Breaking News :

Monday, May 20
.

அட்சயதிருதிக்கு எந்த ராசிக்காரர்கள் என்ன வாங்கலாம்?


லட்சுமிகடாட்சம் நிறைந்த நாள் அட்சயதிருதியை. அன்று லட்சுமி வாசம் செய்யும் பொருள்களை வாங்குவதால், நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மட்டுமல்ல, லட்சுமிகரமான இன்னும்பல எளிய பொருள்களும் உண்டு. அவற்றை வாங்கியும் பலன் பெறலாம். அதேபோல், அன்று தானம் வழங்குவதும் விசேஷம்.

இந்த வருடம், மே-10 வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை வருகிறது. இந்த நாளில், உங்கள் ராசிப்படி என்னென்ன வாங்கலாம், எந்தப் பொருள்களைத் தானம் கொடுப்பது விசேஷம் என்பது குறித்துத் தெரிந்துகொள்வோமா?!

மேஷம்: புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள் வாங்குவது சிறப்பாகும். வீட்டுப் பெண்களை கிரகலட்சுமியாகப் போற்றச் சொல்கின்றன புராணங்கள். ஆகவே, அட்சய திருதியை அன்று தாயாருக்கும் மனைவிக்கும் அவர்கள் விரும்பும் பொருளை வாங்கித் தருவது விசேஷம். மேஷ ராசிக்காரர்கள் இந்த நாளில் நிலம், மனை, வீடு, வாகனம் வாங்கலாம். ஏழை - எளியவர்களுக்குக் கறுப்பு நிற வஸ்திரத்தைத் தானமாகத் தருவது, விசேஷ பலன்களை பெற்றுத் தரும். உடல் ஊனமுள்ளவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும். துவரம் பருப்பையும், எள்ளையும் தானம் செய்யலாம்.

ரிஷபம்: அட்சய திருதியை அன்று நீங்கள் பால், உப்பு, வெண்ணெய் போன்ற வெண்மையான பொருள்களை வாங்குவதன் மூலம், வீட்டில் சுபிட்சத்தைப் பெறலாம். அதேபோன்று உங்கள் மனதுக்குப் பிடித்தமான அழகு சாதனங்கள், வாசனைப் பொருள்கள், ஆடை- அணிமணிகளும் வாங்கலாம். பச்சைப் பயறையும், கொத்துக்கடலையையும் தானமாகத் தரலாம். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவுவது, விசேஷ பலன்களைத் தரும்.
மிதுனம்: இந்த அட்சய திருதியையில் நீங்கள், உங்கள் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கலாம். வண்டி, வாகனங்கள், எரிபொருள்கள், நிலபுலன்கள், ஆடை, அணிமணிகள் வாங்கலாம். அழகான பொருள்களை வாங்குவதற்கும் வாய்ப்பு உண்டாகும். கணினி, மின்சாதனகள், ஸ்டேஷனரி ஆகியவற்றை வாங்கும் தேவை இருந்தால், அட்சய திருதியை அன்று வாங்கலாம்; நீண்டநாள் உபயோகத்தில் இருக்கும். கொள்ளு தானியத்தைத் தானம் செய்வதும், கல்விக்கு உதவுவதும் நலம் சேர்க்கும்.

கடகம்: பொன்னும் பொருளும் சேரும் நாள் இது. பல வழிகளில் அதற்கான பணமும் கிடைக்கும். தந்தைக்கும் வாழ்க்கைத் துணைவருக்கும் தேவையான பொருள்களையும் வாங்கித் தரும் வாய்ப்பு உண்டு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்களுக்கான செலவுகளை அட்சயதிருதியையில் தொடங்கலாம். எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், மூலிகை, காட்டிலிருந்து கிடைக்கும் பொருள்கள், மரப்பொருள்கள், வாகனங்கள் ஆகியவை வாங்க வாய்ப்பு உண்டு. இயன்றவரையிலும் வெண்மை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குங்கள். ஏழைக் குழந்தைகளுக்கு ஆடைகளும், பரிசுப்பொருட்களும் இனிப்புப் பதார்த்தங்களும் வாங்கிக் கொடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

சிம்மம்: நடப்பு காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு வாகனப் பாக்கியம் உண்டாகலாம். இவர்கள் அட்சய திருதியை அன்று வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகளில் இறங்கலாம். மேலும் தான, தர்மப் பணிகள், தொழில் முன்னேற்றத்துக்கான செலவு களைத் தொடங்கலாம். ஆடை- அணிமணிகள், அலங்காரப் பொருள்கள், வாசனைத் திரவியங்களும் வாங்கலாம். உளுந்து, கொள்ளு தானியங்களைத் தானமாகக் கொடுப்பது சிறப்பாகும்.
கன்னி: விளையாட்டுப் பொருள்களை வாங்கவும், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு ஆகியவற்றில் பாலிஸி எடுக்கவும் இந்நாள் சிறப்பானதாகும். மனைவிக்கு விருப்பமானவற்றையும், கலைப் பொருள்களையும், ஆடை, ஆபரணங் களையும் வாங்கலாம். மலை, வனாந்திரம் சம்பந்தமான பொருள்களும் சேரும். தந்தை, அவர் வழி உறவினர்களுக்கு உதவுவது நல்லது. கோதுமையையும், கறுப்பு முழு உளுந்தையும் தானம் செய்யுங்கள். எல்லாம் நலமாகும்.

