வடகம் குழம்பு செய்வது எப்படி?
தேவையானவை:
வறுத்த வெங்காய வடகம் - 6
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க -
மிளகாய் வத்தல் - 3
கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க ....
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க ....
தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
செய்முறை
புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்து அடுப்பை அணைக்கவும்.
அதனுடன் சீரகம், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்...
நன்கு ஆறியதும் மிக்ஸ்சியில் பொடி பண்ணிக் கொள்ளவும். தேங்காய் துருவலை தனியாக மிக்ஸ்சியில் அரைத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் வெந்தயம், புளித்தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு, திரித்து வைத்துள்ள பொடி மேலும் ஒரு கப் (200 மில்லி) தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். வடகத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ற படி சேர்த்துக் கொள்ளவும்.
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியில் வறுத்த வெங்காய வடகத்தை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான வெங்காய வடக குழம்பு ரெடி.