Breaking News :

Friday, October 04
.

தவறான வாழ்வியல் வரும் நோய்கள்?


பொதுவாக நாற்பது வயதில் தான் ஒரு மனிதன்  முழுமையாகிறான் எனச்  சொல்வார்கள் ஆனால் இப்போது வேலைப்பளு, மனம் போன வாழ்வு, ஒழுக்கமின்மை என பல காரணங்களால், தவறுகளால்  இப்போது நாற்பதிலியே மனிதன்  முடமாகிறான். அறுபது - எழுபது வயதுகளில் வர வேண்டிய பல வகையான  நோய்கள் தற்போது முப்பது - நாற்பது வயதுகளிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. உலகம் முழுவதும் இளம் வயது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருக்கிறது. 

சர்க்கரை வியாதி, பிபி, கொலஸ்ட்ரால், கல்லீரல் பிரச்னை என அத்தனையும் நாற்பது வயதிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. 
கார்த்திக்கு 28 வயது தான் ஆகிறது, கடும் உழைப்பாளி, நல்ல சம்பளமும் வாங்கிக் கொண்டிருந்தான். பெற்றோர்கள் அவனுக்கு வரன் பார்த்திருந்தார்கள், ஆசை ஆசையாக ஊருக்குச் சென்றவன், அங்கே திடீரென மயங்கி விழுந்தான்.  

முதன் முதலாக மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற கார்த்திக்கிடம், அவருக்கு  சர்க்கரை நோய், பி.பி, இதய நோய் வந்துள்ளது என மருத்துவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தான், மனமுடைந்தான். 

கொஞ்சம் நிதானித்து முன் கூட்டியே உடல்நலனை கவனித்திருந்தால் இந்த நோய்களை தடுத்திருக்கமுடியும் என மருத்துவர் சொன்னதை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனான். இன்று தமிழகம் முழுவதும் கார்த்திக்கை போன்ற பல நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு நூறு பேர் அய்யோ கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே என உச் கொட்டுகிறார்கள். 

இதற்கு யார் காரணம்? எது தீர்வு ?

உலகம் முழுவதும்  மருத்துவ உலகில் தற்போது பிரபலாமாகி வரும் சொல் பிரிவென்டிவ் மெடிசின் என சொல்லப்படும்  முன்காப்பு மருத்துவம். ஒரு நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதை விடவும், அவ்வபோது உரிய பரிசோதனைகளைச் செய்து,  கூடுமானவரை நோய்களை தடுப்பதையே நோக்கமாக கொண்டது தான் பிரிவென்டிவ் மெடிசின். நாம், இருபது வயதுகளில்  செய்யும் தவறுகளின் வெளிப்பாடே நாற்பதில் வரும் பிரச்னைகள். 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,  கல்லூரி பருவத்துக்கு பிறகு அடுத்த பத்தாண்டுகளில் எவ்வாறு தங்களது உடல்நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அவர்களது பிற்பாதி வாழ்க்கை அமைகிறது. இளம் வயதில்  நாம் செய்யும் சின்ன சின்னத் தவறுகள் எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக பின்னாளில் வந்து சேர்வது தான் எக்கச்சக்க நோய்கள்.

சரி, நாம் செய்யும் தவறுகள் தான் என்ன? இது குறித்து மருத்துவர் சி. ராஜேந்திரன் விரிவாகச் சொல்கிறார்.

1. மோசமான  நேர மேலாண்மை :- 

சிறுவயதில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வளர்பவர்களுக்கு,  அதன் பின்னர் அவர்களை பிரிந்து வெளியூரில் வேலைக்கு செல்லும் ஆரம்பகட்ட வருடங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்கிறது. காலையில் எழுந்திருப்பது முதல் இரவு படுப்பது வரை அத்தனையிலும்  மெத்தனம் மேலோங்குகிறது.  உடலை பற்றியும், சுகாதாரம் பற்றியும் அறவே கவலைப்படாமல்  இருப்பார்கள். கட்டற்ற சுதந்திரத்தை சோம்பேறித்தனத்தால் தவறாக பயன்படுத்துவார்கள். எந்த நேரத்தை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் திணறுவார்கள். சிலர் பாதை மாறுவார்கள். நேரத்தை சரியாக  கடைபிடிக்காமல் இருக்கும் தவறு தான் வாழ்வியல் முறை மாறுவதற்கான அடிப்படை காரணம்.

