இன்று ஞாயிறு விடுமுறை வீடுகளில் குழந்தைகள் ஓய்வில் இருப்பர். அவர்கள் மாலை நேரத்தில் ஏதாவது செய்து கொடுக்கவேண்டும் என நினைத்தால், இந்தத் தயிர் பூரி செய்து கொடுங்கள். அதனை எப்படி செய்வதென்று பார்ப்போம்...
தேவையான பொருட்கள்:
சின்ன பூரி - 7-8
தயிர் - 1/2 கப்
ஓமப்பொடி/சேவ் - 1 கையளவு
வேக வைத்த பச்சை பயறு - 1/4 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கப்
புதினா சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, சீரகப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தட்டில் சின்ன பூரிகளை வைத்துக் கொண்டு, அவற்றின் நடுவே லேசாக உடைத்துவிட்டு, அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பச்சை பயிறை வைக்க வேண்டும். பிறகு அவற்றின் மேல் தயிர் ஊற்றி, வெங்காயத்தை தூவி விட்டு, பின் புதினா, கொத்தமல்லி சட்னிகளை ஒவ்வொன்றின் மேலும் ஊற்றி விட வேண்டும்.
அடுத்து அதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான தயிர் பூரி ரெடி!!!