Breaking News :

Wednesday, May 01
.

10 வகையான உப்புமா செய்வது எப்படி?


அவல் உப்புமா:

கால் கிலோ அவல் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அலம்பி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊறவைத்து தண்ணீரை நன்றாக வடிகட்டி ஒரு பெரிய தட்டில் பரப்பி FAN அடியில் உலரவைக்கவும். 

ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கடுகு, பெருங்காயம,கொஞ்சம் கடலை பருப்பு,  சீரகம் போட்டு பொறிந்ததும் அதனுடன் கருவேப்பிலை, கொஞ்சம் தோலுரித்த வேர்கடலை போட்டு ஒரு நிமிடம் வறுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்ஙகாயம் (5)  பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் (5) பொடியாக நறுக்கிய இஞ்சி, கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும், பிறகு அதனுடன் உலரவைத்த அவலை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு உதிர் உதிராக நன்றாக ஐந்து நிமிடம் கிளறி இறக்கி ஒரு எலுமிச்சம் புழிந்து சூடாக இருக்கும்போதே சாப்பிடவும்.

வெஜிடபிள் ரவா உப்புமா:  

ஒரு கப் ரவையை வானலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்

வானலியை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும்  கொஞ்சம் கடுகு, பெருங்காயம், கடலை பருப்பு, உளுத்தம்  பருப்பு  போட்டு சிவக்க வறுத்து,   நீள வாக்கில் வெட்டிய.  4  பச்சை மிளகாய், 2  வர மிளகாய்  கொஞ்சம் கருவேப்பிலை, கொஞ்சம் பொடியாக நறுக்கிய இஞ்சி ,  10 சின்ன வெங்காயம் உரித்து பொடியாக நறுக்கியது, கொஞ்சம் கோசு பொடியாக நறுக்கியது,  2 கேரட், 5-6 பீன்ஸ், ஒரு பெரிய உருளை கிழங்கு, 1 இன்ச் ஸைஸில் துண்டாக நறுக்கியது  பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு  நன்றாக வதக்கி 3. கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் தேவையான உப்பு போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கட்டி தட்டாமல் கலந்து     10 நிமிடம் மூடி வைத்து, திறந்து கிளறி கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லி தூவி 3 ஸ்பூன் நெய்யை பரவலாக உற்றி தட்டு போட்டு மூடி  5-10 நிமிடம்  கழித்து திறந்தால்  கம கமவென்ற சுவையான ரவா உப்புமா ரெடி
உப்புமாவா ???    என்று  கேட்பவர்களள் கூட வாசனை பார்த்து சாப்பிட ஆரம்பித்து இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிடுவார்கள்.

 மாயவரம் உசிலி உப்புமா:

வானலியில் 2 கப் அரிசி  (  நொய் அரிசியாய் இருந்தால்  நல்லது  )  ஒரு கப் பாசி பருப்பு போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்
 
குக்கரில்  அரை கரண்டி தேங்காய் எண்ணை ,  அரை கரண்டி சமையல் எண்ணை ஊற்றி காய்ந்ததும்   ஓரு ஸ்பூன்  கடுகு , ஒரு ஸ்பூன்  பெருங்காயம்,  உளுத்தம் பருப்பு ,   2-3 ஸ்பூன் கடலை பருப்பு ,  10 சிவப்பு மிளகாய் , ஒரு கொத்து கருவேப்பிலை ,  15 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ,   தேவையான உப்பு போட்டு வெங்காயம் நன்றாக வதங்கியதும் 6 கப் தண்ணி விட்டு கொதி வந்ததும் ,  அரை மூடி தேங்காய் துறுவல் வறுத்த அரிசி பருப்பை போட்டு கிளறி குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி  பிரஷர் அடங்கியதும்  திறந்து கிளறினால் கம கமவென்று உதிர் உதிராக வாசனையான உசிலி உப்புமா ரெடி.

