Breaking News :

Thursday, December 05
.

நல்ல பாம்பு விஷத்தை முறிக்கும் எருக்கம் செடி?


மூலிகை மருத்துவத்தில் பயன்படும் தாவரம் எருக்கம் செடி. இது அருக்கன், ஆள்மிரட்டி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.  வெள்ளெருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என 9 வகையான எருக்குகள் உள்ளதாக சித்த வைத்தியர்கள் கூறுகின்றனர்.

கடும் வறட்சியிலும் வளரும் தன்மை கொண்டது.வளமற்ற, பராமரிக்கப் படாத நிலங்கள், வயல்கள், சாலையோரங்களில் வளரும். 12ஆண்டுகள் மழையே இல்லையெனினும் நிலைத்து வளரும். பாரம்பரிய மருத்துவம் மற்றும் பாட்டி வைத்தியத்தில் எருக்கம் செடி தனியிடம் வகிக்கிறது.

ஒரு ஆள் உயரத்திற்கு கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும்.நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்து கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும்.அடியில் உள்ள இலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.

எருக்கன் செடியின் நுனி முதல் அடி வேர் வரை பால் போன்ற நீரோட்டம் இருக்கும்.செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளி வந்ததும் தானே நின்று விடும்.

இலை முட்டை வடிவத்தில் இருக்கும். 3 செ.மீ. கனம்,10 செ.மீ. நீளம், 5 முதல் 6 செ.மீ. அகலமுடையது.

எருக்கம்பால்:  

எருக்கன் பால் தலைப்பொடுகு, படை, மூட்டு வலிகள், மூட்டு வீக்கம்,மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது.

கிராமப்புறத்தில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால், அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர்.இதனால் வலி குறைவதுடன், விரைவில் பழுத்துச் சீழ் வெளிவரும் போது முள்ளும் வந்து விடும்.

தீ போல சுடும்.பட்ட இடம் புண்ணாகும்.புழுக்களைக் கொல்லும்.விஷக்கடிகளை குணமாக்கும்.நோய் எதிர்ப்பாற்றலைத் தரும்.

எருக்கம் இலை:

குதிகாலில் வலி வந்தால்,செங்கல்லைச் சூடாக்கி அதன் மீது பழுத்த எருக்கு இலையை வைத்து, அதன் மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும்.

உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால், இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும்.

இலைகளை எரித்து அதன் புகையை முகர்ந்தால்,வாய் வழியாகச் சுவாசிப்பதால் மார்புச் சளி வெளியேறும்.ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும்.

இலைச் சாற்றுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கடுகு எண்ணெயில் காய்ச்சி,படை,சொறி, சிரங்கு போன்றவற்றின் மேல் தடவினால் தோல் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இதன் இலைகள், மட்டுமல்லாது, பூக்கள், வேர், பட்டைகள், எண்ணெய் அனைத்தும் நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.

எருக்க மொட்டுகள்:

இதன் மொட்டுகள் சுக்கு, ஓமம்,கருப்பு உப்பு (black salt) ஆகியவற்றைப் பொடியாக்கி, சிறிது நீர் கலந்து பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டி, தினமும் 2மாத்திரைகள் வீதம் காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு வர அஜீரணம், பசியின்மை, வாயுக் கோளாறு,வயிறு உப்புசம் ஆகியவை கட்டுப்படும்.

எருக்கம் பூக்கள்:

காலரா, வயிற்றுப் போக்கு, வாந்தி, குமட்டல் போன்றவற்றால் உடல் பலவீனம் அடைவதிலிருந்து காக்க,2எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.

எருக்கம் வேர்

வேரைக் கரியாக்கி , விளக்கெண்ணெய் கலந்து வெளிப்புற பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். கரப்பான் கடி, பால் வினை நோய்ப் புண்கள் என ஆறாத காயங்கள் மீது தடவி வர விரைவில் குணமாகும்.

எருக்கம் பஞ்சு

பண்டைத் தமிழர்கள் இலவம் பஞ்சு தலையணைகள் பயன்படுத்த, வாங்க இயலாதவர்கள் எருக்கம் காயிலுள்ள பஞ்சு தான் தலையணைத் தயாரிக்கப் பயன்படுத்தினர்.

ஆஸ்துமா:

வெள்ளை நிறப் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். பூக்களில் உள்ள நடுநரம்புகளை நீக்கி விட்டு, வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, கிடைத்த விழுதை, மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதனால்,இரைப்பு நோய் அதிகரிக்கும் போது ஒரு உருண்டை சாப்பிட்டு, நீர் குடிக்க,உடனே தணியும்.

பாம்புக்கடி விஷ மருந்து:

நல்ல பாம்பு  கடித்து விட்டால், உடனே எருக்கம் பூ மொட்டு 5 எடுத்து , அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று தின்றால் விஷம் இறங்கும்.இதன்பின்னர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

தேள்  கடி:

சுண்டைக்காய் அளவு இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

வயிற்றுப் பூச்சி:

வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப்புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5கி. 🍯 தேனில் 3 துளி எருக்கம் இலைச் சாறு விட்டு கலந்து கொடுக்க, புழுக்கள் வெளியேறும்.

வாத வலி வீக்கம்:

எருக்கம் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி, வீக்கம், கட்டிகள் மீது வைத்துக் கட்ட,அவை குறையும்.ஆறாதப் புண்களிருந்தால்,பூக்களை உலர்த்தி பொடி செய்து புண்கள் மேல் மருந்தாகப் போட, விரைவில் புண்கள் ஆறும்.

காக்கை வலிப்பு:

இலைகளில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். உலர்த்திய பொடி 30கி, மிளகுத் தூள் 30கி,உந்தாமணி இலைத் தூள் 30கி சேர்த்துக் கலந்த சூரணத்தை, மூக்கில் பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

பல் வலி:

எருக்கன் பூ 100கி, உப்பு 10கி சேர்த்து அரைத்து வடை போல் தட்டி, உலர்த்தி,புடமிட்டு(நெருப்பிலிட்டு), சாம்பலாக்கி பல் துலக்கினால்,பல் சொத்தை,புழு,பல்லரணை,பல் கூச்சம் அனைத்தும் குணமாகும்.

காது நோய்:

எருக்கன் இலைச் சாறு 50மி.லி.உடன்,வசம்பு, பெருங்காயம்,இலவங்கம், பூண்டு -இவற்றைத் தலா 5கி அளவு போட்டு காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.இதனைச் சொட்டு சொட்டாக காதில் விட, காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியவை குணமாகும்.

பால் வினை, தொழுநோய்:

200மி.கி உலர்ந்த பூவின் பொடியோடு சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் 2வேளை சாப்பிட்டு வர, வெள்ளை, பால் வினை நோய், தொழுநோய் தீரும்

வேதத்தில் எருக்கம்.:

அதர்வண வேதத்தில் எருக்கன் செடி பற்றி கூறப்பட்டுள்ளது.

ருத்ரருடன்(சிவன்) தொடர்பு கொண்ட செடி என்பதால்,இதனை ,"புனித செடி", எனக் கருதப்படுகிறது.

"சிவமஞ்சரி", எனும் நூலில் சிவனுக்கு காலையில் பூஜிக்க சிறந்த மலர், எருக்கம் மலர் எனக் கூறப்பட்டுள்ளது.

இலக்கியத்தில் எருக்கம்:

"நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல் இலை எருக்கம், ஆயினும் உடையவை

கடவுள் பேணேம் என்னா.."—— நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று கூறாமல் ஏற்றுக் கொள்வார், என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கபிலர் கூறியுள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.