக்கலாமே" என விஸ்வாமித்திரர் கேட்க, அதற்கு அவன், "நான் சொன்ன சொல் தவறாதவன்.
எப்பாடுபட்டாவது தங்களுக்கு தட்சிணை கொடுத்துவிடுகிறேன்" பதில் சொன்னான். ஒரு பெரிய பணக்காரர்கிட்ட மனைவியையும் மகனையும் அடிமைகளாக விற்றும், தன்னையே ஒரு மயான அதிகாரியிடம் விற்றும் அந்த பணத்தை விஸ்வாமித்திரருக்கு தட்சிணையாகக் கொடுத்தான்.
ராஜக்குடும்பத்தில் பிறந்து , வாழ்ந்த அரிச்சந்திரனின் மனைவியும் மகனும் அந்த செல்வந்தரின் வீட்டு வேலைகளை செய்ய ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அரிச்சந்திரனோ மயானத்தைக் காவல் காப்பதும் அங்கு எடுத்து வரப்படும் பிணங்களை எரிப்பது, பிணங்களை எரிக்கக் கட்டணம் வசூலிப்பதுன்னு தனக்கிட்ட வேலைகளை செய்து வந்தான். ஒருநாள் லோகிதாசன் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்துவிட்டான். துக்கம் தாங்காமல் அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்துபோன தன் மகனின் உடலை எரிக்க மயானத்திற்குக் கொண்டு சென்றாள்.
அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த அரிச்சந்திரன் அவளிடம் பிணத்தை எரிக்க பணம் கேட்டான். தன்னிடம் பணம் இல்லைன்னு சொல்லி சந்திரமதி அழுதாள் அவன் மனைவி. உன் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை கழட்டிகொடு என்றான் அரிச்சந்திரன்.
சந்திரமதி பிறக்கும்போதே தாலியுடன் பிறந்தாள். அதைக்கண்டு திடுக்கிட்ட அவளது பெற்றோர். சந்திரமதியினை கணவனுக்கு மட்டுமே அந்த தாலி தெரியும். அதனால் அவளது விவாகத்தில் எந்தவொரு வில்லங்கமும் வராது என அசரீரி ஒலித்தது. அதன்படி யார் கண்ணிலும் அந்த தாலி தென்பட்டதில்லை.. சந்திரமதியின் சுயம்வரத்தின்போதுதான் அந்த தாலி அரிச்சந்திரன் கண்ணில் பட்டது அசரீரி சொன்னதுபோல சந்திரமதியின் கணவன் அரிச்சந்திரன் என அவருக்கே கட்டி வைத்தனர்.
அதன்பின்னரும் அரிச்சந்திரன் தவிர யார் கண்ணுக்கும் அந்த தாலி தென்பட்டதில்லை. இப்போது எதிரிலிருப்பவனுக்கு தாலி தெரிகிறதென்றால் அவர்தான் அரிச்சந்திரன், தன் கணவன் என்று உணர்ந்து, தான் யாரெனவும், இறந்தது தங்கள் மகன் எனவும் சொல்லி சந்திரமதி அழுதாள். அப்போதுதான் எதிரிலிருப்பது தன் மனைவி என்றும் இறந்தது தன் மகன் என்பதையும் உணர்ந்த அரிச்சந்திரன், தன் கடமையிலிருந்து தவறாமல் வாய்க்கரிசிக்காக படி அரிசியும், எரிக்க கட்டணத்தையும் கொடுத்தால்தான் லோகிதாசனின் இறுதிச்சடங்கு நடக்கும் என உறுதியாய் கூறினான்.
சந்திரமதி ஊருக்குள் சென்று படாதபாடுபட்டு அரிசியும் பணமும் கொண்டு வந்தாள். அதை பெற்றுக்கொண்ட அரிச்சந்திரன் சுடுகாட்டு அதிகாரியிடம் கொடுத்துவிட்டு வந்து லோகிதாசனை எரித்தான். லோகிதாசனை எரிக்கும் நெருப்பிலேயே விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வது என்று இருவரும் முடிவு செய்து சந்திரமதியும், அரிச்சந்திரனும் நெருப்பில் இறங்கினர்.
