சம காலத்தில் வாழ்கிற திரை ஆளுமைகளுக்கு இன்றைய இளைய தலைமுறையினர் ரசிகர்களாக இருப்பது இயல்பான ஒன்று. ஆனால் மறைந்து 50 ஆண்டுகள் கடந்தும், தொடர்ந்து அந்த அந்த காலக்கட்டத்தின் இளைஞர் கூட்டத்தின் ஆதர்ஷ நாயகனாக ஒருவர் அடையாளப்பட்டுக்கொண்டே வருகிற மேஜிக்கையும், இயல்பு என்கிற வரையறைக்குள்ளாகவா வைக்க இயலும்? புரூஸ் லீ வரயறைகளைக் கடந்த ஆச்சரியம்!
நிழலில் மட்டும் சாகச நாயகன்களாக இருக்கும் பெரும்பான்மைகள் போல அல்லாமல், நிழல்தான் நிஜமும், நிஜத்தைத்தான் நிழலாகவும் காட்டினார் என்கிற இடத்தில்தான், தலைமுறை கடந்தாலும் சிரஞ்சீவித்தன்மை குறையாமல் ”நீ என்ன பெரிய புரூஸ்லியா?” என்று கேட்கும் அளவிற்கு, வீரம் சார்ந்த இடங்களில் இன்றும் உதாரண மனிதனாக இருந்து கொண்டே இருக்கிறார் புரூஸ் லீ!
ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை முறையில், முட்டி மோதி பட்டுத்தெளிந்து, வாழ்க்கை என்றால் என்ன என்கிற ஆரம்பப் புரிதலை அவன் எட்டுவதற்கே முப்பது வயது ஆகிவிடும். ஆனால், புரூஸ் லீயோ, அதே முப்பது வயதிற்குள்ளாகவே அவமானம், புறக்கணிப்பு, அடையாளச் சிக்கல் என பல தடைகளைச் சந்தித்து, அவற்றையெல்லாம், தன் திறமை, விடா முயற்சி, உழைப்பால் அடித்து நொறுக்கி, தன்னுடைய பெயரையே உலகின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டியவர்.
லீ கோய்ன் என்கிற சீன தந்தைக்கும், கிரேஸ் என்கிற ஐரோப்பிய தாய்க்கும் 1940 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தவர் புரூஸ் லீ. நடிகரான லீ கோய்ன் , 1940 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் இருந்து அமேரிக்காவிற்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக, தன் மனைவியுடன் சென்றிருந்த சமயத்தில், அங்கே பிறந்தவர் புரூஸ் லீ என்பதைத் தாண்டி புரூஸ் லீக்கும் அமெரிக்காவிற்கும் வேறு தொடர்புகள் இல்லை.
புரூஸ் லீயின் பள்ளிப் படிப்பு ஹாங்காங்கிலேயே ஆரம்பிக்கிறது. சிறுவனாக இருந்த போதில் இருந்தே படிப்பைவிட அடிதடிகளில் பேரார்வம் கொண்டவராக இருந்த புரூஸ் லீ, பள்ளியில் சக மாணவர்கள் தொடங்கி தன்னுடைய தெரு சிறுவர்கள் வரை அடித்து ஆடியிருக்கிறார். அக்காலகட்டத்தில் ஹாங்காங்கில் மார்ஷல் ஆர்ட்ஸ் மிக பிரபலமாக இருந்ததால், தனக்கு மார்ஷல் ஆர்ட் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளவதே ஒரு ஃபேஷனாக இருந்திருக்கிறது. தெருச் சண்டைகளில் மார்ஷல் ஆர்ட் திறமையக் காட்டுவதெல்லாம் சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் வளர்கிற புரூஸ் லீக்கு அந்தக் கலையின் மீது இயல்பாகவே ஆர்வம் பிறந்திருக்கிறது. மகனின் இந்த ஆர்வத்தைப் புரிந்து கொள்கிற புரூஸ் லீயின் தந்தை, புரூஸ் லீயை, அந்தப் பகுதியில் இருந்த புகழ்பெற்ற மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர் ஒருவரிடம், விங் சுன் (Wing Chun) என்னும் தற்காப்புக் கலையை முறையாகப் பயில சேர்த்து விடுகிறார். அப்போது புருஸ் லீயின் வயது 16. இதற்கு இடையில் பள்ளி படிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த தன் மகனை நடிப்புத் துறையில் ஈடுபடுத்தி, கிட்டத்தட்ட இருபது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பும் புரூஸ் லீக்கு கிடைத்திருந்தது. ஒரு பக்கம் சண்டை , மற்றொரு பக்கம் சினிமா என்று வளர்ந்த புரூஸ் லீ , இவை இரண்டையும் ஒரே புள்ளியில் இணைத்து பின்னாளில் கலக்கப் போவதை அப்போது அவர் உணர்ந்திருந்திருப்பாரா என்று தெரியாது.
