Breaking News :

Saturday, December 14
.

"சந்திரமௌலி யார்?’-உணர்த்திய காஞ்சி மகான்!


( எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’

( கொன்றை மலர்கள்) என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்).

(பெரியவா அருள் பெற்ற ரா.கணபதிஅண்ணா! & வேதா டி.ஸ்ரீதரன்-எழுதியது)பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

காஞ்சியில் அபீத் என்றொரு பையன் வசித்து வந்தான். பிறப்பால் அவன் ஒரு முஸ்லிம். இருந்தாலும், அவனுக்கு மகா பெரியவா மீது அளவு கடந்த அன்பு. மடத்தில் நடைபெறும் சந்திர மௌலீச்வர பூஜைக்காக அவன் ஆர்வத்துடன் கொன்றை மலர்கள் பறித்து வந்து கொடுப்பான். இதனால் மடத்தைச் சேர்ந்த அன்பர்கள் அவனை 'கொன்னை அபீத்' என்றே அழைப்பார்கள்.

மகா பெரியவா அவ்வப்போது அவனுக்குப் பழங்களும் கல்கண்டும் தந்து ஆசீர்வதிப்பார். பிறப்பால் முஸ்லிமான அவன் பிற தெய்வங்களின் பிரசாதத்தை ஏற்பது தவறு. எனவே, பெரியவா அவனுக்கு ஒருபோதும் பூஜைப் பிரசாதங்கள் கொடுக்க மாட்டார்.

இந்நிலையில் கொன்னை அபீத்தின் தந்தைக்கு இடமாறுதல் உத்தரவு வந்தது. அவர்கள் குடும்பம் காஞ்சியை விட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை. இனிமேல் மடத்துப் பூஜைக்குப் பூக்கள் பறித்துத் தர முடியாது என்ற வருத்தம் அபீத்தை வாட்டியது.

ஊரை விட்டுக் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. வழக்கம்போல அன்றைய தினமும் மலர்களைப் பறித்துப் பூக்குடலையில் எடுத்துக்கொண்டு மடத்துக்கு வந்தான் அபீத். எப்படியாவது பெரியவாளை நேரில் பார்த்து, ஊரை விட்டுக் கிளம்பும் செய்தியை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது அவனது ஆசை.

ஆனால் பாவம், அவனால் அன்று மடத்துக்குள் நுழைய முடியவில்லை. காரணம், மடத்தில் ஒரு வித்வத் ஸதஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரியவாளைத் தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சின்னஞ்சிறுவனான அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இப்படியே சில நிமிடங்கள் நகர்ந்தன.

ஸதஸில் அமர்ந்திருந்த பெரியவா திடீரென மடத்து ஊழியர் ஒருவரை அழைத்து, ''ஸதஸில் பங்குபெறும் அனைவரையும் வழிவிட்டு உட்காரச் சொல்லு. வாசலில் பூக்குடலையுடன் ஒரு பையன் நின்று கொண்டிருக்கிறான். அவனை உள்ளே வரச்சொல்லு'' என்று உத்தரவிட்டார்.

ஸதஸில் அமர்ந்திருந்தவர்கள் நகர்ந்து அமர, சபையின் நடுவே நடைபாதை உருவானது. வெளியே பூக்குடலையுடன் நின்று கொண்டிருந்த அபீத்திடம் வந்த ஊழியர் அவனைப் பெரியவா அழைப்பதாகத் தெரிவித்தார். மிகுந்த கூச்சத்துடன் மடத்தின் உள்ளே நுழைந்த அபீத், பூக்குடலையைப் பெரியவா பக்கத்தில் வைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றான்.

கருணையே வடிவெடுத்த பெரியவாளின் கண்கள் கொன்னை அபீத்தின்மீது பதிந்தன. மெதுவாகப் பூக்குடலைக்குள் கையை விட்ட பெரியவா கைநிறையப் பூக்களை அள்ளினார்.அபீத்தைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே, ''எனக்கோசரம்தானே கொண்டு வந்தே (எனக்காகத்தானே கொண்டுவந்தாய்)!'' என்று சொல்லியவாறே அந்தப் பூக்களைத் தனது தலைமீது அபிஷேகம் செய்துகொண்டார். ஸதஸில் இருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, பெரியவாளோ மீண்டும் மீண்டும் ‘எனக்கோசரம்தானே கொண்டு வந்தே’ என்று சொல்லிப் பூக்களை அள்ளி அள்ளி, தலையில் சொரிந்து கொண்டார்.

மிதமிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கி்ல் இருந்த அபீத்தின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. சபையெங்கும் ஹரஹர சங்கர ஜயஜய சங்கர கோஷம் ஒலித்தது.

நடமாடும் தெய்வமான மகாபெரியவா தன் நூறாண்டு ஜீவிதத்தில், அன்பர்களுக்கு எத்தனை எத்தனையோ விதங்களில் அனுக்கிரகம் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நூல்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. வெளிவராதவை ஏராளம்.ஆனாலும், மகா பெரியவா கொன்றை மலர்களைத் தனது தலை வழியே அபிஷேகம் செய்துகொண்ட இந்தச் சம்பவம் மிகவும் விதிவிலக்கான ஒன்று. இது பெரியவாளின் இயல்புக்கு விரோதமான சம்பவம் என்பதுதான் இதன் விசேஷம்.காஞ்சியம்பதியில் பீடாதிபதியாக வீற்றிருந்த பெரியவா சாக்ஷாத் அந்தக் கைலாசபதியேதான் என்பதில் பக்தர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், மகா பெரியவா தன்னை எப்போதாவது அவதார புருஷர் என்று சொல்லிக் கொண்டதுண்டா? ''இல்லவே இல்லை'' என்பதே உண்மை.சாமானியன், பாமரன், பாமர பாமரமானவன், அல்பசக்தன் முதலியவைதான் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவதற்குப் பெரியவா அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகள். ஞானமே வடிவெடுத்த அந்த பரப்பிரம்மம், தன்னை அஞ்ஞானத்தின் மொத்த வடிவம் என்றே அழைத்துக்கொண்டது. மானுட வேடம் தாங்கி வந்த சங்கரன் இவர் என்று அன்பர்கள் அவர் பாதத்தில் விழுந்து வணங்கினால், அவரோ, தனக்குப் பணிவும் இல்லை, பக்தியும் இல்லை என்றே எப்போதும் குறைப்பட்டுக் கொண்டார்.

