Breaking News :

Monday, May 20
.

எதற்கப்பா ஆடம்பரம்? : காஞ்சி மகான் பெரியவா


சுபநிகழ்ச்சிகளில் ஆடம்பரத்தைக் குறையுங்கள். அந்தப் பணத்தில் நாலு பேருக்கு உதவுங்கள்  

 

காஞ்சி மகாபெரியவருக்கு ஆடம்பரம் என்றாலே பிடிக்காது. திருமணங்கள், உபநயனங்கள் ஆடம்பரமாக நடப்பதைப் பார்த்து மிகவும் வேதனை அடைவார். வரதட்சணை வாங்குவதைத் திருட்டுக்குச் சமானம் என்று சொல்லியிருக்கிறார்.

 

ஒருசமயம் காஞ்சிபுரம் அருகிலுள்ள ஓரிக்கை பாலாற்றங்கரையில் முகாமிட்டிருந்தார். அப்போது சுந்தரராமன் என்ற இளைஞர் வந்தார். அவர் பெரியவரைத் தரிசிக்க அடிக்கடி வருபவர். அவரது மார்பில் பூணூல் இல்லை.

 

""ஏனப்பா! உனக்கு இன்னும் உபநயனம்(பூணூல் அணியும் சடங்கு) நடக்கலையா?'' என்றார்.

 

""இல்லை சுவாமி! என்னோட அப்பா, கொஞ்சம் பணம் காசு சேர்ந்ததும் வச்சுக்கலாமுனு சொல்லிட்டார்,'' என்றார் சுந்தரராமன்.

 

""சரியாப் போச்சு! இப்ப இருக்கிறவாகிட்டே இதுதான் எனக்கு பிடிக்கலே! சாதாரண உபநயனத்தைக் கூடவா சொந்த பந்தங்களை வரவழைச்சு ஆடம்பரமா நடத்தணும்,'' என்று சொல்லிக் கொண்டிருந்த போது, சற்றுஆவேசமடைந்தவராக,

 

""நீ என் முன்னால் வெற்று உடம்போட நிக்கிறே(பூணூல் அணியாமல் நிற்பது). உடனே போய் உன் அப்பாவை அழைச்சுட்டு வா. கையோட பஞ்சாங்கமும் எடுத்துட்டு வா!'' என்றார்.

 

சுந்தரராமனும் தந்தையுடன் அங்கு வந்தார். பஞ்சாங்கம் பார்த்து ஒரு நல்லநாள் குறித்த பெரியவர் சுந்தரராமனின் தந்தையிடம்,

 

""நம்மவா கல்யாணத்துக்கு முதல்நாள் வரைக்கும் பூணூல் சடங்கை நடத்தாம விட்டுடுறா! நீ அப்படி இருக்கக்கூடாது. மடத்திலே இருக்கிற மாட்டுத்தொழுவத்திலே உன் மகனுக்கு பூணூல் சடங்கை நடத்து. சொந்த பந்தத்தை கூப்பிட நேரமில்லேன்னெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. இதை நடத்துறதுக்கு பெத்தவங்க மட்டும் பையனோடு கூட இருந்தால் போதும். அதற்கு வேண்டிய முன்னேற்பாடு செய்துக்கோ,'' என்றார்.

 

அவர் சொன்னபடியே மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக பூணூல் சடங்கு நடந்து கொண்டிருந்தது. சொந்தக்காரர்கள் யாரும் வரவில்லை. புதிய துணி கூட எடுக்கவில்லை.

 

அப்போது லட்சணமான ஒரு அம்மையார் தன் கணவருடன் வந்தார். அவர்கள் கையில் மூங்கில் கூடை இருந்தது. அவர்கள் முன்னால் நாதஸ்வர வித்வான்கள் வாசித்தபடி நின்றார்கள்.

 

அவர்கள்,""நேற்று சாயந்தரம் இங்கே வந்து பெரியவரைத் தரிசித்தோம். அவருக்கு வேண்டப்பட்ட பையனுக்கு பிரம்மோபதேசம்(பூணூல் சடங்கு) என்று கேள்விப்பட்டோம்,'' என்றவர்கள் தங்கள் கையிலிருந்த புது வேட்டி, இதர துணிமணிகள், பழங்கள், பூ, கரும்பு எல்லாம் கொடுத்து நிகழ்ச்சி முடிகிற வரை அமர்ந்திருந்தார்கள்.

 

பக்கத்து ஹாலில் மகாபெரியவர், தான் வழக்கமாக பூஜிக்கும் சந்திர மவுலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், உபநயனம் செய்த இளைஞருக்கு ஒரு பழத்தை பிரசாதமாகக் கொடுத்தார்.

 

அத்துடன் பொது சமாராதனை கூடத்திற்கு (அன்னதானக் கூடம்) சென்று அவர்களைச் சாப்பிடச் சொன்னார்.

 

இனியாவது சுபநிகழ்ச்சிகளில் ஆடம்பரத்தைக் குறையுங்கள். அந்தப் பணத்தில் நாலு பேருக்கு உதவுங்கள்.

 

நன்றி-தினமலர் 24-02-2015

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.