Breaking News :

Tuesday, December 03
.

"Generation Gap என்கிறார்களே, அது என்ன?"


(கேள்வி கேட்டு விளக்கமளித்த பெரியாவாளின் பதில்
உடனிருந்த ஆங்கிலம் மெத்தப் படித்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.)

கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள் தங்கியிருந்த சமயம். நான் என் குடும்பத்தாருடன் தரிசனத்துக்குச் சென்றிருந்தேன்.

பெரியவாளை என் தந்தை நமஸ்கரித்தபோது,
"இவர்,ஹூப்ளி ராமஸ்வாமியின் தகப்பனார்"  என்று அணுக்கத் தொண்டர் தெரியப்படுத்தினார்.

(நான் அப்போது ஹூப்ளி ரயில்வே டிவிஷனில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததால், 'ஹூப்ளி ராமஸ்வாமி' என்று ஸ்ரீமடம் பணியாளர்கள் பட்டம்  சூட்டியிருந்தார்கள்.!)

"உன் பெயர், நாராயணன் தானே?" என்று பெரியவா கேட்டதும், "ஆமாம்" என்றார், என் தந்தை.

பின்னர் நான் நமஸ்காரம் செய்தேன் .அப்போது அதே தொண்டர், "சாமிநாதனின் (மகன்) அப்பா"  என்று கூறி அறிமுகப்படுத்தினார்.

வழக்கமான விசாரணைகள்,கேள்வி-பதில்கள், சொந்த ஊர் பற்றிய தகவல்கள். ப த்து நிமிஷமாயிற்று.
பெரியவா என்னைப் பார்த்து,  " நீதான் பெரிய லேபர் ஆபீஸராச்சே?  Generation Gap என்கிறார்களே, அது என்ன?" என்று சற்றுப் புன்முறுவலுடன் கேட்டார்கள்.

நான் ஏதேதோ சொன்னேன். நான் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்பது எனக்கே புரிந்துதான் இருந்தது. ஒரு வழியாக நான் பேசி முடித்தவுடன்,
அந்த மகான் சொன்னார்,

"பழைய காலத்தில் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது - இன்னார் பையன் இவன் என்பார்கள்.பூணூல் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அபிவாதயே என்று தொடங்கி, தங்கள் கோத்ரம் - ஸூத்ரம் - நாமம் எல்லாம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

இப்போ,மாறிடுத்து,பார் -  இவர், இன்னாருடைய அப்பா என்று சொல்ற தலைகீழ் நிலை வந்திருக்கு,
இதுதான் Generation gap!" என்றார்கள்.

உடனிருந்த ஆங்கிலம் மெத்தப் படித்தவர்களையும் பெரியவாளின் விளக்கம் ஆச்சரியத்தில்  ஆழ்த்தியது.

சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.