ரவை பொங்கல் செய்வது எப்படி?
தேவையானவை:
ரவை - 2 கப்
பச்சைப் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள் :
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் வெறும் கடாயில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.
மீண்டும் கடாயில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து,ஒரு கப் ரவைக்கு இரண்டேகால் கப் தண்ணீர் என ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.
தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு,வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.இப்போது சுவையான ரவை பொங்கல் தயார்.
குறிப்பு : நீண்ட நேரம் அடுப்பிலேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்புமாவாக மாறிவிடும்.இதற்கு தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.