தக்காளி வெங்காய கார சட்னி சூப்பர் காம்பினேசன்

பச்சை அரிசி மாவு உப்புமா:
 
வானலியில் 2 கப் இடியாப்பம் மாவை போட்டு நல்லா சூடாக வறுத்து எடுத்து ஆறவைத்து அதில் நெல்லிக்காய் அளவு புளியை ஒரு கப் தண்ணி ஊற்றி கரைத்து வடிகட்டி வறுத்த மாவில் விட்டு ,  தேவையான உப்பு போட்டு ,  கொஞ்சம்   தண்ணி விட்டு தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.

வானலியில் ஒரு கரண்டி நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும்  கடுகு ,  உளுத்தம் பருப்பு,  கடலை  பருப்பு ,  பெருங்காபம்   , கருவேப்பிலை ,   5-6 மோர் மிளகாய்  போட்டு நன்றாக வறுத்து,  கரைத்த மாவை ஊற்றி நன்றாக கலந்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் மூடி போட்டு வைத்து , பிறகு கை விடாமல் கிளறி கொண்டே இருந்தால் நல்லா உதிர் உதிராக உப்புமா ரெடியாகி விடும்.

உப்புமா கொழுகட்டை: (மாயவரம் ஸ்பெஷல்)

அரை கப் உளுத்தம் பருப்பு ,   கால் கப் கடலை பருப்பு  2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை  வடிகட்டி மிக்ஸியில் போட்டு இரண்டே சுத்து சுத்தி ஒன்னும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்
2 கப் பச்சை அரிசி ,  4 ஸ்பூன் துவரம் பருப்பு ,  3 மிளகாய் ,  அரை ஸ்பூன் மிளகு ,  அரை ஸ்பூன்  சீரகம் எல்லாம் மிக்ஸியில் போட்டு 4 சுத்து சுத்தி ரவை போல் அரைத்து கொள்ளவும்.

வானலியில் அரை கரண்டி நல்லெண்ணை ஊற்றி , கடகு ,  பெருங்காயம் , பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் , பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி ,   ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் 4 கப் தண்ணி ஊற்றி கொதி வந்ததும் , ஒரு கப் துறுவிய தேங்காய் ,  தேவையான உப்பு  அரைத்த. உளுந்து கடலை பருப்பு போட்டு கலந்து ஒரு கொதி வந்ததும் , பொடித்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கட்டி தட்டாமல் கிளறி கெட்டியானதும் ஒரு தாம்பாளத்தில் பரவலாக. போட்டு ஆறியதும் கொஞ்சம் மாவை எடுத்து உருட்டி மெதுவாக அமுக்கி வைக்கவும்.

இட்லி தட்டில் உருண்டைகளை இடைவெளி விட்டு தனி தனியாக வைத்து 7-8 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான உப்புமா கொழுட்டை ரெடி.

கார சாரமான வெத்த குழம்பு அல்லது ஒட ஒட. நல்லெண்ணை ஊற்றிய இட்லி மிளகாய் பொடி தொட்டு சாப்பிட்டால் சுவையாகும்.

அரிசி உப்புமா:

கும்பகோணம் ஸ்பெஷல் இது.

இரண்டு ஆழாக்கு பச்சைஅரிசி  ஒரு ஆழாக்கு துவரம் பருப்பு , 8 சிவப்பு மிளகாய,  கொஞ்சம்  மிளகு, சீரகம், சிறிதளவு கட்டி பெருங்காயம எல்லாவற்றையும்
மிக்ஸியில் போட்டு பெரிய அளவு ரவையாக உடைத்துக்கொள்ளவும்.   

குக்கரில் மூன்று கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு பெருங்காயம் பவுடர் தாளித்து கொஞ்சம் கருவேப்பிலை போட்டு 6 டம்பளர் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அதனுடன் அரை மூடி துறுவிய தேங்காயை போட்டு அரைத்து வைத்திற்க்கும் ரவையையும் போட்டு அதனுடன் 2 ஸ்பூன் நெய் விட்டு  நன்றாக கட்டி தட்டாமல் கிளறி குக்கர மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.  15 நிமிடம் குக்கரை திறந்து கிளறினால் கும்பகோணம் அரிசி உப்புமா ரெடி.

