Breaking News :

Saturday, January 18
.

வலம்புரிச் சங்கு ஏன் வீட்டில் வைக்க வேண்டும்?


மகாலட்சுமியின் கடாட்சத்தைப் பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்குக் கிட்டும் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடும்.

வீட்டில் வாஸ்து குறை காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் காலையில் தெளித்து விட்டால் அந்தக் குறைகள் நீங்கும். இந்த வழிபாட்டு முறைகள் தெரியாதவர்கள் எப்படி வலம்புரி சங்கினை வைத்து பூஜித்து மகாலட்சுமியின் அருளைப் பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

முதலில் 7 அங்குல நீளத்திற்கு குறையாத மாசு மருவற்ற ஒரு வலம்புரிச் சங்கினை வாங்கிக் கொள்ளுங்கள். நன்னீரினாலும், பின்னர் மஞ்சள் கலந்த நீரினாலும் கழுவி அதனை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

வலம்புரிச் சங்கிற்கு அளவான ஒரு வெள்ளித் தட்டில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். (வெள்ளித் தட்டில் வைக்க வசதியில்லாதவர்கள் பித்தளை தட்டினை உபயோகிக்கலாம்) அதன் மேல் வெண் பட்டு விரித்துக் கொள்ளுங்கள். இந்தத் தட்டினை மகாலட்சுமி படத்தின் முன்னால் வைக்கவும். அதன் மேல் வலம்புரிச் சங்கினை பிளந்த பக்கம் மேற்புறமாக இருக்குமாறு வையுங்கள். முன்னதாக சங்கிற்கு வட்டமான முன் பகுதியில் நடுவில் ஒன்றும் சுற்றி ஆறுமாக ஏழு பொட்டுக்கள், அதாவது முதலில் சந்தனம் அதன் மேல் குங்குமம் வைக்கவும். பின்பு பிளந்த பக்கத்தின் ஓரமாக இதேபோல் ஏழு பொட்டுகள் வைக்கவும். சங்கினுள் சிறிது மஞ்சள் கலந்த நீர் விட்டு நிரப்பவும். இதனுள் இரண்டு கிராம்பு சேர்க்கவும். வசதியுள்ளவர்கள் இரண்டு குங்குமப் பூவும் சேர்க்கலாம். இப்படித் தயார் செய்யப்பட்ட சங்கினை தட்டில் வைக்கவும். சங்கு கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். வால் பகுதி மேற்கு நோக்கியிருக்க வேண்டும்.

நெய் தீபம் ஏற்றவும். சங்கு உள்ள தட்டினைச் சுற்றி மல்லிகை, சிவப்பு ரோஜா, சிவப்பு அரளி பூக்களைத் தூவி பூக்களின் மேல் தூய பன்னீர் தெளிக்கவும். பின்னர்,

‘ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்’

என்று சங்கு காயத்ரி மந்திரத்தை 18 முறை சொல்லி தூப, தீபம் ஆராதனை செய்து சங்கினை வழிபட வேண்டும். பின்னர் மகாலட்சுமி தாயாரை நினைத்து,

‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:’

எனும் மந்திரத்தினை 108 தடவைக்கு குறையாமல் சொல்லி தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். அந்த பூஜையினை அதிகாலை வேளையில் செய்வதே சிறப்பாகும்.

இப்படி தொட்ர்ந்து 48 நாட்கள் செய்ய, எப்படிப்பட்ட தரித்திரமும் நீங்கி சகல செல்வமும் பெறலாம். சங்கிலிருக்கும் தீர்த்தத்தினை மறுநாள் காலையில் தானும் அருந்தி வீட்டில் உள்ள மற்றவர்க்கும் அருந்தக் கொடுக்க வேண்டும். சிறிதளவு தீர்த்தத்தினை கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் தெளித்து விடுங்கள். தினமும் புதிதாக தீர்த்தம் தயார் செய்ய வேண்டும்.

இந்த பூஜையை தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைதோறும் செய்யலாம். சங்கினை தட்டினில் வைத்து தூய நீர் நிரப்பி மறு வெள்ளிக்கிழமை வரை தூப தீபம் காட்டி வழிபட்டு வரவும். இந்த வலம்புரி சங்கு பூஜையை முறையாக செய்து மகாலட்சுமியின் அருளைப் பெற்று வளமோடு வாழ்வோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.