Breaking News :

Tuesday, December 03
.

திரைப்படம் ஜீப்ரா பிளாக்பஸ்டர் வெற்றி!


இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா.

புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.   தயாரிப்பாளர் தினேஷ் பேசியதாவது…

பத்திரிக்கை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில்  வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது அவரிடம். இந்தியாவின் நல்ல இயக்குநர் ஆகும் திறமை அவரிடம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் பாராட்டி இருந்தீர்கள். உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. முதல் படமே மிகப்பெரிய பட்ஜெட்டில் தரலாம் என நம்பிக்கை வந்துள்ளது.  அந்த நம்பிக்கை தந்ததற்கு அனைவருக்கும் நன்றிகள்.

விநியோகஸ்தர் ரகுபதி பேசியதாவது…

ஜீப்ரா டிரெய்லர் வந்தவுடனே இந்தப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். தீபாவளிக்கு வரவேண்டிய படத்தை, தள்ளிக் கொண்டு வந்தோம். லக்கி பாஸ்கர் சாயலில் இருந்தாலும், விமர்சகர்கள் கதை புரிந்து பாராட்டுவார்கள் என நம்பினோம். அது போல் உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இயக்குநர் மிக அருமையாகப் படத்தைத் தந்துள்ளார். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.

எடிட்டர் அனில் கிரிஷ் பேசியதாவது…

15 வருட கனவு நனவாகியுள்ளது. 15 வருடம் முன்பு கோயம்புத்தூரிலிருந்து வந்து நானாக வளர்ந்து இந்தப்படத்தில் எடிட்டராக பணியாற்றியுள்ளேன். நான் யாரிடமும் வேலை செய்ததில்லை, எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன சின்னதாக ஷார்ட் ஃபிலிம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடத்தை அடைந்துள்ளேன். 2018 ல் ஈஸ்வரை மீட் செய்தேன். அவருடனான டிராவல் மறக்க முடியாதது. பென்குவின் படத்தை என்னை நம்பி தந்தார். இப்போது ஜீப்ரா. பாலா சார், தினேஷ் சார் எங்களுக்கு ஆதரவு தந்ததால் தான் இந்தப்படம் உருவானது. எனக்கு இந்த வாய்ப்பை தந்த ஈஸ்வருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். சத்யராஜ் சார் இருந்தாலே ஷூட் கலகலப்பாக இருக்கும். அவருடன் வேலை பார்த்தது ஆசீர்வாதம். சின்ன பட்ஜெட்டில் ஆரம்பித்த படம் பாலா சாரின் விஷன் இந்தப்படத்தைப் பெரிய படமாக்கியுள்ளது. உங்கள் ஆதரவிற்கு நன்றி.

டப்பிங் ரைட்டர் அசோக் பேசியதாவது…

பாலா சார் மூலம் தான் இந்த வாய்ப்பு வந்தது. இந்தப்படம் பார்த்தேன், படம் பார்த்த போதே, இந்தப்படம் செய்ய வேண்டும் எண்ணம் வந்தது. அப்போது லக்கி பாஸ்கர் வரவில்லை மிகவும் புதிதாக இருந்தது. கதாபாத்திரங்கள் அத்தனையும் அழுத்தமாகச் சிறப்பாக இருந்தது. அதைத் தமிழில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன் நன்றி.

திரைக்கதை எழுத்தாளர் யுவா பேசியதாவது..,

ஒரு சின்னபடமாகத் தான் இதைத் தொடங்கினோம். பெரிய படமாக ஆக்கிய பாலா சார், ஈஸ்வர் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. இப்படத்தைப் பெரிய அளவில் ஆதரவு தந்து வெற்றி பெற வைத்த  உங்களுக்கு நன்றி.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் பேசியதாவது..,

இங்கு தான் என் பயணம் தொடங்கியது. இங்கு நான் மற்ற படங்களின் விழாக்களை வேடிக்கை பார்த்துள்ளேன். என் முதல் படம் பென்குவின் கொஞ்சம் தவறிவிட்டது. அதன் முழுப்பொறுப்பும் எனக்குத் தான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத் திருத்திக்கொண்டு தான், இந்தக்கதையைத் துவங்கினோம். பென்குவின் என்னை மைனஸ் 1 க்கு கொண்டு சென்று விட்டது. அதிலிருந்து மீண்டு வர ஒரே ஒரு முறை வேறு ஒரு கதை செய் என எல்லோரும் சொன்னார்கள் சரி செய்வோம் என்று தான் இந்தக்கதை ஆரம்பித்தது. பாலா சார், தினேஷ் சார் இருவரிடம் கதை சொன்ன போது, எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன், உடனே செக் தந்தார்கள் எனக்குக் கனவு மாதிரி இருந்தது. இந்தப்படம் இங்கு தான் செய்வதாக இருந்தது. ஆனால் அப்போது ஃபினான்ஸியலாக முடியவில்லை, அதனால் தெலுங்குக்குப் போனது.  அங்கிருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் செய்தோம். தியேட்டரில் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி உங்களால் தான் உங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சத்ய தேவ் பேசியதாவது…

தமிழ்நாட்டுடன் எனக்கு ஸ்பெஷல் கனக்சன் இருக்கிறது. தமிழ்ப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படம் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஜீப்ரா மூலம் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. உங்கள் பாராட்டுக்கள் பெரிய ஊக்கம் தந்துள்ளது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.  சீக்கிரம் தமிழ் கத்துக்கிறேன். இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த சத்யராஜ் சாருக்கு நன்றி. இயக்குநர் ஈஸ்வர் இந்தப்படத்திற்கு 800 பக்க திரைக்கதை எழுதியிருந்தார். அவர் மியூசிக், ரசிகர்கள் ரியாக்சன் முதற்கொண்டு டீடெயிலாக  எழுதியிருந்தார். அவர் எழுதியது அப்படியே தியேட்டரில் நடந்தது. கண்டிப்பாக அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார்.  அனில்  எடிட்டிங் குறித்து தனியாகப் பாராட்டுகிறார்கள். ரவி பஸ்ரூர் மியூசிக் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி.

