இசையமைப்பாளர் இளையராஜா டி.எம்.எஸ்-க்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், டி.எம்.எஸ் பாடிய ஒரு பாடலை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு, எஸ்.பி.பி-யைக் கொண்டு மீண்டும் பாட வைத்த சம்பவத்தை இப்பதிவில் காணலாம்.
இளையராஜாவின் இசையை விரும்பாத மக்கள் ஒருவரும் இல்லை என நம்மால் நம்பிக்கையுடன் கூற முடியும். இத்தனை ஆண்டுகளில் இளையராஜா இசையில் நிகழ்த்திய ஆச்சரியம் சொல்லில் அடங்காதது. தனது இசைக்கும், பாடல் வரிகளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் பாடகர்களை பயன்படுத்தியதன் மூலம் இளையராஜா கண்ட வெற்றிகள் ஏராளம்.
ஆனால், பழம்பெரும் பாடகரான டி.எம்.எஸ்-ஐ, இளையராஜா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும், அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனவும் ஒரு கருத்து இருந்து வருகிறது. இந்நிலையில், தனது இசையில் டி.எம்.எஸ் பாடியை ஒரு பாடலை நீக்கிய இளையராஜா, அதனை எஸ்.பி.பி கொண்டு மீண்டும் பாட வைத்த சம்பவத்தையும், அதற்கான காரணத்தையும் இப்பதிவில் பார்க்கலாம்.
1979-ஆம் ஆண்டு டி. யோகானந்த் இயக்கத்தில், சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, ரஜினிகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நான் வாழவைப்பேன்’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் ‘என்னோடு பாடுங்கள், நல்வாழ்த்து பாடல்கள்’ என்ற பாட்டு இடம்பெற்றிருக்கும். இப்பாடலை எஸ்.பி.பி பாடியிருப்பார். ஆனால், எஸ்.பி.பி-க்கு முன்னதாக இப்பாடலை டி.எம்.எஸ் பாடியிருந்தார்.
டி.எம்.எஸ் பாடியதை திரைப்படத்தில் இருந்து நீக்கியதாக இளையராஜா மீது அன்றைய காலத்தில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால், டி.எம்.எஸ் பாடியதில் திருப்தி இல்லாததால் தான் இளையராஜா அதனை நீக்கியதாகவும் ஒரு தரப்பினர் கூறுவார்கள். கதையின் படி, கே.ஆர். விஜயாவின் பிறந்தநாளின் போது இப்பாடலை சிவாஜி கணேசன் பாடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், சிவாஜி கணேசன் தனது உடல்நிலை பாதிப்பால் அவதிப்படும் சூழலில் பாடுவது போன்று பாடல் உருவாக்கப்பட்டிருக்கும். அதன்படி, மகிழ்ச்சிகரமான இசையில், சற்று சோகமான குரலில் பாடல் ஒலிப்பது போன்று இருக்கும்.
இப்பாடலை முதலில் பாடிய டி.எம்.எஸ்-ன் குரலில் சிறு நடுக்கம் இருப்பதை உணர முடியும்.
ஆனால், எஸ்.பி.பி-யின் குரலில் இளமையுடன் சோகம் ஒருசேர இருப்பதை நம்மால் உணர முடியும். எனவே, டி.எம்.எஸ் பாடலைப் பாடிய விதத்தில் திருப்தி இல்லாத காரணத்தினால் தான் இளையராஜா அதனை படத்தில் இருந்து நீக்கியதாக சினிமா ஆர்வலர்கள் கூறுவார்கள்.
மேலும், இதே படத்தில் இடம்பெற்றுள்ள ’பொன்வண்ணமே, அன்பு பூவண்ணமே’ பாடலை டி.எம்.எஸ் தான் பாடியிருப்பார். இளையராஜா நினைத்திருந்தால் டி.என்.எஸ்-ஐ முற்றிலும் தவிர்த்திருக்கலாம் எனவும் அவரது ரசிகர்கள் கூறுவார்கள்.
எனவே, நல்ல கலைஞர்களுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் கடந்து படைப்பு நல்ல முறையில் மக்களை சென்றடைய வேண்டுமென்ற அக்கறை இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.