‘விங் சுன்’ பயிற்சியை முறையாக கற்றுக் கொண்ட புரூஸ் லீ, முன்னைவிட மூர்க்கமாக சண்டைகளில் ஈடுபட, பள்ளியில் அது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது, தெருவிலும் கேங் சேர்த்துக் கொண்டு வீண் அடிதடிகளில் ஈடுபட்டு கெத்து காட்டுவதிலேயே ஆர்வத்தைக் காட்டிய புரூஸ் லீயின் எதிர்காலம் குறித்து கவலை கொள்கிற அவரின் பெற்றோர், புரூஸ் லீயின் குணத்தில் மாற்றம் வர வேண்டுமெனில், இந்தச் சூழலில் இருந்து அவரை வெளியேற்றினால் அன்றி வேறு வழியில்லை என்கிற நெருக்கடியில் புரூஸ் லீயை அமெரிக்காவின் சியாட்டலுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
1959 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் சியாட்டிலில் வந்து இறங்கிய புரூஸ் லீ , தனது குடும்ப நண்பர் ஒருவரின் உணவு விடுதியில் தங்கிக் கொண்டு, பள்ளி மேற்படிப்பை முடித்து, பின்னர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் சேர்கிறார். அங்கே சேர்ந்த பின் மெல்ல தத்துவங்கள் சார்ந்த படிப்பின் மீதும் ஆர்வம் பிறக்கிறது அவருக்கு, பிறகு தத்துவம் குறித்தும் படிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தச் சூழலில் அவரின் செலவுகளை சமாளிக்க போதுமான பணம் இல்லாததால், நண்பர்கள் கொடுக்கும் யோசனையின் பேரில் அவர் கற்றிருந்த மார்ஷியல் ஆர்ட் கலையை பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் முகமாக, அந்த பதினெட்டாவது வயதிலேயே சியாட்டலில் தனது முதல் பயிற்சிப் பள்ளியைத் தொடங்குகிறார். அதன் தொடர்ச்சியாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலேயே மார்ஷியல் ஆர்ட்டிற்கு மற்றொரு பயிற்சிக் கூடத்தையும் தொடங்க அவருக்கு வாய்ப்பு அமைகிறது. பிறகு, பல கல்வி நிறுவனங்களுக்கும் சென்று மார்ஷியல் ஆர்ட் குறித்த அறிமுகத்தைக் கொடுக்க இதுவே காரணமாகவும் அமைகிறது. அப்படி ஒரு முறை, கல்விக்கூடம் ஒன்றிற்கு செல்கிற போதுதான் லிண்டாவைச் சந்திக்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். பின்னாளில் அவரையே மணந்தும் கொள்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், தற்காப்புக் கலைகளைக் கொண்ட போட்டிகள் பிரபலமாக இருந்து வந்ததை அறிகிற புரூஸ் லீ, அந்தப் போட்டிகளில் பங்கு கொள்கிறார். இரண்டே விரல்களை ஊன்றி தண்டால் எடுப்பது, ஒன் இன்ச் பஞ்ச் உள்ளிட்ட தனது பிரத்தியேக திறமைகளைக் காட்டி அங்குள்ளவர்களை ஆச்சரியம் கொள்ள வைக்கிறார். அதன் வழியே இந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் புழங்குகிற இடங்களில் புரூஸ் லீக்கு ஒரு ரசிகர் வட்டம் உருவாகிறது.