2. உணவில் அக்கறையின்மை:

சுமார் இருபது வருடங்கள் வரை  பெரும்பாலும் வீட்டில் செய்த உணவையே சாப்பிட்டு வந்தவர்கள், வேலைக்கு சென்ற பின்னர் சொந்த சம்பாத்தியம் இருந்தாலும் வீட்டு சாப்பாடு கிடைக்காமல் தவிக்க நேரிடலாம். இந்த சமயங்களில் ஹோட்டல் உணவுகளையே நாடுவது, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது , காலை உணவை தவிர்ப்பது, இரவு உணவை வெளுத்து கட்டுவது, சத்தான சமச்சீரான உணவுகளை தவிர்ப்பது என உணவு முறை முற்றிலும் மாறிவிடுகிறது. 

இந்த தவறுகளால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை தவிர்ப்பதால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரியாக உடலுக்கு கிடைப்பதில்லை அதே சமயம் மோசமான உணவு பழக்க வழக்கத்தால்  உடலில் தேவையற்ற கொழுப்பும்  சேருகிறது, புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருள்களை  தொடர்ந்துச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு  அதிகரிக்கிறது. 

3.  நண்பர்கள் சேர்க்கை : 

பள்ளி, கல்லூரி நண்பர்களை தாண்டி புது இடம், புது நண்பர்கள் என  இளம் வயதில் பலருக்கும் புது சேர்க்கை   உருவாகும். நண்பர்கள் எப்போதுமே நல்ல விஷயம் தான், ஆனால் சில சமயங்களில் தவறான நண்பர்களுடன் சேர்ந்தால் வாழ்கை பாதை மாறிவிடவும் வாய்ப்புண்டு. கல்லூரி செல்லும் வரை பணத்துக்கு இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்கும் ஆனால் சம்பாதிக்க ஆரம்பித்தவர்களுக்கு தனது பணம் தானே தாரளமாக செலவு செய்யலாம் என்ற எண்ணம் பிறக்கும். மது, புகைப்பிடித்தல் போன்ற விஷயங்களில் இளம் வயதினர் பலர் சிக்கிக்கொள்வது தவறான சேர்க்கையால் தான்.

4. தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகுதல் : 

எதையும் முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், பகிர வேண்டும் என்ற ஆவல் இளம் வயதினரிடையே  மிகவும் அதிகம்.பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை எந்த அளவுக்கு அணுக வேண்டும். எந்த புள்ளியில் நிறுத்திவிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. 

தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பதிலும், தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளுவதும், தொழில்நுட்ப அப்டேட்களை விரல் நுனியில் வைத்திருப்பதும்  நல்ல விஷயம். ஆனால் அதே சமயம்  டிஜிட்டல் சாதனங்களில் அடிமையாவது நல்லதல்ல. மனதையும், உடலையும் பாதிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது மொபைலும், டிஜிட்டல் சாதனங்களும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

5. வேலைவாய்ப்பின்மை : 

வேலைவாய்ப்பின்மை ஒரு மிகப்பெரிய மன அழுத்தம் தரக்கூடிய பிரச்னை. தன்னம்பிக்கையை தளர வைக்கும் கடினமான  கால கட்டம் இது. ஒரு சிலர் வெற்றிகரமாக மன உறுதியுதியுடன் இந்த  காலத்தை கடந்தாலும், பலர்  இந்நாட்களில் தளர்ந்து விடுகிறார்கள். ஒரு நாளை எப்படி கடத்துவது என தெரியாமல் பலர் வித விதமாக யோசிப்பார்கள். சிலர் எப்போதும் மனதுக்குள் புழுங்கி கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் சோகத்தை மறைப்பதற்காக போதை வஸ்துகளை நாடுகிறார்கள்.  இவை எல்லாமே உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மனதை பாதித்து புத்துணர்ச்சியை கெடுக்கின்றன.