அப்போது மின்னலுடன் கூடிய பேரிடி கேட்டது. மறுகணமே லோகிதாசன் உயிர் பெற்றெழுந்தான். அப்போது விஸ்வாமித்ரர், வசிஷ்டர், இந்திரன் முதலான தேவர்களுடன் வந்து, "அரிச்சந்திரா! பொய் பேசுவதில்லை என்ற உன் கொள்கை சோதிக்கவே நான் உன் நாட்டை வாங்கினேன். உன் கொள்கையை உறுதியுடன் பின்பற்றினாய். உன் வாழ்வில் மிகுந்த சோதனைகளை சந்தித்தபோதும் அதனை நீ கைவிடவில்லை. உன் புகழ் இவ்வுலகில் என்றென்றும் ஓங்கி நிற்கும்" என்று வாழ்த்தி அவன் நாட்டை அவனிடமே ஒப்படைத்தார்.
இந்த கதை நம்ம எல்லாருக்குமே தெரியும். இந்த பதிவு அரிச்சந்திரன் மாறினது எப்படின்னு பத்தியது. இனி அதை பற்றி பார்க்கலாம்..
ராமர் பிறந்த அதே சூரிய வம்சத்தில் 15வதாக அதாவது ராமருக்கும் முன்னாடியே பிறந்தவதான் இந்த அரிச்சந்திரன். ராமர் 30-வதாக பிறந்தாராம். சுயம்வரத்தில் சந்திரமதியை திருமணம் முடித்தபின் அரிச்சந்திரனுக்குப்பின் நாடாள வாரிசு உண்டாகவில்லை. ராஜகுரு சொல்லியபடி வருணபகவானை நோக்கி கடுந்தவம் செய்கிறான் அரிச்சந்திரன். அவனின் தவத்தின் பலனை தர முடிவு செய்த அரிச்சந்திரன்முன் வருணபகவான் தோன்றி, உனக்கு பிள்ளைவரம் தருகிறேன்.,
ஆனால், உன் முதல் குழந்தையை என் யாகத்திற்கு பலி கொடுக்க வேண்டுமென சொல்ல, குழந்தை இல்லையென்ற கேலிப்பேச்சுக்கு இது எவ்வளவோ மேல் என எண்ணிய அரிச்சந்திரன் வருணபகவானின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டான்.
சந்திரமதி கருவுற்றாள். லோகிதாசன் பிறந்தான். குழந்தையின் அழகில் மயங்கியும் புத்திர பாசத்தாலும் அரிச்சந்திரன் கொடுத்த வாக்கை மறந்தான். வாக்களித்தவர் மறந்திடலாம். ஆனா, நிபந்தனை விதித்தவர் மறப்பாரா?! வருணபகவான் ஓடோடி வந்தார். பிள்ளை பிறந்த தீட்டுக்கூட கழிக்கவில்லை. இப்போது எப்படி பலி கொடுப்பது என அரிச்சந்திரன் கேட்க, அவன் கேள்வியிலிருந்த நியாயம் வருண பகவானை திருப்பி அனுப்பியது.
தீட்டு கழிக்கப்பட்டது. ஒருமாதம் கழித்து வருண பகவான் வந்தார்,. குழந்தை பால் குடிக்கிறது. குழந்தை இல்லாவிட்டால் சந்திரமதிக்கு பால் கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவாள் என்று தயங்க, ஒரு தாயை ஏன் தவிக்க விடவேண்டும் என வருண பகவான் சென்றுவிட்டா,ர். ஒரு வருடங்கழித்து வருணபகவான் வர, ஐயா! பிள்ளைக்கு காதுகூட குத்தவில்லை. மனிதனாய் பிறந்தவனுக்கு காது குத்தவேண்டும். இல்லாவிட்டால் அவனுக்கு சொர்க்கத்தின் வாசல்கதவு திறக்காது. இது நீங்கள் அறியாததா? என்றான். வருண பகவான் திரும்பி சென்றான். இப்படியே 11 வருடங்கள் ஓடியது.
கடுங்கோபம் கொண்ட வருணபகவான் சாபம் விட அரிச்சந்திரன் அளித்த வாக்கு லோகிதாசனுக்கு தெரியவர, எப்படியும் தன்னை யாகத்தில் பலி கொடுப்பாங்கன்னு எண்ணி, அரண்மனையைவிட்டு ஓடிப்போனான். எந்த பிள்ளைக்காக வருணபகவானை அலைக்கழித்தானோ அந்த பிள்ளை இல்லாமல் மிகுந்த துன்பம் அனுபவித்தான். தன் மகனை காணாமல் பித்து பிடித்தாற்போல காடுமேடு என அலைந்து மகனை தேடினான்.