ஒருவரை முழு பலத்துடன் தாக்க வேண்டும் என்றால் நம்மிடம் வேகம் இருக்க வேண்டும். அந்த வேகம் கிடைக்க, ஓரிரு அடிகளேனும் பின்னால் நகர்ந்து முன்னேறினால்தான் தாக்குதலில் முழு பலம் இருக்கும். விலங்குகளின் சண்டையில் கூட இந்த பின் நகர்ந்து முன்னேறுதலை நாம் கவனிக்க முடியும். ஆனால், எதிராளியிடமிருந்து ஒரே ஒரு இஞ்ச் இடைவெளியில் நின்று, உடம்பின் எந்த பாகத்தையும் அசைக்காமல், கையை இறுக மூடி விடும் பஞ்சில் எதிராளியை நிலை குலைந்து விழச் செய்யும் புரூஸ் லீயின் அந்த ஒன் இஞ்ச் பஞ்ச்சிற்கு இன்றும் உலகளாவிய ரசிகர்கள் உண்டு. 59 கிலோ எடையில் சராசரி உருவத்தைக் கொண்ட புரூஸ் லீ, தன்னைவிட இரண்டு மடங்கு கூடுதல் எடை உள்ளவர்களையும், இந்த ஒன் இஞ்ச் பஞ்ச் மூலம் நிலைகுலைய வைத்தார் என்பதே இதில் கூடுதல் ஆச்சரியம்.
புரூஸ் லீயின் இந்த சாகசங்கள் பரவலாக அறியப்பட, அவரின் பயிற்சி பள்ளி பிரபலமடைய ஆரம்பிக்கிறது. சீன கலையான ‘விங் சுன்’ தற்காப்புக் கலையை, அமெரிக்காவின் இருக்கும் பலதரப்பு மக்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார் புரூஸ் லீ. சீனர்களுக்கே உரித்தான தனித்துவக் கலையை, சீனர் அல்லாத ஆட்களுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று அமேரிக்காவில் வசிக்கும் மற்ற சீன பயிற்சியாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பைக் காட்டுகின்றனர். ஆனால், பிறப்பில் பாதி ஐரோப்பியராக இருந்த புரூஸ் லீ , ஹாங்காங்கில் இருந்த காலத்திலேயே இந்த அடையாளச் சிக்கல் காலரணமாக ஒரு வித தீண்டாமைக்கு ஆட்பட்டதால் , இந்த எதிர்ப்பினை கண்டு கொள்ளாமல், தன் பணியினைத் தொடர்கிறார். அப்போது மற்ற சீன பயிற்சியாளர்கள் பல வித நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அதில் ஒன்றுதான், வோங் ஜாக் மேன் என்கிற பலம் பொருந்திய மார்ஷியல் ஆர்ட் வீரருடன் புரூஸ் லீ மோதிய நிகழ்வு.
