இந்தக் கேள்வியை யார்கிட்ட கேட்டாலும் வரப்போற பதில் "வேண்டாம்.. நெஞ்சு அடைச்சு செத்துருவோம்.. கொழுப்பு சாப்பிடாதப்பா" இப்படி தான் கூறுவார்கள்.. ஆனால் இதே கேள்வியை நமது உடலிடம் கேட்டால் அது என்ன சொல்லும் தெரியுமா? வாங்க பார்ப்போம்...
முதலில் உடற்கூறியல்படி (anatomy) பார்த்தால் நமது உடலின் பெரிய உறுப்பு எது?
தோல்... இந்த தோலின் அடிப்பகுதியான hypodermis முழுவதும் கொழுப்பினால் ஆனது. இதை sub cutaneous fat என்று அழைக்கிறோம்.
சரி அதற்கடுத்த மிகப்பெரிய உறுப்பு எது?
கல்லீரல் ( liver) தான்.. அதன் முக்கிய வேலை பித்த நீரை உற்பத்தி செய்வது. பித்த நீர் எதற்கு ? உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்வதற்கு தான். மேலும் நமது செல்கள் அனைத்திற்கும் வேலி இந்த கொழுப்பு தான்..
நமது மூளை மட்டும் என்னவாம்? அதுவும் ஒரு ஒன்றரை கிலோ கொழுப்பு பிண்டம் தான். ஆக, கொழுப்பு சாப்பிட வேண்டாம் என்று நாம் கூறினாலும் உடலில் உள்ள முக்கிய மற்றும் பெரிய உறுப்புகள் அனைத்தும் கொழுப்பினால் செய்யப்பட்டவையாக இருக்கின்றனவே.
அடுத்து உடல் இயங்குவியல் (Physiology) பக்கம் போவோம்..
நமது உடல் மற்றும் மூளை இயங்க க்ளூகோஸ் கட்டாயம் தேவை என்று நாம் நினைக்கிறோம் ஆனால் நமது உடலோ நாம் உண்ணும் மாவுச்சத்தை கொழுப்பாக தான் மாற்றி சேமிக்கிறது என்பது தெரியுமா? மேலும் பெரிய பஞ்ச காலத்தில் எல்லாம் நம் முன்னோர்களை காப்பாற்றியது இந்த சேமிக்கப்பட்ட கொழுப்பு தான். நீங்கள் கொழுப்பை அதிகமாக சாப்பிட்டால் உங்கள் உடல் கொழுப்பை எரிபொருளாக மாற்றிக்கொள்ளும் என்பது தெரியுமா?
அடுத்து உயிர்வேதியியல் (Biochemistry) பக்கம் செல்வோம். உங்கள் உடல் நீங்கள் கொழுப்பை எடுக்காவிட்டாலும் சரி.. அதற்கு தேவையான கொலஸ்ட்ராலை தானே உற்பத்தி செய்து கொள்ளும் என்பது விசித்திரம் தானே.. ஆம். தினமும் 2000 மில்லி கிராம் கொலஸ்ட்ராலை உடல் உற்பத்தி செய்கிறது. மேலும் நமது மூளை கொழுப்பை முழு நேர உணவாக எடுக்கும் போது.. கீடோன்கள் எனும் கொழுப்பை எரித்து உருவாகும் எரிபொருளில் இயங்கும் சக்தி கொண்டது.
நாம் அடுத்து செல்ல வேண்டியது நாளமில்லா சுரப்பியியல் (endocrinology) பக்கம்.. ஆம்.. நமது உடலில் மாவுச்சத்தினால் உண்டாகும் க்ளூகோசை கிரகிக்க ஒரே ஒரு ஹார்மோன் தான் இருக்கிறது. அது தான் இன்சுலின். ஆனால் கொழுப்பை நம்பி இருக்கும் ஸ்டீராய்டு மற்றும் பாலின ஹார்மோன்கள் பின்வருமாறு:
1.கார்டிசால்,
2.டெஸ்டோஸ்டிரோன்,
3.ஈஸ்ட்ரோஜென்,
4.ஆல்டோஸ்டிரோன்,
5. தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பு சுரக்கும் க்ரெலின், லெப்டின் போன்ற ஹார்மோன்கள்
என பல உயிர் காக்கும் ஹார்மோன்கள் கொழுப்பாகவே இருக்கின்றனவே..
இப்போது உணவு பரிந்துரை மற்றும் ஊட்டச்சத்து (Nutrition & dietetics) இயலுக்கு வருவோம்.. விட்டமின் சி குறைந்தால் வரும் வியாதி - ஸ்கர்வி என்று தெரியும். விட்டமின் - டி குறைந்தால் வருவது ரிக்கெட்ஸ் என்று தெரியும். விட்டமின் ஏ குறைந்தால் வருவது மாலைக்கண் வியாதி. ஆனால் இந்த மாவுச்சத்து குறைந்தால் வரும் வியாதி ஏதாவது உண்டா?
கொழுப்பை உணவில் குறைத்து உண்டால் பாலின ஹார்மோன்கள் மிக குறைவாக சுரந்து நமது அடுத்த சந்ததிகள் பிறக்கும் வாய்ப்பு அருகிவிடும். கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்தால் மரணம் நிகழும் வாய்ப்பு மிக அதிகம். இப்படி எந்த மருத்துவம் சார்ந்த படிப்புகளை எடுத்து ஆராய்ந்தாலும் கொழுப்புக்கு தான் நமது உடல் படைக்கப்பட்டது என்று புலனாகும்.. பிறகு ஏன் நாம் இந்த மாவுச்சத்தை கட்டிக்கொண்டு இருக்கிறோம்..?
வேறென்ன கொழுப்பு தான் காரணம்..