நறுமணம் நிறைந்த மசாலாக்கலவை தான் பிரியாணியின் தனிச்சிறப்பு.
பொதுவாக பிரியாணி என்றாலே அரிசியில் செய்யும் பிரியாணி தான் நினைவிற்கு வரும், மாறுதலாக நார்ச்சத்து நிறைந்த கோதுமை ரவை அல்லது புல்குர் வைத்து, அதே செய்முறைகொண்டு சுவையான செய்முறையில் செய்யலாம்.
காய்கறி,காளான் அல்லது கோழிக்கறி, அவரவர் விருப்பத்துக்கேற்ப செய்யலாம்.
தேவையானவை:
கோதுமை ரவை-1 கோப்பை
வெங்காயம்-1
தக்காளி-1
காய் வகைகள் -1 கோப்பை
உப்பு -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் -1 கோப்பை
தண்ணீர்-2 கோப்பை
எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி
அரைக்க:
இஞ்சி-1 அங்குலம் துண்டு
பூண்டு-4 பல்
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் -3
மிளகு-1/4 தேக்கரண்டி
புதினா-1 கைப்பிடி
மல்லி இலை -1 கைப்பிடி
தாளிக்க:
எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
நெய் -1 மேஜைக்கரண்டி
லவங்கம்-3 அங்குலம்
பட்டை-1 அங்குலம்
கிராம்பு-3
ஏலக்காய்-1
கல்பாசிப்பூ
ஜாதிபத்திரி சிறிது
முந்திரி-5
செய்முறை:
”அரைக்க” பொருட்களை ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
காய்களை சுத்தம் செய்து வெட்டி வைத்துக்கொள்ளவும்.
கோதுமை ரவையை 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கைபொறுக்கும் சூடாக வறுத்துக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் நெய்விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
எண்ணெய் ஊற்றி “தாளிக்க பொருட்களை” தாளிதம் செய்யவும்.
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
காய், காளான் அல்லது மட்டன் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும், பிறகு அரைத்த கலவை சேர்த்து வதக்கவும்.
நன்கு பச்சைவாடை மாறும் சமயம் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
தேங்காய்ப்பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
வறுத்த கோதுமை ரவை சேர்த்து கலக்கவும், மிதமான தீயில் மூடிவைத்து வேகவைக்கவும் அல்லது, 1 விசில் வரை விடவும்.
கொத்தமல்லி, புதினா, வறுத்த முந்திரி, நெய், எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி விட்டு, கிளறி சூடாக பரிமாறவும்...