வோங் ஜாக் மேனை வீழ்த்திவிட்டால், தொடர்ந்து பயிற்சிப் பள்ளியை நடத்தலாம் என்றும், இல்லாவிடில் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அந்தப் போட்டியில் வைக்கப்பட்ட டீல். போட்டி தொடங்கி மூன்றாவது நிமிடத்திலேயே, போட்டி நடந்த இடத்தினைச் சுற்றி வோங் ஜாக் மேன் பயத்தில் தெரித்து ஓட , தோல்வியை ஒப்புக் கொள்கிறாயா? என்று கேட்டபடி அவரை விரட்டி விரட்டி வெளுத்திருக்கிறார் புரூஸ் லீ. ஏதோ ஒரு பரபரப்பான சினிமாவில் வைக்கப்படும் ஆக்ஷன் சீக்வன்ஸ் காட்சி போல தெரிகிறது இல்லையா? ஆனால் , 1964- ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓக்லாண்டில் உண்மையில் நடந்த நிகழ்வு இது. இந்த நிகழ்விற்குப் பின் புரூஸ் லீயின் விஷயத்தில் மற்ற சீன பயிற்சியாளர்கள் குறுக்கிடவே இல்லை.
இந்த நிகழ்வினைத் தொடர்ந்து தான் சினிமாவில் நடிக்க ஆயத்தமாக இருக்கிறேன் என அறிவித்தார் புரூஸ் லீ. தனக்குத் தெரிந்த கலையை விட்டுவிட்டு சினிமா புகழுக்கு அலைகிறார் என்கிற விமர்சனம் எழ ஆரம்பித்தது. சினிமாவில் மூலம் இந்தக் கலையை இன்னும் பரவலாகக் கொண்டு செல்ல இயலும் என்று பதிலளித்த புரூஸ் லீ, ”நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனால்தான் வெற்றி, தோல்வி பற்றிக் கவலையின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார். அந்த இளம் வயதில் அது மிகப் பெரிய புரிதலும், நகர்வும் என்றுகூட சொல்லலாம்.
அடுத்ததாக தான் கற்றுத் தேர்ந்த ‘விங் சுன்’ தற்காப்புக் கலையில் அவருக்கு சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. நடனப் பயிற்சி போல ஒரு குறிப்பிட்ட ஃபார்மேஷனில் பழகக்கூடியது அல்ல தற்காப்புக் கலை, ஸ்பொண்டனியஸாக மனம் சொல்வதற்கிணங்க உடல் ஒத்துழைக்க வேண்டும் என்பதை ஒட்டியே, அவரின் மேம்படுத்துதல்களை யோசிக்கிறார். எதிராளியை உடனடியாக வீழ்த்த என்ன செய்யலாம் என்பதில் பயணிக்கிற அவர், மேற்கத்திய தற்காப்புக் கலைகளின் சிறப்பு அம்சங்களையும் கிரகித்துக் கொண்டு, ’விங் சுன்’ கலையோடு அவற்றையும் இணைத்து, ஜீத் கூன் டோ (Jeet Kune Do) என்கிற புதுவிதமான தற்காப்புக் கலையை உருவாக்குகிறார். சண்டை போடத் தொடங்கும் முன்னரே எதிராளியை வீழ்த்தும் கலை என்ற பொருளில், அவர் சொன்ன ‘You can call my style as the art of fighting without fighting’ மிகப்பிரபலமான மேற்கோள்களில் ஒன்று.
