அரத்தை இயற்கையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலையின் கிழக்குச் சரிவுகளில் விளைகின்றது. இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகின்றது. அரத்தை வேர்க்கிழங்குகள் காய்ந்த நிலையில் நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும்.
தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாக அரத்தையை வெயிலில் நன்கு காயவைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி தூளை, 1 தேக்கரண்டி அளவு தேனுடன் கலந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வரவேண்டும். அல்லது ஒரு சிறு துண்டு அரத்தையை வாயிலிட்டு நன்கு மென்று சுவைக்க காரமும் விறுவிறுப்பும் உண்டாகி உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்க வேண்டும்.
அடிபட்ட வீக்கம், வலி குறைய அரத்தையை வெந்நீர் விட்டு அரைத்து பசைபோல செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.
பல்வலி, ஈறுவீக்கம் குணமாக அரத்தைத் தூளை சம அளவு பற்பொடியுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் பல் துலக்கி வர வேண்டும்.
தரையடித் தண்டிலுள்ள வேதிப் பொருள்கள் உடலைச் சூடாக்கிக் கிளர்ச்சியுறச் செய்வதுடன் ஜீரண வலுவேற்றி ஆகும். உடலியல் செயல்களைத் தூண்டுவது, அஜீரணம் போக்கும், வாந்தி எடுப்பதைத் தடுக்கும். தரையடித்தண்டின் பொடி, கசாயம் மற்றும் சாராயக் கரைசலில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
சித்தரத்தை என்கிற வகையும் அரத்தையில் உண்டு. சிற்றரத்தை என்றும் கூறப்படும். இதன் வேர்க்கிழங்கும் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.
இது சீனாவில் பெருமளவு வளர்க்கப்படுகின்றது. இதற்கு அரத்தையை விட அதிக மணமும் காரச்சுவையும் உண்டு. இதனுடைய மருத்துவப் பயன்களுக்காக வங்காள தேசத்திலும், வட இந்தியாவிலும் பெருமளவு வாணிக ரீதியாக பயிர் செய்யப்படுகின்றது.
சித்தரத்தை காய்ந்த வேர்க்கிழங்குகள், மார்புச்சளி, இருமல், பல்நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மையையும், பசி அதிகரிக்கும் பண்பினையும் கொண்டவை.