குலகுரு வசிஷ்டரின் அருளால் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றதோடு, அன்றிலிருந்து கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன், பொய் சொல்லமாட்டேன் என உறுதி கொள்வதோடு வாழ்ந்தும் காட்டி பொய் பேசாதவன் என்ற நல்ல பேரையும் பெற்றான்.
இத்தோடு பதிவை முடிச்சுக்கலாம்ன்னு நினைச்சா, இன்றைய பிள்ளைகள்கிட்ட இந்த கதையை சொன்னால், பல கேள்வி கேட்கும். அரசன் என்பவன் தன்னிச்சையாய் முடிவெடுக்க முடியாது. மந்திரிமார்களை கலந்துதான் முடிவெடுக்கனும். மந்திரிங்க, மக்கள்கிட்ட அரிச்சந்திரன் கேட்டானா? அதேப்போல குடும்பத்தலைவனும் தன்னிச்சையாய் முடிவெடுக்க முடியாது,
பொண்டாட்டி புள்ளைக்கிட்ட நாடு கொடுக்கலாமான்னு கேட்டானா?! இன்னிக்கு மாதிரி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கவில்லை அதனால் கேட்கவேண்டிய அவசியமில்லைன்னே வச்சிக்கிடலாம். நாட்டை கொடுத்தாச்சு கையில் நயா பைசா இல்ல. அப்படி இருக்க, காணிக்கை காசு கேட்கும்போது என்கிட்ட எதுவும் இல்லைன்னு சொல்லலாமே! அது உண்மையும்கூட.. அந்த உண்மையை சொல்லி இருக்கலாமே! ஓ! அப்படி சொல்லி இருந்தால் அரிச்சந்திரன் கதையே வந்திருக்காதோ!?
பொண்டாட்டி, புள்ளையோடு சேர்ந்து வேலை செஞ்சு காணிக்கை கொடுத்திருக்கலாமே..அதைவிட்டு பொண்டாட்டி புள்ளைகளை ஏன் விக்கனும்? அப்படி விக்க அவங்க என்ன வீட்டில் இருக்கும் சட்டி பானையா?! தர்ம நெறி தவறக்கூடாதுன்னு முடிவெடுத்த அரிச்சந்திரனுக்கு பொண்டாட்டி, புள்ளையை எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாதுன்ற தர்ம சாஸ்திரம் தெரியாம போனது ஏன்?
அரிச்சந்தரின் கதை முழுக்க சுயநலத்தை காக்க அரிச்சந்திரன் போராடியதைதான் எடுத்துக்காட்டுது. இதில் பொது நலம் ஏதுமில்லை. நாட்டை இன்னொருத்தன்கிட்ட கொடுக்கிறோமே.. நாட்டு மக்கள் கதி என்ன?! நாட்டு பாதுகாப்பு எப்படின்னு யோசிக்கவில்லை. பொண்டாட்டியை இன்னொருத்தன்கிட்ட விக்கிறோமே அவளுக்கு பாதுகாப்பு என்ன?
பிள்ளையின் எதிர்காலம் என்னாகும்ன்னு எதுவும் யோசிக்கலை.. தன்னோட ஈகோவை காப்பாத்திக்க, செய்யக்கூடாத காரியத்தைலாம் செய்துட்டு 'நான் வாக்கை காப்பாற்றி விட்டேன்..பொய் பேசவே இல்லை'ன்னு பெருமைப்படுவதில் என்ன நியாயம்?! இதுக்கு, அந்த பிராமணருக்கு நான் திருமணத்தை நடத்த தேவையானதை கொடுக்கிறேன்னுதான் சொன்னேனே தவிர நாட்டை கொடுக்குறேன்னு சொல்லலைன்னு ஓங்கி உண்மையை பேசி வாதிட்டிருக்கலாம்.. ஏன்னா,...
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லன்னு நாயகன் படத்துல கமலும், பிறருக்கு நல்லது நடக்கும்ன்னா பொய் சொல்லலாம்ன்னு திருவள்ளுவரும் சொல்லி இருக்கார்... அதனால் அடுத்தவங்களை பாதிக்கும்ன்னா கொடுத்த வாக்கை மீறுவதில் தப்பில்லை..