வலிப்பு நோய்க்கு வந்தாச்சு புது டெக்னாலஜி!
எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டும் என்று அது நினைத்துவிட்டால், எந்த நேரத்திலும் வந்தே தீரும். அதுதான் வலிப்பு நோய். மக்களை அதிகம் பாதிக்கின்ற மூளை மற்றும் நரம்பு மண்டல நோய்களில் பக்கவாதம், அல்சீமர் நோய்களுக்கு அடுத்தபடியாக வலிப்பு நோய் இருக்கிறது. இந்த நோய்க்கு தொடர்ச்சியாக மாத்திரை, மருந்து கொடுக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. அவசரத்துக்கு ஊசி போடலாம்;
அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதுண்டு. என்றாலும் எதற்கும் கட்டுப்படாத வலிப்பு நோயும் உள்ளது. அந்த வகை வலிப்பைக் கட்டுப்படுத்த இப்போது புதிய டெக்னாலஜியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், அமெரிக்காவில். அந்த புதுமைக்குள் போவதற்கு முன்பாக, வலிப்பு எதனால் வருகிறது என்கிற அடிப்படை விஷயத்தைத் தெரிந்து கொள்வோமே!
சாதாரணமாக, நாம் கையையும் காலையும் அசைப்பது மூளையின் நரம்பு செல்களிலிருந்து வெளிப்படும் மின் சக்தியால்தான். ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு இந்த மின்சக்தி சரியான அளவில் இருக்கும். ஆனால், சிலருக்கு திடீர் திடீரென்று அளவுக்கு அதிகமாக மின்சக்தி உருவாகி, அருகில் உள்ள நரம்புகளுக்குப் பரவுகிறது.
பூமியின் உள் அடுக்குகளில் உண்டாகின்ற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, அப்போது மூளையில் உண்டாகின்ற இந்த அதீத மின்சக்தி மின் புயலைக் கிளப்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படும்போது, கை, கால்கள் கட்டுப்பாடில்லாமல் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம்.
மருத்துவர்கள் வலிப்புக்கான காரணத்தை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று, மூளையிலேயே உருவாவது. இன்னொன்று, மூளைக்கு வெளியில் ஏற்படும் மாற்றங்களால் மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு வருவது. ரத்த ஓட்ட பாதிப்பு, பிறவிக் குறைபாடு, மூளைக்கட்டி, மூளை உறைக்காய்ச்சல், மூளையில் கிருமித் தொற்று போன்ற காரணங்கள் முதல் வகையைச் சேர்ந்தவை.
தலையில் அடிபடுதல், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், கர்ப்பம், ரேபீஸ், டெட்டனஸ், பரம்பரைக் கோளாறு போன்றவை இரண்டாம் வகையைச் சேர்ந்தவை.
தவிர, குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாகவும் வலிப்பு வருகிறது. ரத்தத்தில் கால்சியம், குளுக்கோஸ் அளவு குறைந்தாலும் வலிப்பு வரும். பல நேரங்களில், காரணம் தெரியாமலேயே வலிப்பு வரலாம். பொதுவாக, வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, சில அறிகுறிகள் தோன்றலாம். திடீர் தலைவலி, உடல் சோர்வு, குழப்பமான மனநிலை, பதற்றம், வியர்வை, காதில் இரைச்சல், மங்கலான பார்வை, திடீரென்று பயந்து சத்தமிடுவது... போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது.
முதல்முறையாக வலிப்பு வந்தவர்கள் தகுந்த பரிசோதனைகள் செய்து வலிப்பு நோய்க்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். வலிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர 2 முதல் 5 வருடங்கள் வரை மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவைப்படும்.
அப்படியே மாத்திரைகளைச் சரியாகச் சாப்பிட்டாலும் 100ல் 30 பேருக்கு வலிப்பு மீண்டும் மீண்டும் வந்துவிடுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது ‘ஆர்.என்.எஸ். ஸ்டுமுலேட்டர்’ எனும் கருவி. Responsive Neurostimulation System என்பதன் சுருக்கம்தான் 'RNS‘.
இதயத்துடிப்பைச் சீராக்க மார்பில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவியின் மறுவடிவம்தான் இது. ஒரு செல்போன் பேட்டரி அளவில் இருக்கின்ற இந்தக் கருவி டைட்டானியத்தில் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு பேட்டரி, மைக்ரோப்ராசஸர், மின்முனைகள் கொண்ட இரண்டு மின்கம்பிகள் இருக்கின்றன. பேட்டரி உதவியுடன் மைக்ரோப்ராசஸர் மின்தூண்டல்களை உற்பத்தி செய்கிறது, மின்கம்பி அவற்றைக் கடத்துகிறது.
இந்தக் கருவியை அமெரிக்காவின் மார்சல் நகரத்தைச் சேர்ந்த 44 வயதான ஆமி ஓவன் எனும் பெண்மணிக்குப் பொருத்தி சிகிச்சையில் வெற்றி கண்டிருக்கிறார்கள், ஸ்பெக்ட்ரம் ஹெல்த் பட்டர்ஒர்த் மருத்துவமனை (Spectrum Health Butterworth Hospital) மருத்துவர்கள். இதன் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் கோஸ்ட் எலிசிவிச் இந்தச் சிகிச்சை குறித்து சொல்கிறார்...
‘‘‘வலிப்பு நோயாளியின் மண்டையோட்டில் தலைத்தோலுக்கு அடியில் இந்தக் கருவியைச் சிறு அறுவை சிகிச்சை செய்து பொருத்திவிடுவோம். இதன் மின்கம்பி முனைகளை நோயாளியின் மூளையில் எந்தப் பகுதியிலிருந்து மின்புயல் கிளம்புகிறதோ அந்த இடத்தில் பொருத்திவிடுவோம். இதில் உள்ள மைக்ரோப்ராஸஸர் மூளையின் செயல்பாட்டை இரவு பகல் பாராமல் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
மூளையிலிருந்து அதிகப்படியாக மின்சக்தி வெளிப்படும்போது அதைக் கவனித்து, உடனடியாக தன்னிடமிருந்து மின்தூண்டல்களை அனுப்பி அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும். இதன் பலனால் அந்த அதீத மின்சக்தி நரம்புகளுக்குப் பரவாது; 100 சதவீதம் வலிப்பும் வராது. நெருப்பு கிளம்பும்போதே அதைத் தண்ணீர் கொண்டு அணைக்கிற மாதிரிதான் இதுவும்’’ என்றார் எலிசிவிச். இந்த சிகிச்சை தற்போது அமெரிக்காவில் கிடைக்கிறது. விரைவில் இந்தியாவுக்கு வரும் என்கிறது மருத்துவ உலகம்!
வலிப்புக்கு முதலுதவி!
வலிப்பு வந்தவரை இடதுபக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள். சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்றவற்றைத் தளர்த்தி விடுங்கள். மின்விசிறி அல்லது கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள். அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருள்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள். மூக்குக் கண்ணாடி, செயற்கைப் பல்செட் இருந்தால் அகற்றிவிடுங்கள்.
வாயில் உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள். வலிப்பின்போது பற்களுக்கு இடையில் நாக்கு சிக்கிக் கடிபட்டுப் புண்ணாகி விடும். இதனைத் தவிர்க்க, சுத்தமான துணி அல்லது கைக்குட்டையை மடித்து பற்களுக்கு இடையில் வைக்க வேண்டும். வெட்டி இழுக்கும் கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது. வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் கொடுக்கக்கூடாது.