தினந்தோறும் பல்வேறு உணவு வகைகள் செய்வதை பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையிர், இன்று சுரைக்காயில் சுவையான ஒரு கிரேவியை எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றி பார்ப்போம்...
தேவையான பொருட்கள்:
சுரைக்காய்– 1
வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 4 பல்
மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – முக்கால் ஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்.
செய்முறை:
முழு சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும், பின் அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி தனியாக எடுத்து வைக்கவேண்டும். அதன் பின் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் 4 பூண்டை பல் எடுத்துக் கொண்டு அதனை சிறிய உரலில் வைத்து இடித்து வைக்கவேண்டும்.
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு, பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு தட்டி வைத்துள்ள நான்கு பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்னர் வெட்டி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து, அதனுடன் மக்கள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இதனுடன் தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
சுரைக்காயில் நீர் அதிகமாக இருப்பதால் இதனை தட்டு போட்டு மூடி வைத்தால் போதும் நன்றாக வெந்துவிடும். சுரைக்காய் முக்கால் பங்கு வெந்தவுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, 5 இலிருந்து 7 நிமிடம் வேக வைக்கவேண்டும். பின்னர் கீழே இறக்கிவைத்து, அதன் மீது கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து விட்டால் போதும். சூடான சுரைக்காய் கிரேவி ரெடி.