இந்தப் புதிய கலையின் உருவாக்கத்தை எதிர்த்து, பாரம்பரியமான விங் சுன் கலையின் தனித்துவத்தை சிதைக்கிறார் என பழமைவாதிகளால் கடுமையாக குற்றம் சாட்டவும் பட்டார். ஆனால், கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொடுத்ததை அப்படியே பின்பற்றாமல், ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு தோன்றும் யுத்திகளையும் செயல்படுத்தி பார்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த புரூஸ் லீ , தன்னிடம் மார்ஷியல் ஆர்ட் கற்றுக் கொள்ளும் மாணவர்களையும் இண்டிவிஜுவலாக இயங்க ஊக்குவித்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நடந்த மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டிகளில் புரூஸ் லீயின் மாணவர்களே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
இந்தச் சூழலில்தான், புரூஸ் லீயின் வாழ்வில் பெரிய சோகம் ஒன்று நிகழ்கிறது. ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, முதுகெலும்பில் அடிபட்டு படுக்கையில் விழுகிறார் புரூஸ் லீ. இனி எழுந்து நடப்பதே பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட, ஆறு மாதங்கள் படுக்கையிலேயே கழிகிறது புருஸ் லீயின் நாட்கள். இந்த நேரத்தில் தன் கல்லூரியில் படித்த தத்துவ இயல் பக்கம் பார்வையைத் திருப்புகிறார். உலகின் முக்கியமான தத்துவப் புத்தகங்களையெல்லாம் இடைவிடாமல் படித்து தனது தேடலை, உணர்தலை , சிந்தனையை விரிவுப் படுத்திக்கொள்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தத்துவங்களின் மீது பெரிய ஈர்ப்பினைக் கொள்கிற புரூஸ் லீ, ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ’உன்னை உனக்குள் தேடு, கண்டெடு’ என்கிற மந்திரச் சொல்லில் தன்னை மீட்டெடுக்கிறார். மெல்ல எழுந்து நடக்க ஆரம்பிக்கிறவர், அடுத்த சில மாதங்களிலேயே முன்னைவிட இரண்டு மடங்கு பலத்துடன் மார்ஷியல் ஆர்ட் உலகில் வலம் வர ஆரம்பிக்கிறார்.
இந்தச் சூழலில்தான் அவருக்கு Green Hornet என்கிற தொலைக்காட்சி தொடர் ஒன்றில் துணைக் கதாபாத்திரமாக நடிக்கிற வாய்ப்பு அமைகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்கிற புரிதலோடு அதனை ஏற்றுக்கொண்டார் புரூஸ் லீ. அமெரிக்காவில் புரூஸ் லீயின் நடிப்பு சார்ந்த முயற்சிகளுக்கு அதுவே தொடக்கமாக அமைந்தது. அதன் பிறகு சிறு சிறு வேடங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தவரின் முயற்சிகளுக்கு, ஹாலிவுட் சிவப்பு கம்பளம் விரிக்க தயாராகவே இல்லை. திறமையானவர் என்று தெரிந்தாலும், புரூஸ் லீயின் ஆசிய பின்னணி, பெரிய தடையாக இருந்தது. இவரை வைத்து படம் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள். உள்ளூரில் அடையாளச் சிக்கலில் இரண்டாம் பட்சமாகப் பார்க்கப் பட்டவருக்கு, வெளிநாட்டிலும் அதே பிரச்சனை துரத்த, ஹாலிவுட்டில் நுழைந்துவிட அவர் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிய, மீண்டும் ஹாங்காங் திரும்புகிறார்.
ஹாங்காங் திரும்பியவருக்கு, அங்கே உடனடியாக சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அமெரிக்காவில் நடித்த க்ரீன் ஹார்னெட் தொலைக்காட்சி தொடர் ஹாங்காங்கில் பிரபலமாகியிருந்ததை அவர் எதிர்பார்த்திருக்கவே இல்லை. சிறிய வேடம் என்றாலும் வாய்ப்புகளை உதாசீனப்படுத்த கூடாது என்று, அன்று அவர் எடுத்த முடிவு, அவருக்கு இப்படி ஒரு கதவினை ஹாங்காங்கில் திறந்தது புரூஸ் லீயே எதிர்பார்த்திராத ஆச்சரியம். சம்பளம் குறைவு என்றாலும், வந்த வாய்ப்புகளில் நடிக்கத் தொடங்குகிறார். அப்படியாக அவர் நாயகனாக நடித்த படம்தான் 1971ல் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ‘The Big Boss’ திரைப்படம்.