6. வேலைபளு : 

முன்னெப்போதும் விட தற்போதைய தலைமுறை மிக அதிகமாக இளம் வயதிலேயே  உழைக்க தொடங்குகிறார்கள், ஐ.டி உட்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும்  அதிக லாபம் என்பதையே நோக்கமாக கொண்டு ஊழியர்களை  பிழிய ஆரம்பித்திருகின்றன. உடல் உழைப்பு என்பதை விடவும் அறிவு உழைப்பு அதிகம் தேவைப்படும் நிறுவனங்களில்  நித்தம் நித்தம் புதுப்புது ஐடியாக்களை யோசித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தங்கள், சக்திக்கு மீறிய டார்கெட்டுகள் போன்றவை வைக்கப்படுவதால் வேலைபளு அதிகமாகிறது, 
இதனால் பலர் வீக் எண்ட் என்றாலே மது, சிகரெட் போதையில் திளைத்து மன அழுத்தத்தை குறைக்க முயலுகின்றனர். மன அழுத்தத்தோடு, புகை, மது ஆகியவற்றின் பாதிப்புகளும் சேர்ந்து  தாக்க ஆரம்பிக்கிறது.

அறிவு சரக்கு, கற்பனைத் திறன் போன்றவை ஒரு கட்டத்தில் தீர்ந்து விடுகிறது. இதனால் நாற்பது வயதாகும் போது, அப்போது நிறுவனத்துக்குள் நுழையும் இளைஞர்களுடன் போட்டி போட்டு பலரால் உழைக்க முடிவதில்லை. விளைவு நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இது மீண்டும் மன அழுத்தத்தில் தள்ளுகிறது. 

7. ரிலேஷன்ஷிப் சிக்கல்கள் :

ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் இளம் வயதில்  சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரிலேஷன் ஷிப் சிக்கல்கள் தான். முப்பது வயதுக்குள்ளாகவே திருமணம் முடிந்து விவாகரத்து கோருவோர்களின் எண்ணிக்கை கடந்த  பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

படிப்பு, வேலை என இயந்திரத்தனமாக வளர்ந்த மனிதர்களுக்கு, சக பார்ட்னரை எப்படி கையாளுவது என தெரிவதில்லை. கணவன் - மனைவி குடும்ப  உறவில் பிரச்னை ஏற்படும் போது உச்சக்கட்ட மன அழுத்தத்துக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். 

இதனால் மீண்டும் பலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாகிறார்கள். ரிலேஷன்ஷிப் பிரச்னைகளால் அலுவலகத்தில் பலர் சரியாக பணி புரியாமால் போவதால் அங்கேயும் மரியாதை குறைவதால் இந்த பிரச்னைகள் எல்லாம் ஒரு சுழற்சியாக சுழன்று அடிக்கும். 

8. பாலியல்  கோளாறுகள்  :

இந்தியாவில் பாலியல் கல்வி இல்லை, பாலியல்  தொடர்பான விழிப்புணர்வும் கிடையாது. ஆண்களும் சரி, பெண்களும் சரி பாலியல் ரீதியாக பாதிக்கபடுவது இந்தக் காலகட்டத்தில் தான். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாத அதே சமயம் பாலியல் குறித்த அத்தனை தவறான தகவல்களையும் புரிதல்களையும் இணையம், போலி டாக்டர்களின் நிகழ்ச்சிகள் போன்றவை வழியாக தெரிந்து கொள்கிறார்கள். இதனால் பலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பாலியல் கோளாறுகளால் தீவிர மன அழுத்தம் ஏற்படுகின்றன.  

