என்னைப் பொறுத்தவரையில் உடலுறவு என்பது திருமணமான தம்பதிகளுக்கிடையே இரண்டு உடல்கள் மட்டும் ஒன்று சேரும் நிகழ்வாக அமையாமல், இரண்டு உள்ளங்களும் ஒன்று சேரும் ஒரு இனிய உன்னத நிகழ்வாக அமைதல் சிறப்பு.
தினம் இருமுறை மலங்கழிக்கவேண்டும். வாரம் இருமுறை (ஆண்கள் - புதனும் சனியும், பெண்கள் - செவ்வாயும் வெள்ளியும்) எண்ணெய்த் தேய்த்துக் குளித்தல் வேண்டும். உடற்சூடு குறைக்க எண்ணெய்த் தேய்த்துக் குளித்த நாட்களில் தம்பதியர் உடலுறவு கொள்ளுதல் கூடாது. ஆக மொத்தத்தில் ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் போக மீதம் மூன்று நாட்கள் (ஞாயிறு, திங்கள், வியாழன்) மட்டுமே உடலுறவுக்கு உகந்த நாட்கள் எனக் கூறிய நம் முன்னோர்கள்.
அதிலும் சில விதிமுறைகளை வகுத்தளித்துள்ளனர். மேற்கூறிய அம்மூன்று நாட்களில்… பெண்களின் மாதவிடாய் தினங்களோ, தமிழ் மாதப் பிறப்போ, பௌர்ணமியோ, அமாவாசையோ, வளர்பிறை ஏகாதசியோ, தேய்பிறை ஏகாதசியோ, விசேச பண்டிகைகளோ வந்தால் அந்நாட்களைத் தவிர்த்துவிட்டு, மற்ற நாட்களில் பதினைந்து நாட்கள் இடைவெளிவிட்டு, அதாவது மாதம் இருமுறை உடலுறவு கொள்ளுதல் மிகவும் நலம் பயக்கும்.
எனவே நம் வாழ்க்கைத் துணை கருவுற்ற பத்து மாதக் காலத்தில் (10 x 2 = 20 தடவைகள்) கருவிலிருக்கும் குழந்தைக்குப் பாதிப்புகள் நேரா வண்ணம் பாதுகாப்பான உடலுறவு கொள்ளுதல் மிக முக்கியம்.
கணவன்மார்களே… உங்கள் மனைவி எப்போதும் உங்களிடம் எதிர்பார்ப்பது இயந்திர கதியில் நிகழும் வேகம் மிகுந்த சேதம் விளைக்கும் அதீதமான உடலுறவுச் செயற்பாடுகளையல்ல… விதவிதமான தீண்டுதல்களுடன் கூடிய முன்னேற்பு புறத்தூண்டுதல்கள், இதமான உடலுறுப்பு வருடல்கள், பதமான இன்சொற்கள் நிறைந்த கொஞ்சல்கள், மிதமான பாலுறவு அசைவுகள் மூலமாகக் கிளர்ந்தெழும் உச்சகட்டப் பரவச நிலைகள் (Multi Orgasams) எனப் படிப்படியாகத் தாம்பத்தியம் நிகழ்ந்தால் தம்பதியர் இருவரும் இல்லற வாழ்வில் - வயதில் சதமடிப்பது உறுதி.
"முத்து" திரைப்படத்தில் வரும் (ஒருவன் ஒருவன் முதலாளி) எனும் பாடலில்…
"பூப்பறிக்கக் கோடரி எதற்கு…?" என்ற வரிகளுக்கேற்ப உடலுறவு மென்மையாக நிகழ்ந்தால் பெண்மை பூரிக்கும். ஆண்மை ஆர்ப்பரிக்கும்.
அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் வரும் இரு அதிகாரங்கள்…
அதிகாரம் எண்: 129.
புணர்ச்சி விதும்பல்
குறள் எண்: 1289
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
குறள் விளக்கம்:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
அதிகாரம் எண்: 111.
புணர்ச்சி மகிழ்தல்
குறள் எண்: 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
குறள் விளக்கம்
கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
விழியால் பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் முகர்ந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.
நான் எழுதிய ஒரு கவிதை இதோ…
தலைப்பு:
"மயிலிறகாய் அவள்"
கவிதை:
"மயிலிறகாய் அவள்... பேரழகுப் பதுமையாய்ச்
செதுக்கிய சிற்பமாய் உருண்ட முகஅழகும்,
செழித்த மேனியில் திரண்ட முன்னழகும்,
'பீலிபெண் சிருங்காரம் இடையறும் அத்தேகம்
சால மிகுத்துப் போயின்' என்பதற்கேற்ப
கொடியிடை எடையேறி உடைந்துவிடாமல்
செவ்வாழைத் தண்டாய் நீண்டவிரு கால்களும்,
அசைந்தாடும் தொனியில் பிண்டப் பின்னழகும்
ஒருங்கே அமைந்திட்ட ஒப்பற்றப் பேரழகி என்
மனைவியாய் வாய்த்திட்ட எங்கள் மணவாழ்வில்
மஞ்சத்தின் பாயலில் பாலியல் உச்சத்தில் நாங்கள்...
மறலி கை தீண்டா! மறந்தும் மருந்தெவும் வேண்டா!!"
பின்குறிப்பு:
பீலி - மயில்தோகை.
மறலி - எமன் அல்லது காலன்.
இரா. குப்புராஜன், ஹைதராபாத்.
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி (ganesanmatrimony.com) பார்க்கவும்