Breaking News :

Friday, July 12
.

Young & Beautiful திரைப்படம்


பிரெஞ்ச் இயக்குநர் François Ozon-ன் திரைப்படம் இது.  பொதுவாக இவரின் திரைப்படங்களில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதே சமயத்தில் படம் ஒன்றும் மோசமாக இருக்காது. முக்கியமான இயக்குநர்களில் இவரும் ஒருவர்.

தந்தையை பிரிந்து வாழும் தாய், தன் இளையமகனையும்,  மகளையும் நேசித்து வாழும் தாய், சந்தோஷமான குடும்பம், திறமையான தாய், மகள் இஸபெல் 17 வயதாகும்போது அவள் வாலிப பருவத்தின் வாயிலை கடக்கும் போது அங்கு ஒரு சுனாமியே வீசி விட்டது.

பெண்களுக்கு கன்னித் தன்மையை இழப்பது என்பது மிகப்பெரிய நிகழ்ச்சி ஆகும். தற்சமயம் மேற்கத்திய கலாச்சாரத்தில் அவர்கள் கன்னி தன்மையை உதறிவிடவே அவசரப்படுகிறார்கள். கதாநாயகி இஸபெல் முதல் முறையாக தன்னை இழக்கும்போது அவள் தனக்குத்தானே முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக, தன் செயலுக்கு தானே பொறுப்பு ஏற்றுக் கொண்டதாக பெருமிதம் கொள்கிறாள். 

அதன் பின் அவள் தன்பாட்டியின் பெயரில் வெப்சைட் உண்டாக்கி தனது அழகிய நிர்வாண படங்களை வெளியிட்டு, அதன் மூலம்  வாடிக்கையாள‌ர்களை தேர்வு செய்வதும், பேரம் பேசுவதும் அதற்கான இடம் ஏற்பாடு செய்வதும், அதற்காக தன்னை ஒப்பனை செய்து கொள்வதும் அவளுக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால் பணம் கைக்கு வந்ததும் அங்கே அரங்கேறும் உடல் ரீதியான தொடர்பு அவளை பெரிதும் பாதிக்கவில்லை. அவளை தேடி வரும் வாடிக்கையாளர்களை சமாளிப்பதே அவளது குறிக்கோள். பணம் வசூலிப்பதிலும் கறாராக இருக்கிறாள். பணம் அவளது குறிக்கோள் இல்லை. அவள் தேவையும் இல்லை. தாயின் அரவணைப்பிலிருந்து வெளிவந்து ‘‘தான்’’ தனக்குத்தானே பொறுப்பு என்று நிலை நாட்டிக்கொள்ள அவள் எடுத்த வழி தான் இது.

அப்படி ஒரு சமயம்  ஜார்ஜ் என்ற  வயதானவரை வாடிக்கையாளராக சந்திக்க நேர்கிறது.  அவர்  அவளை உறவுக்காக தேடி வருகிறார். ஆனாலும் மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கிறார். அவளை அவளாக பார்க்கிறார். பார்த்து, தொட்டு அவளை மதித்து பழகுகிறார். அவளுடன் உறவு கொள்ள வயாக்ரா போன்ற மாத்திரைகளை நாடுகிறார். ஒரு கட்டத்தில் அதீத தொடர்பு அவர் உயிரை பறித்து விடுகிறது. 

இஸபெல் மிகவும் பயந்து போகிறாள்.  அங்கிருந்து தப்பிச் சென்றாலும் போலீஸ் தேடுதலில் கண்டுபிடிக்கப்படுகிறாள். அவளிடம் பணம் இருப்பது தெரியவருகிறது. தாய் பதற்றமடைகிறாள். மகளை அடித்து விடுகிறாள். ஆனாலும் உடனே மன்னிப்பும் கேட்டுவிடுகிறாள். அவள் வயது காரணமாக போலீஸ் அவளை கண்டித்து பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர்.

மீண்டும் பள்ளிக்குச் செல்கிறாள். அங்கே அவள் வயது ஒத்த இளைஞர்களுடன் பழகுகிறாள். ஆனாலும் அவளுக்கு செக்ஸ் என்பது விருப்பமாக இல்லை. 

தந்தையை பிரிந்து வாழும் தாய் அவளது காதலனோடு இருப்பதை பார்க்கிறாள். அது அவளை பாதிக்கவே இல்லை. ஆனாலும் தன்னுடைய தாய் தனக்கு அவள் காதலனை பற்றி தெரிவிக்கவில்லையே என்றுதான் ஆதங்கப்படுகிறாள். இளம் தாய் தன் காதலனுடன் தன் மகளைப் பார்த்ததும் பதற்றம் அடையவில்லை. அவளுக்கு மகள் மீது நம்பிக்கையும்,  தன் மீது நம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது.

தாயின் சிநேகிதியோ தன் கணவனை இஸபெல்லுடன் அனுப்பி வைக்க தடுமாறுகிறாள். இஸபெல் தன் கணவனை மயக்கிவிடுவாளோ என்று பயப்படுகிறாள் ஏனென்றால்  அவள் இளமையும் அழகும் அவளை தடுமாற வைக்கிறது. ஆனால் மற்ற பெண்கள் தங்கள் விருப்பத்தையே அவள் உருவில் ஈடுபடுத்தி பார்க்கிறார்கள். ஆனாலும் அவள் அவளாகத்தான் இருக்கிறாள்.

கடைசியாக இறந்துபோன ஜார்ஜின் மனைவி அவளை சந்திக்கிறாள். ஜார்ஜின் இறப்புக்கு அவள் காரணம் என்ற குற்ற உணர்வை தூக்கி எறிய செய்கிறாள். அவள் அவளை நிரூபிக்க தேர்ந்தெடுத்த வழிமுறைக்காகவும் அவள் குற்றம் ஏதும் செய்துவிடவில்லை என்று அவளை நம்பச்செய்கிறாள்.

இந்த அழகிய இளம் பெண் மனநல மருத்துவரையும் சந்திக்கிறாள். அவரோ பெற்றோரை விட குறை களையவரும் குழந்தைகளிடமே நெருங்கி அவர்களை பக்குவமடைய செய்கிறார்.

ஒரு வருடம், 4 சீசன், 4 பாடல்கள் ஒரு இளம் பெண் பருவ மங்கையாக மலருகிறாள். அவள் அடையும் வேதனைகள், அவள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, அதில் காணும் சோதனைகள் அவளை சுற்றியுள்ளோரின் மனநிலை, அவளிடம் அவர்கள் பழகுவது எல்லாமே இயற்கைதான். நிர்வாண காட்சிகளும், விரசமான காட்சிகளும் இடையிடையே ஊடுருவினாலும் இஸபெல் தனித்து நின்று மனதை கவருகிறாள். மீண்டும் அவள் அந்த மன நிலையிலிருந்து விடுபட்டு சகஜ நிலைக்கு வரமாட்டாளா என நம்மை ஏங்க வைக்கிறாள். 

இது ஒரு சமூக மாற்றங்களுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. ஒரு பெண் பெண்ணாக வளருவதில் உள்ள சிக்கல்கள், அவள் எதிர்கொள்ளும் மனநிலைகளை உள்ளது உள்ளபடி படமாக்கியுள்ளனர்.

Thanks to Mr.Rajendram

 

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.