பிக் பாஸ் படத்திற்கு முன்பாக, மார்ஷியல் ஆர்ட்டை பின்னணியாகக் கொண்டு ஹாங்காங்கில் நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் ஒன்றுமில்லை என்றாக்கியது பிக் பாஸின் வெற்றி. அதற்கு முன் வந்த அந்தப் படங்களில் , லாஜிக் இல்லாமல் மார்ஷியல் ஆர்ட்டை வலுக்கட்டாயமாக முன்னிறுத்தி எடுக்கப்படும் ஒரு போக்கு இருந்தது. புரூஸ் லீ அதனை மாற்றி, அவசியமில்லாமல் சண்டைக் காட்சிகளை வைக்கக் கூடாது என்கிற புரிதலோடு Big Boss ல் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தார். அவசியமான இடங்களில் மட்டும் வருகிற சண்டைக் காட்சிகள், படத்திற்கு கொடுத்த மைலேஜ், வேறுவிதமான இம்பேக்டைக் கொடுத்ததில், மார்ஷியல் ஆர்ட்டை வைத்து படம் பண்ணும் கலையை தன் வசப்படுத்தினார் புரூஸ் லீ.
1972ல் புரூஸ் லீயின் இரண்டாவது படமாக வெளியான ‘Fist Of Fury’, முந்தைய படத்தின் வசூலை அடித்து நொறுக்கி மிகப்பெரிய வெற்றியை அடைய, ஹாங்காங்கின் சூப்பர் ஸ்டார் ஆகும் புரூஸ் லீ ஆசிய பிரபலமாக உருவெடுக்கிறார். அதே வருடத்தில், தானே திரைக்கதை எழுதி, இயக்கிய ‘Way of the Dragon’ ஐ களம் இறக்குகிறார். கற்பனைக்கு எட்டாத ஒரு வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கிறது.
அது கொடுக்கிற உத்வேகத்தில், நான்காவது படமாக ‘Game of Death’ தின் வேலைகளைத் தொடங்கி, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கையில் , ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸிடமிருந்து புரூஸ் லீக்கு பெரிய வாய்ப்பு தேடி வருகிறது. தான் தேடி போன போது கதவை அடைத்த அதே ஹாலிவுட், இன்று தன் வீடு தேடி வந்து காத்திருக்கும் சூழலை உருவாக்கிக் காட்டினார் புரூஸ் லீ.
வார்னர் பிரதர்ஸின் ’எண்டர் தி டிராகன்’ படத்திற்காக மீண்டும் ஹாலிவுட்டை நோக்கி செல்கிறார் புரூஸ் லீ. 1973 ல் வெளியாகி சக்கைப் போடு போட்ட இந்தப் படம்தான், சீன மார்ஷியல் ஆர்ட்டை பின்னணியாகக் கொண்டு வெளியான, முதல் ஹாலிவுட் திரைப்படம் என்கிற சிறப்பு அடையாளத்தையும் பெற்றது. ஹாலிவுட்டில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்கிற கனவில், சிறிய வேடங்கள் கிடைத்தால்கூட நடிக்க ஆயத்தமாக இருந்த ஒருவரை, ஆசிய பின்னணியைக் காரணம் காட்டி விரட்டியடித்த அதே ஹாலிவுட்டில், ஆசிய நாடு ஒன்றின் மார்ஷியல் ஆர்ட்டை வைத்தே கதை செய்யும் போக்கை உருவாக்கிக் காட்டி, எல்லைகளை உடைத்த புரூஸ் லீக்கு அன்றைய வயது வெறும் 32.
‘எண்டர் தி டிராகன்’ படத்தின் சண்டைக் காட்சிகளை புரூஸ் லீயே அமைத்திருந்தார். புரூஸ் லீயின் வேகத்தை படம் பிடிக்க இயலாமல் திணறி, 24 என்று இருந்த ஃப்ரேமின் அளவை, 34 ஆக மாற்றி படம் பிடிக்க வேண்டிய , நம்ப முடியாத ஆச்சரியத்தையும் ஹாலிவுட்காரர்கள் செய்ய வேண்டியதாக இருந்தது. அப்படியொரு மின்னல் வேக அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய அதியச பிறவியாக இருந்தார் புரூஸ் லீ.