முட்டாள்களில் எல்லாம் பெரிய முட்டாள் என்று அவர் தன்னை வர்ணித்துக் கொண்டதுண்டு. ஆச்சார்யாள் பெயரைச் சொல்லி காலட்சேபம் செய்து வயிறு வளர்த்து வருபவன் நான் என்று குறிப்பிட்டதும் உண்டு.

இதுவாவது பரவாயில்லை. அக்னியே திரண்டெழுந்து மானுட தேகம் தரித்ததோ எனும் அளவு தூய வாழ்க்கை வாழ்ந்த அந்தத் துறவியர் திலகம் தனக்குத் தூய்மை இல்லை, ஞானம் இல்லை என்றே குறைப்பட்டுக் கொண்டது. தனக்குத் தபஸ் இல்லை, அனுஷ்டானம் குறைவு என்றும் அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்.

வேத தர்மத்துக்கே அதாரிடியாகத் திகழ்ந்த அவர் தனது கருத்து என்று எதையும் முன்வைத்தது இல்லை.

முன்னோர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் நடப்பதும், மற்றவர்களை அந்தப் பாதையில் நடக்கஊக்குவிப்பதும்
தான் தனது பணி என்றே அவர் சொல்லி வந்தார்.

பெரியவாளின் அவதார சக்தியைத் திரை போட்டு மறைக்க முடியாது. அவரது அன்பும் அருளும் அளப்பரிய அவதார சக்தியும் அன்பர்களின் நெஞ்சில் நிறைந்திருப்பவை. அதேநேரத்தில் பெரியவா தனது அவதார உண்மையைத் திரை போட்டு மறைத்தே வைத்திருந்தார் என்பது பரம சத்தியம். அவர் தன்னை பகவத் அம்சம் கொண்டவராகஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை.


ஆனாலும், எப்போதாவது விதிவிலக்கான ஒருசில சூழ்நிலைகளில் தன்னையறியாமல் அவர் தனது அவதார ரகசியத்தை வெளியிட்டதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் இந்தச் சம்பவம்.
கொன்றை மலர் சிவபெருமானுக்கு உகந்தது. தனது தலைமீது கொன்றை அணிந்தவன் என்பது சிவனைப் பற்றிய வர்ணனைகளில்அடிக்கடி இடம்பெறுவது.

பரப்பிரம்மமான அவனது இருப்பை (சத்தியம்) விளக்குவதே கொன்றை மலர் என்பது ஆன்றோர் வாக்கு. கொன்றை மலரால் சிவனை வழிபடுவது பொன்மலரால் அர்ச்சனை செய்வதற்குச் சமம் என்பார்கள். அதனால்தான் கொன்றை மலரை சொர்ண புஷ்பம் என்றும் சொல்வதுண்டு. அபீத் கொண்டு வந்ததும் கொன்றை மலர்தான்.

சந்திரமெளலீச்வர பூஜைக்காக பறித்துவரப்பட்ட மலர்கள் அவை.

மடத்து ஆசாரங்களில், குறிப்பாக, பூஜை விஷயங்களில், மகா பெரியவா எள்ளளவும் விதிமீறிச் செயல்பட்டதே இல்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அன்றைய தினம் மகாபெரியவா, மடத்து பூஜைக்கான புஷ்பங்களை எடுத்துத் தனது தலை மீது அபிஷேகம் செய்துகொண்டார்.

அதுமட்டுமல்ல, சந்திர மௌலீச்வர பூஜைக்கான புஷ்பங்களைத் தனக்கானவை என்று சொன்னார் மகா பெரியவா. ''எனக்கோசரம்தானே கொண்டு வந்தே எனக்கோசரம்தானே கொண்டு வந்தே'’என்று அவர் திரும்பத் திரும்பக் கூறியது இன்னும் விசேஷம்.
இந்தச் சம்பவத்தை எனக்குக் கூறியவர்...

ஶ்ரீ. ரா. கணபதி (அண்ணா) அவர்கள்.

''பெரியவா மீது எனக்கு பக்தி இருப்பதாக நான் சொல்லிக் கொள்கிறேன். என்னைப்போல் எத்தனையோ பேர் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால், எங்கள் யாரிடமும் பெரியவா தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. ஆனால், அந்தச் சிறுபையன் அபீத்திடம் அன்று பெரியவா மிகவும் ஸ்பஷ்டமாக, தனது அவதார ரகசியத்தை வெளிப்படுத்திக் கொண்டார். சந்திர மௌலீச்வரருக்கான புஷ்பத்தைத் தனது தலையில் சொரிந்துகொண்டு, ‘எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’ என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அந்தப் பையனின் பக்திக்கு ஈடு இணையே கிடையாது என்று குறிப்பிட்டார்    

Jaya Jaya Shankara Hare Hare Shankara

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.