ஆனந்த ராமாயணம் என்ன சொல்லுகிறது?
ஆஞ்சநேயர் சீதையைத் தேடிக் கண்டுபிடிக்கறதுக்காகப் போனார்.. அசோக வனத்துலே சீதையைப் பார்த்துட்டுத் திரும்பி வந்துக் கொண்டிருந்த போது தான் செய்திருக்கின்றன செயல்களையெல்லாம் நினைத்துப் பார்த்தார். அந்தச் சமயத்துலே அவருக்கு வந்தது சின்ன கர்வம்.
"அடடா.. எப்பேர்ப்பட்ட காரியம்லாம் நான் செஞ்சிருக்கேன்; சமுத்திரத்தையே தாண்டினேன். சீதா பிராட்டியைத் தேடிக் கண்டு பிடிச்சேன். ராவணனையே கண்டு யேசினேன். அங்கே நெருப்புவச்சி அரக்கர்களையெல்லாம் கதிகலங்கடிச்சேன்'' இப்படியெல்லாம் தன்னைப் பத்திப் பெருமையா நினைச்சார் ஆஞ்சநேயர். உடனே அவரோட உள்ளத்துலே கர்வம் தோன்ற ஆரம்பிச்சுட்டுது. இதைப் பகவான் புரிஞ்சிக் கிட்டார்.
ஆனா ஆஞ்சனேயர் ரொம்ப பெருமையா சிரிச்சிக்கிட்டே பலத்த கர்ஜனையோட வந்துக்கிட்டிருக்கார். வழியிலே திடீர்னு அவருக்குத் தாகம் எடுத்தது. உடனே தண்ணி குடிக்கணும் போல இருந்தது. என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சார்.
அவர் நின்னுக்கிட்டிருந்த இடம் மகேந்திரமலை. சுற்றிலும் பார்த்தார். தண்ணீர் இருக்கிற இடம் எதுவும் தட்டுப்படலே.. கொஞ்ச தூரத்துலே ஒரு முனிவர் உக்காந்திருக்கிறது தெரிஞ்சிது.. ரொம்பவும் அமைதியா அவர், உட்கார்ந்திருந்தார்.
ஆஞ்சநேயர் அவருகிட்டே போனார்;
"முனிவரே! நான் ராமபிரானுக்காகச் சீதையைத் தேடிக் கண்டுபிடிச்சுட்டு திரும்பி வந்து கிட்டிருக்கேன். ரொம்பத் தாகமா இருக்கு.. தண்ணி இருந்தா குடுங்க. இல்லேன்னா அது இருக்கிற இடத்தைக் காட்டுங்க... நான் போய்க் குடிச்சிக்கிறேன்''னார்.
முனிவர் தண்ணீர் இருக்கிற திசையைச் சுட்டிக் காட்டினார்.
ஆஞ்சநேயர் அங்கே புறப்பட்டார். போறதுக்கு முன்னாடி சீதை அவர்கிட்டே கொடுத்த சூடாமணி, ராமனின் முத்திரை மோதிரம், பிரம்ம தேவன் கொடுத்த ஒரு கடிதம் - இது மூன்றையும் முனிவர் முன்னாடி வச்சுட்டு - தண்ணீர் குடிக்கறதுக்காகப் போனார்.
கொஞ்ச நேரத்துலே இன்னொரு குரங்கு அந்தப் பக்கமா வந்தது. முனிவர் முன்னாடி இருந்த சூடாமணி, மோதிரம், கடிதம் எல்லாத்தையும் எடுத்தது. முனிவருக்குப் பக்கத்துலே இருந்த கமண்டலத்துக்குள்ளே போட்டுட்டுப் போய்விட்டது.. முனிவர் அதையும் புன்னகையோடு பார்த்துக்கிட்டுத்தான் இருந்தார்.