“என்டர் தி டிராகன்’ படம் திரைக்கு வர சில நாட்களே இருந்த நிலையில் 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ஆம் தேதி, எதிர்பாராத வகையில் ஹாங்காங்கில் மரணமடைகிறார் புரூஸ் லீ. முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப் படமான ’கேம் ஆப் டெத்’ திரைப்பட வேலை காரணமாக செல்வதாக தனது மனைவி லிண்டாவிடம் கூறிச் சென்றவர், அன்று இரவே பெடிட் டிங் பே என்கிற நடிகையின் வீட்டில் இறந்து போகிறார். தலைவலிக்காக அன்று அவர் எடுத்துக்கொண்ட Equagesic மாத்திரையில் இருந்த வேதிப் பொருட்களை, அவரின் உடல் ஏற்காததால் இந்த மரணம் நிகழ்ந்ததாக மருத்து முடிவுகள் வெளியாகின. அவரின் இறப்பிற்கு சில மாதங்கள் முன்னர்கூட இதே போன்றதொரு தலைவலி காரணமாக வலிப்பு ஏற்பட்டு படப்பிடிப்பிலேயே மயங்கி விழுந்திருக்கிறார். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மூளையில் நீர் கோர்த்தது காரணமாகச் சொல்லப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சனையின் தொடர்ச்சியாலேயே இந்த மாத்திரை எதிர்வினை புரிந்து அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக அந்த மருத்துவ அறிக்கை வெளியானது. ஆனாலும், ஒரு நடிகையில் வீட்டில் அவர் இறந்ததை ஒட்டி பல விதமான கதைகள் உலவ ஆரம்பித்தன. துப்பாக்கி குண்டால்கூட துளைக்க முடியாதவர் புரூஸ் லீ என்று தொடங்கி அவரது மனைவியே வைரத்தை பொடி செய்து பாலில் கலந்து கொடுத்து விட்டார் என்பது வரை ஒவ்வொன்றும் வித விதமான கதைகளாக இருந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஹாங்காங் அரசாங்கம், விசாரணைக் குழு ஒன்றினை நியமித்தது. ஆனாலும் புரூஸ் லீயின் இறப்பிற்கு, இதுதான் காரணம் என்கிற தெளிவுகள் கிடைக்காத நிலையே இப்போது வரை தொடர்கிறது. புரூஸ் லீ, இறந்த போது அவருக்கு 33 வயது. அவருக்கு shanon Lee என்கிற மகளும், Brandon Lee என்கிற மகனும் என இரண்டு பிள்ளைகள். நடிகரான Brandon Lee யும் தனது தந்தைப் போலவே இளம் வயதிலேயே இறந்து விட்டார். மகள் shanon Lee நடிகையாகவும், பிசினஸ் உமனாகவும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருக்கிறார். மனைவி லிண்டா அதன் பிறகு வேறு திருமணம் செய்து கொண்டு அவரும் கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார்.
புரூஸ் லீ இறந்து 50 ஆண்டுகள் கடந்தும் அவரை நினைவில் இருத்தி கொண்டாடிக் கொண்டே இருப்பதன் பின்னணி என்னவென்று பார்த்தால், ஒரு நடிகராக மட்டும் அவர் இருந்திருக்கவில்லை. இலக்கை முடிவு செய்து கொண்டு, விடா முயற்சியோடு அயராத உழைப்பைக் கொடுத்தால் வானம் வசப்படும் என்று காட்டிய சாகச இளைஞனாகவும் அவர் இருந்ததே. ’எதிலும் தனித்துவமாக இரு; யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதே ; உள்ளம் சொல்வதை கேட்கும் உடல் திறனோடு இரு’ என ஒரு தத்துவம் போல அமைந்த அவரின் வாழ்க்கையின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, இலக்கை நோக்கி பயணித்தால் யாரும் அதிசயபிறவி ஆகலாம் என்பதும் புரூஸ் லீயின் வாழ்க்கை நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம்.
நன்றி நாடோடி இலக்கியன்