Breaking News :

Monday, January 13
.

அமாவாசை காய்கறிகளில் வாழைக்காய்?


அமாவாசை அன்று சமைக்கும் காய்கறிகளில் வாழைக்காய் கட்டாயம் இடம்பெறும். அதனுடன் பாகற்காய், பிரண்டை மற்றும் பலாக்காய்களுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. இதற்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

அமாவாசை விரத சமையல் மற்றும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும்போது அந்தணருக்குக் கொடுக்கும் பொருட்களில் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் இதில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் போன்றவற்றையும் கண்டிப்பாக சேர்த்து சமைக்க வேண்டும்.

ராஜ வம்சத்தை சேர்ந்த விசுவாமித்திரர் புகழ்பெற்ற ராஜரிஷி ஆவார். இவரது கடுமையான தவப்பயனால் இவர் பிரம்ம ரிஷியாக உயர்ந்தார். மேலும், இவர் வசிஷ்டர் வாயால், ‘பிரம்ம ரிஷி’ எனும் பட்டத்தையும் பெற்றார். ஆனால், இப்படி பட்டத்தை இவர் பெறுவதற்கு முன்பு இவருக்கும், வசிஷ்டருக்கும் மோதல் இருந்தது.

ஒரு சமயம் வசிஷ்ட முனிவர் விசுவாமித்திரரை சந்தித்து தனது வீட்டில் சிராத்தம் செய்ய உள்ளதால் தாங்கள் தங்கள் வீட்டிற்கு உணவு அருந்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். வசிஷ்டர், விசுவாமித்திரர் இருவருமே பயங்கர கோபக்கார முனிவர்கள். வசிஷ்டரின் இந்த அழைப்பை ஏற்ற விஸ்வாமித்திரர், ‘தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்க வேண்டும்’ எனக் கூறினார். இதைக் கேட்டு வசிஷ்டர் திகைத்துப் போனார். ‘1008 காய்கறிகளா? அத்தனை வகை காய்கறிகளையும் எப்படி தேடிப்பிடிப்பது? எப்படி சமைப்பது?’ எனக் குழப்பம் அடைந்தார். ஆனால், அருகில் இருந்த வசிஷ்டரின் மனைவியும் தீவிர பதிவிரதையுமான அருந்ததி விசுவாமித்திரரின் வார்த்தைகளை ஏற்று, ‘நீங்கள் கூறியபடி 1008 காய்கறிகளை சமைத்து பரிமாறுகிறேன் சுவாமி’ என பணிவுடன் பதில் அளித்தாள்.

சிராத்தம் கொடுக்கும் நாளும் வந்தது. ரிஷிகளில் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிய விசுவாமித்திரரும் உணவு சாப்பிட வந்தார். வாழை இலை போட்டு உணவுகளை பரிமாறத் தொடங்கினாள் அருந்ததி. முதலில் எட்டு வாழைக்காய் வைத்தாள். பிறகு பாகற்காய், பிரண்டை, பலாக்காய் என பரிமாறி முடித்துவிட்டு, ‘1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது சுவாமி’ என பணிவுடன் விசுவாமித்திரரிடம் கூறினாள். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த விசுவாமித்திரர், ‘என்ன இது நான் 1008 காய்கறிகள் சமைத்து பரிமாறச் சொல்லி கேட்டால், நீ நான்கு காய்களை மட்டும் பரிமாறிவிட்டு 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது எனச் சொல்லி என்னை அவமானப்படுத்துகிறாய்’ எனக் கோபமடைந்தார்.

அதற்கு அமைதியாக பதிலளித்த அருந்ததி, ‘சுவாமி தாங்கள் அறியாதது இல்லை. அனைத்தும் அறிந்த நீங்களே இப்படிக் கோபப்படலாமா?

*’காரவல்லி சதம் ப்ரோக்தம் வஜ்ரவல்லி சதம் த்ரயம்*

*பிநச: ஷட்சதம் ப்ரோக்தம் ஸ்ராத்த காலே விதியதே:’*

என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதாவது,

*பாகற்காய் 100 காய்களுக்கும்,*

*பிரண்டை 300 காய்களுக்கும்,*

*பலாக்காய் 600 காய்கறிக்கும்*

சமமாகும்.

இவை ஆயிரம் காய்கறிகள் ஆகிவிட்டன.

இதோ எட்டு வாழைக்காய் வைத்துள்ளேன். மொத்தம் 1008 காய்கறிகள் ஆகிவிட்டது’ எனக் கூறினாள்.  இதைக் கேட்டு சாந்தமடைந்த விசுவாமித்திரர் அருந்ததியின் புத்திக்கூர்மையையும், சாஸ்திர முறைப்படி நடக்கும் குணத்தையும் கண்டு வியந்து அருந்ததியையும், வசிஷ்டரையும் ஆசீர்வதித்துச் சென்றார்.

சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டுள்ளதன் காரணமாக உயர்வான இந்த நான்கு காய்கள் மட்டும் அமாவாசை சமையலில் முக்கிய இடம்பிடிக்கின்றன.  மேலும், அமாவாசை நாளில் துவரம் பருப்புக்கு பதிலாக பாசிப்பருப்பு வைத்து சமைக்க வேண்டும். கீரை, முள்ளங்கி, உருளை, பீன்ஸ், கத்திரிக்காய், முட்டைகோஸ், முருங்கைக்காய், கோவக்காய் போன்ற காய்கறிகளை சமைக்கக் கூடாது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.