9. உடற்பயிற்சியின்மை :

கல்லூரி வரை செல்வதற்கு முன்னதாக பெரும்பாலும் பலர் ஏதாவதொரு வகையில் விளையாடி கொண்டிருப்பார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்னை இருக்காது. ஆனால் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பலர்  தங்கியிருக்கும் இடத்துக்கும் வீடுக்கும் மட்டுமே பயணிப்பார்கள். அதுவும் இரு சக்கர வாகனம் அல்லது காரில் தான்.   உடல் உழைப்பு, உடற்பயிற்சி இரண்டும் இல்லாததால் உடலில் கொழுப்புகள் படிய ஆரம்பிக்கும். சரியான உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடல் பருமன் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடற்பருமன் வரும்போது கூடவே வரிசையில் நான்கு நோய்கள் நிற்கும். 

10. தொலைந்து போன தூக்கம்:

தற்போதைய தலைமுறையில் இளம் வயதினர் அநேகம் பேர் தூக்கமின்மை பிரச்னையால் அவதிபடுகின்றனர். நைட் ஷிப்ட் ஒரு காரணம் என்றாலும் லேப்டாப்பில் இரவு இரண்டு படம் பார்ப்பது, நைட் ஷோ தியேட்டருக்கு செல்வது, நள்ளிரவை  தாண்டியும் யாருக்காவது மெசேஜ் செய்து கொண்டிருப்பது, சமூக வலைதளங்களில் மூழ்குவது போன்றவற்றால் இரவு தூக்கம் தடைபடுகிறது.

இரவு தூக்கம் தாமதமாகும் சமயத்தில் வளர்சிதை மாற்றம் பாதிக்கபடுகிறது.  இரவு தூக்கம் தாமதமாவதால், அதிகாலை எழுந்திருக்க முடிவதில்லை, அதிகாலையில் மட்டுமே கிடைக்கும் சுத்தமான ஓசோன்  வாயுவை சுவாசிக்கும் வாய்ப்பும் பறிபோகிறது. காலையில் தாமதமாக எழுவதால் அவசர அவசரமாக வேலைக்கு செல்ல நேர்கிறது. இதனால் உடற்பயிற்சி, காலை உணவுக்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை . இதன் காரணமாக அன்றைய தினம் சுறுசுறுப்பாக செயல்பட முடிவதில்லை. 

தவறான வாழ்வியல் முறை காரணாமாக என்னென்ன நோய்கள் வருகிறது ?

1.உடற்பருமன் ,
2. வைட்டமின் டி குறைபாடு ,
3. சர்க்கரை நோய் ,
4. உயர்  ரத்த அழுத்தம் ,
5. தைராய்டு கோளாறுகள் ,
6.ஹார்மோன்கள் சமசீரின்மை ,
7.  புற்றுநோய் ,
8. செரிமான கோளாறுகள் ,
9. மன அழுத்தம் ,
10. இதய நோய்கள் ,
11. நரம்பு மண்டல பாதிப்புகள் ,
12. முதுகு வலி, மூட்டு வலி ,
13. சரும கோளாறுகள் ,
14.பாலியல் தொந்தரவுகள் ,
15. சுவாச பிரச்னைகள் .

தீர்வு என்ன? 

இளம் வயதில் சரியாக தன்னை பராமரிக்க வில்லை என்றால் பல பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக வேலைக்கு செல்லுதல், பேச்சலர் வாழ்கை, திருமணம் போன்ற பல விஷங்களை எல்லோராலும்  கடந்து வராமலும் இருக்க முடியாது. 

தனி மனித ஒழுக்கம், தனி மனித சுகாதரம், மன நலம் மற்றும் உடல் நலனில் அக்கறை, தெளிவான பார்வை, திட்டமிடுதல், மன வலிமை, உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி  வாழ ஆரம்பித்தாலே பாதி பிரச்னைகள் சரியாகிவிடும், பல்வேறு நோய்கள் வருவதையும் தடுக்க முடியும் . நீண்ட காலம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் வாழலாம். 

சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதே சமயம் மோசமான குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி போன்றவற்றுக்கு தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், உடலை தூய்மையாக வைத்து கொள்ளுதல், தன்னைச் சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்வது போன்ற, சில நல்ல பழக்க வழக்கங்களை வழக்கமாக்கி கொண்டால் அறுபதிலும் ஆரோக்கியம் உண்டு.

