ஏனோ வெட்கம் தான் வாரதில்லை?

kadhal-kavithai-lovers
ஏனோ வெட்கம் தான் வாரதில்லை?

வெட்கம் ஏனோ

வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது..

விளக்கை அணைக்கச் சொல்லி

விட்டில்கள் வட்டமிடுகின்றன..

விழித்திரை மூடிக்கொள்ள

விளக்கங்கள் கேட்டு குறுஞ்செய்தி வாசிக்கின்றன.

 

விபரமாய் சொல்லத் தேவையில்லை

வியப்பாய் சில கேள்விகள்

விடிய விடிய விளக்கெரியும்

வீட்டுக்கு தூரமாய் தூங்க எண்ணங்கள்.

 

பாவம் வெட்கம் தான்

வரமாட்டேன் என்கிறது

இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்களுக்கு.

 

முளைவிடும் பருவத்தில் குறைந்தது

மூன்று காதல் கடிதங்கள்

முறுக்கி விடும் போதினில் குறைந்தது

மூன்று காதலிகள்.

 

முடிச்சு போடுகையில்

முந்நூறு பவுன் கேட்கிறது

முடிந்தவரை முந்தானைக்கு

முதல்முறை காதலியை தேடுகிறது.

 

இன்னும்

ஏனோ வெட்கம் தான் வரவில்லை

இந்த வெட்கங்கெட்ட வேட்டிகளுக்கு.

 

வேலைக்கு செல்லுமிடத்தில்

வேண்டும் வரை காதலிகள்

வேதனை தான் பேருந்துகளில்

வெளிச்சம் தேடும் வெள்ளை மனங்கள்.

 

பயணங்கள் முடிவதில்லை

காதல்

படுக்கை அறையோடு நிற்பதில்லை.

பதிக்கு மட்டும் பூட்டுப் போட்டு

படலைத் தாண்டும் கௌரவங்கள்

இன்னும்

ஏனோ வெட்கம் தான்

வாரதில்லை.

 

என்னை வேசி என்னும் வேட்டிகளுக்கு.

 

..இயலிசம்..