இட்லி உப்புமா:

5-6 இட்லியை எடுத்து ஒவ்வொன்றாக  வலது கையில் வைத்து  கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடு விரல்களால் கசக்கி கசக்கி  நன்றாக ரவை போல் உதிர்த்து கொள்ளவும்.

வானலியில் அரை குழி கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும், கடகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, 3 காய்ந்த நீட்டு மிளகாய் துண்டு துண்டாக,  கொஞ்சம் கருவேப்பிலை,   பெருங்காய பொடி ,   பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், மிகவும் பொடியாக நூலிழை போல் நறுக்கிய ஒரு பெரிய துண்டு இஞ்சி , மஞ்சள் பொடி, எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்ததும் 2 பெரிய வெங்காயத்தை மிகவும் பொடி பொடியாக நறுக்கி போட்டு நன்றாக சிவக்க வதங்கியதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போ ட்டு, தேவையான உப்பு சேர்த்து கை விடாமல், அடி பிடிக்காமல்
நன்றாக உதிர்த்த இட்லி சூடாகி பொல பொலவென்று வரும் வரை கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான இட்லி உப்புமா ரெடி.

பிரெட் உப்புமா:

10 -12 பிரெட் ஸ்லைசை சிறு சிறு துண்டுகளாக கைகளாள்  பிய்த்து கொள்ளவும்.
 
வானலியில் அரை குழி கரண்டி நெய் ஊற்றி உருகியதும் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காய தூள், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி இஞ்சி துண்டு, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம், தேவையான உப்பு போட்டு வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், பொடியாக நறுக்கிய 2 தக்காளி போட்டு தக்காளி வதங்கியதும் பிரெட்டை போட்டு மெதுவாக கிளறி கிளறி பிரெட் பொன்னிறமாக வரும் வரை கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் சூடான பிரெட் உப்புமா ரெடி.

சேமியா உப்புமா:

வானலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு 100 கிராம் பாம்பினோ சின்ன சேமியாவை போட்டு பொன்னிமாக வறுத்து வைக்கவும்
வானலியில்  அரை கரண்டி எண்ணை ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொஞ்சம் வறுத்த வேர்கடலை,  இரண்டாக கீறிய 2 பச்சை மிளகாய், 4-5 வத்த மிளகாய், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கி,  பொடியாக நறுக்கிய ஒரு பெரிய தக்காளி போட்டு வதங்கியதும் தேவையான தண்ணி விட்டு கொதித்ததும் சேமியாவை  போட்டு கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வானலியை மூடி 5 நிமிடம் கழித்து மெதுவாக கிளறி இறக்கினால் சூப்பரான சேமியா உப்புமா ரெடி.

கோதுமை ரவை உப்புமா:
 
ஒரு கப் சம்பா கோதுமை ரவையை வானலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்
வானலியை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும்  கொஞ்சம் கடுகு, பெருங்காயம், கடலை பருப்பு, உளுத்தம்  பருப்பு,  10-15 முந்திரி பருப்பு போட்டு சிவக்க வறுத்து,   நீள வாக்கில் வெட்டிய.  4  பச்சை மிளகாய், 2  வர மிளகாய்  கொஞ்சம் கருவேப்பிலை, கொஞ்சம் பொடியாக நறுக்கிய இஞ்சி,  20 சின்ன வெங்காயம் உரித்து பொடியாக நறுக்கியது, கொஞ்சம் கோசு பொடியாக நறுக்கியது,  2 கேரட், 5-6 பீன்ஸ், ஒரு பெரிய உருளை கிழங்கு, 1 இன்ச் ஸைஸில் துண்டாக நறுக்கியது  பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு  நன்றாக வதக்கி  4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் தேவையான உப்பு போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவையை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கட்டி தட்டாமல் கலந்து 10 நிமிடம் மூடி வைத்து, திறந்து கிளறி கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லி தூவி 3 ஸ்பூன் நெய்யை பரவலாக உற்றி தட்டு போட்டு மூடி  5-10 நிமிடம்  கழித்து திறந்தால்  கம கமவென்ற சுவையான சம்பா கோதுமை ரவா உப்புமா ரெடி.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.