ஹெல்த் இன்சுரன்ஸ் அவசியம் :

ஹெல்த் இன்சுரன்ஸ் பலருக்கும் ஆபத்தான கால கட்டத்தில் ஓரளவு கை கொடுக்கும் விஷயம். எதாவது நோய் வந்தபிறகு இன்சுரன்ஸ் எடுக்கலாம் என நினைத்தால் பிரீமியம் அதிகம் கட்ட நேரிடும். இளம் வயதிலேயே ஹெல்த் நன்றாக அலசி ஆராய்ந்து அவரவர்களுக்கு ஏற்ற பாலிசிகளை எடுத்துகொள்ளும் போது பிரீமியம் வெகுவாக குறையும். எதிர்பாராத காலகட்டத்தில் அவசர அவசியத்தேவைகள்  ஏற்படும் சமயங்களில்  இன்சுரன்ஸ் கைகொடுக்கும். இன்சூரன்ஸ் தொகை, நிறுவனம் ஆகியவற்றை பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு தேர்ந்தெடுப்பது நல்லது.

ஹெல்த் செக் அப் பண்ணுங்க :

முப்பந்தைந்து வயதுக்கு மேல் தான் பலர் மருத்துவமனை வாசலுக்கே பலர் செல்லுகின்றனர். இது தவறு. மருத்துவமனை சென்றாலே பணம் செலவாகும், தனக்கு எதாவது நோய் இருக்கும் என சொல்லிவிடுவார்கள் என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. இதனால்  எதாவது பெரிய நோய் வரும் வரை மருத்துவமனை பக்கமே பலர் தலைவைத்து படுப்பதில்லை. 

வரும் முன் காப்பது சிறந்தது என்பது பலருக்கு புரிவதில்லை. ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ, சுவாச நோயோ, உடல் பருமனோ, புற்றுநோயோ எதுவாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் பரிசோதனை மூலம்  கண்டறிந்தால் இந்த நோய்கள் எல்லாவற்றையுமே தடுக்க முடியும். அதன் பாதிப்புகளை குறைக்க முடியும். 

ஆக,   25 வயதில் இருந்தே ஆண்கள், பெண்கள் இருவரும்  வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது முழு  உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குடும்பத்தில், பரம்பரையில்  யாருக்காவது மேற்சொன்ன  வாழ்வியல் நோய்கள் வந்திருந்தால்  அந்த இளைஞர்கள் கண்டிப்பாக குடும்ப மருத்துவரை அனுக்கி அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை எடுத்துகொண்டு நோய்களை தடுக்க முயற்சிப்பதே புத்திசாலித்தனம். 

தனியார் மருத்துவமனைகளில் பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்போது  சலுகை விலையில் பொதுமக்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யப்படுகிறது, ஆனால் இதை பலர் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை  

இந்தியாவில்  பரிசோதனைகள் குறித்த   தெளிவின்மை மக்களுக்கு அதிகம், எனவே தான் பல நோய்கள் வருகின்றன, ஒரு சிலர் தனக்கு எதாவது நோய் இருக்குமோ என பயந்து பயந்தே தேவையற்ற பதற்றத்ததை உருவாக்கி கொள்கிறார்கள். 

ஒருவேளை  நோய் வந்துவிட்டாலும்  அதிக பதற்றமடைகிறார்கள். முன்காப்பு சிகிச்சை குறித்தது தெளிவு வரும்போது,  எதாவது நோய் வந்தால் கூட ஆரம்பக்கட்டதிலேயே மாத்திரை, மருந்துகள்  போன்ற  சிகிச்சைகளே  தேவைப்படாமல் வாழ்வியல் முறை மாற்றத்தால் மட்டுமே பல்வேறு நோய்களை தடுத்து விட முடியும் என்ற நிலை இருக்கும்போது தேவையற்ற  பதற்றத்தை  தவிர்போம். நலமாக, மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.