கொரோனா காய்ச்சல் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டு சற்று மூச்சு விடுவதற்குள் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் கண்ணைக்கட்டுகிறது. இந்தியா முழுக்க டெங்கு பரவல் தீவிரமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் டெங்கு பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சல் என்பது ஒரு தொற்றுநோய். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது. ஆனால், டெங்கு பாதிப்பு உள்ள நபரை கடித்த கொசு மூலம் மற்றவர்களுக்கு பரவும். எனவே, கொசு கடிப்பதைத் தவிர்ப்பதே டெங்குவை தடுக்க சிறந்த வழியாகும்.
பொதுவாக அடை மழை பெய்தால் மழை நீர் அடித்துச் சென்றுவிடும். ஆனால், விட்டு விட்டு மழை பெய்வதால் தேங்காய் சிரட்டை, இளநீர் கூடு, பிளாஸ்டிக் பாட்டில், பழைய டயர் என மழை நீர் தேங்கும் எல்லா இடங்களிலும் கொசுக்கள் முட்டையிட்டு பெருகிவிடுகிறது. டெங்கு காய்ச்சலை ஏடிஸ் எஜிப்டி என்ற கொசு பரப்புகிறது. இது நல்ல தண்ணீரில் முட்டையிடும். எனவே, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தடுப்பதே டெங்குவை தவிர்க்க முதல் வழியாகும்.
நம்மால் முடிந்த வரை வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுப்பது, உள்ளாட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு சாலை போன்ற இடங்களில் மழை நீர் தேங்காமல் தடுப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை டெங்குவை தடுக்க உதவும்.
கொசு கடியிலிருந்து தப்பிக்கப் பாதுகாப்பான வழிமுறையை பின்பற்ற வேண்டும். கொசு வலை பயன்படுத்துவதுதான் மிகவும் பாதுகாப்பான முறை. வீட்டின் ஜன்னல், கதவுகளை மாலை நேரம் தொடங்குவதற்கு முன்பு அடைத்திட வேண்டும். இதனால் கொசுக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
கொசு கடிப்பதைத் தவிர்க்க முழுக்கை சட்டை, பேண்ட் அணியலாம். சில மூலிகை எண்ணெய்யைத் தடவுவது கொசு கடியைத் தடுக்க உதவும். அவற்றை முயற்சிக்கலாம்.
ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்திலும் கடிக்கும். எனவே, வீட்டில் கொசுக்கள் தங்க விடாமல் இருக்க வேண்டும். ஜன்னல் திரை, ஹேங்கரில் மாட்டி வைக்கப்படும் துணிகளுக்கு இடையே இந்த கொசுக்கள் மறைந்துகொள்ளும். இவற்றைத் தட்டி, கொசு மறைந்திருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வந்தால், இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று கவனக்குறைவாக இருந்துவிட வேண்டாம். உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. டெங்கு காய்ச்சலுக்கு மருந்து இல்லை. தடுப்பூசி இல்லை. தற்போது சில மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை மருத்துவர் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு மருந்து இல்லை. ஆனால், டெங்கு ஏற்படுத்தும் பக்க விளைவுகளைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. எனவே, மருத்துவ உதவியை நாடுவதில் தாமதிக்க வேண்டும்.
.
டெங்கு காய்ச்சல்: வராமல் தடுக்க... வந்த பின் காக்க வழிகள்!

.