ஆஞ்சநேயர் தண்ணீர் குடிச்சுட்டுத் திரும்பி வந்தார். முனிவருக்கு முன்னாடி வச்சுட்டுப் போனது எதுவும் அங்கே இல்லே. பயந்துட்டார். முனிவரைக் கேட்டார். அவர் கமண்டலத்துப் பக்கம் கண்ணைக் காட்டினார். இவரு உடனே ஓடிப்போயி அதுக்குள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே பார்த்தா இவருக்கு ஒரே ஆச்சரியம்.. இவரு வச்சுட்டுப் போனது மாதிரி ஆயிரக்கணக்கான முத்திரை மோதிரங்கள் கமண்டலத்துக்குள்ளே கிடக்குது. அனுமார் குழம்பிப் போயிட்டார். முனிவரைப் பார்த்தார்.
"சுவாமி! இவ்வளவு கிடக்குதே இதுலே நான் விட்டுட்டுப் போன மோதிரம் எது?" ன்னு கேட்டார்.
முனிவர் ரொம்பவும் நிதானமா - அலட்டிக்காமே இதுக்குப் பதில் சொன்னார். "குழந்தாய்.. இராமாவதாரம் நடக்கிற காலங்களிலெல்லாம் சீதையை இராவணன் கவர்ந்து செல்றதும்-... அதுக்கப்புறம் அனுமார் சீதையைக் கண்டுட்டு திரும்பறப்போ முத்திரை மோதிரத்தை என் கமண்டலத்துக்குள்ளே போடுறதும் வழக்கம். அப்படிப் போடப்பட்ட மோதிரங்களைத் தான் இப்ப நீ இந்தக் கமண்டலத்துக்குள்ளே பார்க்கிறாய்," அப்படின்னார்.
இதைக் கேட்டவுடனே ஆஞ்சநேயருக்கு இருந்த கர்வம் ஓடிப் போயிட்டுது. வெட்கத்தோட முனிவரைப் பார்த்தார். 'சுவாமி! அப்படின்னா இதுவரைக்கும் எத்தனை ராமர்கள் தோன்றியிருக்காங்க?" அப்படின்னு கேட்டார்.
"கமண்டலத்துலே உள்ள மோதிரம் எத்தனைன்னு கணக்கு போடறது முடியாத காரியம்''ன்னுட்டார் முனிவர்.
ஆஞ்சநேயர் யோசிச்சார்;
"என்னை மாதிரி எத்தனையோ பேர் இந்தக் காரியத்தைச் செஞ்சிருக்காங்க. அவங்களை விடப் பெரிசா அப்படி நான் என்னத்தைச் செஞ்சுட்டேன்”னு நினைத்தார்.
அப்புறம் அங்கதன் இருக்கிற இடத்துக்குப் போனார். அவனோட சேர்ந்துகிட்டு ராமபிரான்கிட்டே போனார். வணங்கினார். கண் கலங்கினார். ஆசிரமத்துலே நடந்ததையெல்லாம் சொன்னார். எல்லாத்தையும் கேட்டதுக்கப்புறம் ராமபிரான் சிரிச்சிக்கிட்டே சொன்னார்... "முனிவர் உருவத்துலே வந்தது நான்தான். உன் நன்மைக்காக இந்த வேடிக்கையைச் செஞ்சேன் கவலைப்படாதே... இதோ பார்"ன்னார்.
முனிவர் ஆசிரமத்துலே விட்டு வந்த மோதிரம் ராமர் கையிலே ஒளிவீசிக்கிட்டிருந்தது. ஆஞ்சநேயர் அப்படியே தரையிலே விழுந்து வணங்கினார். அதுக்கப்புறம் எந்த நிலைமையிலும் அவர் உள்ளத்துலே கர்வம் வரவே இல்லையாம்.
இந்தக் கதை எதுக்காகன்னா... எந்தச் சமயத்துலேயும் மனசுலே கர்வத்துக்கு இடம் கொடுக்கக் கூடாதுங்கறதை வலியுறுத்தறதுக்குத்தான்.