Breaking News :

Friday, March 31

பெத்தவன் - ஆசிரியர் : இமையம்

இமையம் எழுதிய பெத்தவன் எனும் நெடுங்கதை சென்ற வருடம் வெளியான பாவக்கதைகள் ஆந்தலாஜியில்  வெற்றிமாறனின் ஓர் இரவை நினைவூட்டிச் சென்றது.   பெற்ற மகளை ஜாதியின் மேல் கொண்ட வெறியாலும், ஊராரின் அரசல் புரசலான பேச்சுக்கும் செவி மடுத்து ஆணவத்திற்காக கொலை செய்வதை பற்றி அக்கதை பேசிச் செல்லும்.

இதுவும் கூட அவ்வாறான ஆணவக் கொலையை பற்றிய கதை தான். கதையின் துவக்கத்தில் ஊரே கூடி உட்கார்ந்து கொண்டு பழனியை கேள்வி மேல் கேள்வியாய் துளைத்துக் கொண்டிருப்பார்கள்.  ஏற்கனெவே இரண்டு முறை தன் மகளை  கொன்று விடுவதாகச் சொல்லி அது நடக்காமல் போக அன்று வேஷ்டியை அவிழ்த்து அதைத் தாண்டி சத்தியமும் செய்து கொள்வார் பழனி.  

பாக்கியம் விரும்பும் காதலன் ஒரு போலீசாக இருப்பினும் அவன் கீழ் சாதி என்பதால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக அந்த ஊர் மக்கள், ஊரின் மானத்தையும், மரியாதையும் பாக்கியத்தின் இரு தொடையின் நடுவே வைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை அவன் போலீஸ் இல்லையென்றால் அவனை கொன்று இருக்கலாம் என்றும் கூடப் பேசிக் கொண்டிருப்பார்கள். 

முன்னதாகவே பாக்கியம் அவனோடு ஓடிப் போவாள்.  அவளை மீண்டும் இழுத்துக் கொண்டு வந்து அடித்து துவைப்பார்கள் . அதன் பின்னர்  ஒரு காட்சி வரும்.  

பாக்கியம் தெருவில் செல்லும் பொழுது  சில இளைஞர்கள் தங்களது வேஷ்டியை அவிழ்த்துக் காட்டி "நம்ம ஜாதியில யாருடதும் பிடிக்கலையா?" என்று கேட்பது ஜாதி வெறி மட்டுமல்லாது வன்மத்தின் உச்சம்.

வெற்றிமாறன் கதையில் கதாநாயகி சாவின் விழும்பில் இருக்கும் பொழுது "நான் தானே உனக்கு செல்லமான மக. என்ன இப்டி பண்ணிட்டு நீ எப்டி இனி தூங்குவ?" என தகப்பனை பார்த்து கேட்கும் பொழுது உறைய வைத்து நின்ற காட்சியை போல் இதிலும் கூட இரண்டு மூன்று இடங்கள் உண்டு.

முக்கியமாய் பாக்கியத்திற்கு  வைக்கும் சாப்பாட்டில் விஷமிருக்கும் என்று வீடே பயந்து பார்க்கும். "இதான் நீ வீட்ல சாப்பிடற கடைசி சாப்பாடு" என்று பழனி சொல்வார். அவள்   குழம்பை ஊற்றி, சாதத்தை பிசைந்து கண்ணீரையும் சேர்த்தே விழுங்கி கொண்டிருப்பதாக எழுதி இருப்பார் இமேக்யம்.

இன்னும் அரங்கேறி வரும் தென் மாவட்டங்களில் அவல நிலையை காண தமிழ் சமூகம் இதை வாசித்துப் பார்க்கலாம் .

வாசிப்பு சவால் : 24/25
#Reading_marathon_2021 (RM237)

புத்தகம் :    பெத்தவன் 
ஆசிரியர் :  இமையம்
பக்கம் : 40
வெளியீடு :  பாரதி புத்தகாலயம்

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.