சஷ்டியில் விரதம் இருக்க குழந்தைபேறு உண்டாகும். கிருத்திகையில் கந்தனை வழிபட துன்பங்கள், கடன் தொல்லை நீங்கும். வந்த, வர இருக்கின்ற தீவினைகள் கந்தனின் திருப்பெயரைச் சொன்னால் கலங்கி நம்மை விட்டு விலகும். செந்தூர் வேலவா! என்று சொல்லி திருநீறு பூசுவோருக்கு சேவை செய்ய முருகன் ஓடி வருவான். தீவினை ஒருபோதும் தீண்டாது.
அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது சஷ்டி மற்றும் கிருத்திகை விரதம். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. விரதத்தின் போது கந்தசஷ்டி கவசம், ஷண்முக கவசம், கந்த குரு கவசம், சத்ரு சம்ஹார வேல் பதிகம், கந்தர் அநுபூதி படிப்பது எல்லா நன்மையும் தரும். மெளன விரதம் உடலையும், உள்ளத்தையும் சீர்படுத்தும்..!
தெய்வத் திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி. பார்வதி - பரமேஸ்வரன், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காமாட்சி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான்.
ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்துவார்கள். சந்திரனாகிய தாய், தந்தையாகிய சூரியனுக்கு உரிய நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரித்து பௌர்ணமியைத் தோற்றுவிப்பது பங்குனி மாதத்தில். கார்த்திகை மாதத்தைப் போலவே, அம்மையப்பனின் இணைவாக இந்த மாதமும் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில்
நடைபெறுகின்றன.
பங்குனி மாதம் என்பது நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் மாதமாகவும் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. நம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முழு ஆண்டுத் தேர்வினை இந்த மாதத்தில் காரணமில்லாமலா நடத்துகிறார்கள்..? நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியர் ஆகிய குருவின் வீட்டில் அதாவது மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. ஆண்டு முழுவதும் தான் பெற்ற பயிற்சியை தனது ஆசிரியரிடம் செய்து காட்டி தெளிவு பெறுவதாகக் கொள்ளலாம். பங்குனியில் குருவின் வீட்டில் சஞ்சரித்து முழுமையாக பக்குவம் அடைந்து அடுத்துவரும் சித்திரை மாதத்தில், அதாவது மேஷ ராசியில் சூரியன் முழுமையான உச்ச பலத்தோடு ஒளி வீசுவார்.
உச்ச வலிமை பெறுவதற்கு முன்னதாக ஆசிரியரிடம் பயிற்சி பெற்று பக்குவப்பட வேண்டும் என்பதை இந்தப் பங்குனி மாதம் நமக்கு நன்றாக உணர்த்துகிறது. அதே போன்று கணக்குத் தணிக்கையாளர் என்று நவகிரகங்களில் குரு பகவானைக் குறிப்பிடுவார்கள். அரசு அலுவலகங்கள், கருவூலங்கள், வங்கிகள் என சூரியன் சார்ந்த அனைத்துத் துறைகளும் கணக்குத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதும் இந்த மாதத்தில்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது.
இந்தக் கருத்தினை மெய்ப்பிக்கும் விதமாக ஞானகுருவாகிய ஐயப்பன் உதித்ததும் இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில்தான். அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற விரும்புவோர் உத்திரத்தில் உதித்த ஐயனை தரிசிக்கச் செல்வர். சாமானிய மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல, சிவனேசச் செல்வர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெய்ஞானத்தைப் போதிப்பதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். இன்றளவும் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இந்த அறுபத்துமூவர் திருவிழா பங்குனி மாதத்தில் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுவதே இதற்கு சாட்சி.
வட இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவதும் இந்த மாதத்தில்தான். ஆண்-பெண், ஏழை-பணக்காரர், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என எவ்வித பேதமுமின்றி அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வர்ணங்களைப் பூசிக்கொண்டு சமத்துவத்தை நிலைநாட்டுவர்.
எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓரினம் என்ற மனப்பக்குவத்தைத் தருவதும் இந்தப் பங்குனி மாதமே. இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்குள்ளும் குடிகொண்டிருக்கும் அறியாமை எனும் இருள் நீங்கி தெளிவு பெறுவது இந்தப் பங்குனி மாதத்தில் என்றால் அது
மிகையில்லை.