தயாரிப்பாளர் பால சுந்தரம் பேசியதாவது…

இது தான் என் முதல் மேடை. Old Town Pictures க்கு இதை முதல் படமாகச் செய்ய நினைத்தது ஏனென்றால், நான் கடலூர்க்காரன், ஓல்டவுன் எங்கள் ஊர், அதை எங்காவது கொண்டு வந்துவிடுவோம் என்று தான் இந்த டைட்டில். ஈஸ்வர் இந்தக்கதை சொன்னவுடன் கண்டிப்பாக இதை நாம் செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. தினேஷ் தான் புரடக்சனுக்கு என்னை இழுத்து விட்டார். இந்தக்கதை கேட்டவுடன், இதை எப்படியாவது பெரிதாக செய்ய வேண்டும் என நினைத்தோம். தமிழ் மலையாளம் எல்லாம் சேர்த்துத் தான் செய்ய நினைத்தோம். ப்ளான் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே நிறையப் பிரச்சனை, இந்தக்கதையைத் தமிழில் எல்லா நடிகர்களிடமும் சொல்லியுள்ளோம். இந்தக்கதையில் ஒரு வரி மாற்றக்கூடாது அதை ஒத்துக்கொள்பவர்கள் தான் நடிகர்கள் என முடிவு செய்தோம். சத்ய தேவ் அவ்வளவு உற்சாகமாக வேலை செய்தார். ஈஸ்வர் மாதிரி ஒரு உழைப்பாளி இருக்க முடியாது. அசுரத்தனமாக உழைத்தார். அனில் அற்புதமான எடிட்டர்.  பெரிய தடைகளைத் தாண்டி இந்தப்படத்தைச் செய்துள்ளோம்.  எங்கள் டீமில் எல்லோருக்கும் அடையாளமாக இருந்தது ரவி பஸ்ரூர்  மற்றும் சத்யராஜ் சார் மட்டும் தான். இப்போது எங்கள் பெயரும் தெரியுமளவு படத்தைத் தந்துள்ளோம். இந்தக்கதை தந்த ஈஸ்வருக்கு நன்றி. சத்ய தேவ், தனஞ்சயா தந்த புரமோசன், உழைப்பு, வேறெந்த நடிகரும் தர மாட்டார்கள். அவ்வளவு உழைத்தார்கள். அவர்களுக்கு நன்றி. இக்கதையில் உழைத்த யுவாவிற்கு நன்றி. எங்களுக்கு முழு ஆதரவாக நின்ற சத்யராஜ் சாருக்கு நன்றி. எங்களுக்கு ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது…

நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாஸிடிவ் ரிவ்யூஸ் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியில் ஹவுஸ்புல் ஆகிறது. எல்லாப்பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன் ஆனால் இன்னும் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை. இப்படத்தில் சத்ய தேவ் என்னை தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி. இந்த டீமே அற்புதமான டீம். தமிழில் இப்போது பிஸியான ஆள் அசோக்தான். பான் இந்தியப் படங்கள் அதிகமானவுடன், இவர் வேலை அதிகமாகிவிட்டது. ஒரு படத்தில் எடிட்டர் பற்றிப் பாராட்டுகிறார்கள் என்றால், அவர் உழைப்பு அப்படிப்பட்டது.  

இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார். படத்தின் மேல் சத்யா காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரியது. அவ்வளவு உழைத்திருக்கிறார். படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். படத்திற்கு பெரும் ஆதரவு தந்த, உங்கள் அனைவருக்கும் நன்றி.
Padmaja Films Private Ltd and Old Town Pictures, சார்பில் எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் ஜெனிபர் பிசினாடோ கதாநாயகிகளாக நடிக்க, மூத்த நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சத்யா, சுனில் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

KGF படப்புகழ் திரு.ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் சுமன் பிரசார் பாகே இணை தயாரிப்பாளராகவும், சத்யா பொன்மர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மீராக் வசனம் எழுத, படத்தொகுப்பை அனில் கிரிஷ் கவனித்து இருக்கிறார்கள்.

இந்த பான் இந்திய திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகர்கள்: சத்யதேவ், டாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சத்யா, சுனில் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு: எழுத்தாளர், இயக்குனர்: ஈஸ்வர் கார்த்திக் கூடுதல் திரைக்கதை: யுவா தயாரிப்பாளர்கள்: எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம் : Padmaja Films Private Ltd மற்றும் Old Town Pictures
இணை தயாரிப்பாளர்: சுமன் பிரசார் பாகே ஒளிப்பதிவு : சுமன் பிரசார் பேகே
இசை: ரவி பஸ்ரூர்
எடிட்டர்: அனில் கிரிஷ்
வசனங்கள்: மீராக்
சண்டைக்காட்சிகள்: சுப்பு ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வினி முல்புரி, கங்காதர் பொம்மராஜு
மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், சிவா ( AIM )

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.