துலாம்: இரும்பு, எஃகு, எண்ணெய், விளைபொருள்கள், இயந்திரங்கள், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் சம்பந்தமான பொருள்கள் வாங்க வாய்ப்பு உண்டா கும். நிலபுலன்கள் வாங்க முதல் முயற்சி செய்யலாம். நெய் கலந்த பால் பாயசம் செய்து அம்பாளுக்கு நைவேத்தியம் செய்த பிறகு, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அருந்துவது நல்லது. தாயாருக்கும், தாய் வழி உறவினர்களுக்கும் உதவுவதும் சிறப்பாகும். அட்சயதிருதியை அன்று வெண்மை நிறப் பொருள்கள், கொள்ளு, நெல் ஆகிய தானியங்களை தானம் தருவது நல்லது.

விருச்சிகம்: மின் சாதனங்கள், எரிபொருள்கள், நிலபுலன்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றை வாங்கினால், அவற்றின் உபயோகம் நீண்டநாள் நீடிக்கும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு கூடிவரும். சிவப்பு நிறப் பொருள்களும், கட்டடப் பொருள்களும் வாங்கலாம். வாசனைத் திரவியங்கள் வாங்கலாம். தாமரை மலர்களால் லட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வும். கருட தரிசனம் செய்வது நல்லது. வெண் மொச்சையையும், எள்ளையும் தானமாகத் தரவும்.

தனுசு: ஆன்மிகம் சம்பந்தமான பொருள்களை வாங்கலாம். வெள்ளி, அழகுப் பொருள்கள், மகன் அல்லது மகளுக்குத் தேவையானவை, தியானம் மற்றும் யோகாவுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. கேளிக்கைகளில் கலந்துகொள்ளவும், தொழில் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்யவும் உங்களுக்கு உகந்தது அட்சயதிரிதியை திருநாள். கால், கண் ஊனமுற்றவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதால், நன்மைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுக்கும் உதவி செய்யுங்கள். துவரை, எள் ஆகிய தானியங் களையும், பாய், படுக்கை, பெட்ஷீட் போன்ற சயனப் பொருள்களையும் தானம் தருவது நல்லது.

மகரம்: கலைப் பொருள்கள், ஆடை, அணிமணி கள், அலங்காரப்பொருள்கள், வாசனைத் திரவியங்கள், இயந்திரங்கள், எரிபொருள்கள், விளைபொருள்கள், பூமியிலிருந்து வெளி வரும் பொருள்கள் ஆகியவற்றை வாங்க வாய்ப்பு உண்டு. வெள்ளி, செம்பு, இரும்பு போன்ற உலோகப் பொருள்கள், கனரக பொருள்கள் வாங்குவதாக இருந்தால் அட்சய திருதியை நாளில் வாங்கலாம். வியாபார முன்னேற்றத்துக்காக பொருளை முதலீடு செய்யவும் வாய்ப்பு உண்டா கும். உளுந்து, கொள்ளு ஆகிய தானியங்களைத் தானமாகத் தருவது நல்லது.

கும்பம்: காதுகளில் அணியும் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் சேரும். தந்தை சம்பாதித்த பொருள்களைப் பெற வாய்ப்பு உண் டாகும். செந்நிறப்பொருள்கள் சேரும். சகோதர நலனுக்காகவும் உதவுவீர்கள். மலைக்கு மேல் கோயில் கொண்டிருக்கும் திருமாலைத் தரிசித்து வழிபடுவது சிறப்பாகும். பச்சைப் பயிறு, பச்சை நிற வஸ்திரங்களைத் தானமாகத் தரலாம்.

மீனம்: புதிய முதலீடு செய்வதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். கலை சம்பந்தமான பொருள்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் ஆகியவற்றை வாங்கவும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும். இரும்பு, நல்லெண்ணெய், எள், கொள்ளு ஆகிய தானியங்கள், கறுப்பு மற்றும் பல வண்ணங்களால் ஆன வஸ்திரத்தை தானமாகத் தரலாம். ஆதரவற்றவர்களுக்கு உதவுவது சிறப்பு.

ராசி அடிப்படையிலான விவரங்களைப் பார்த்தோம். பொதுவாக அனைவருமே அட்சய திருதியை அன்று மகாலட்சுமியை வழிபடுவதோடு, சர்க்கரை, உப்பு போன்றவற்றையேனும் வீட்டுக்கு வாங்கி வரலாம். அன்னதானத்துக்கு இயன்ற பங்களிப்பை வழங்கலாம். இதனால்உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்கும்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.