முப்பத்து ஏழு வருடங்கள். இரண்டு ஆளுமைகள். நூறு பேட்டிகள். ஒரு மாநிலத்தின் எதிர்ப்பு. தமிழகம் மட்டுமல்ல நாடெங்கும் ஓர் எதிர்பார்ப்பு. தக் லைப். நாயகன் படத்திற்குப் பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் இணையும் படம் என்பதால் கவனம் உச்சம், நாயகனைத் தொடுவது எங்கள் நோக்கமல்ல. இனி தக் லைப்பைத் தாண்ட வேண்டும் என்று உழைக்கிறோம் என்று பேசினார் கமல். அதைத் தாண்டுவது இருக்கட்டும். முதலில் அதைத் தொட்டதா?
ஒரு மாறுதலுக்கு இது தில்லியில் நடக்கும் கேங் வார் என்று வைத்துக் கொள்ளலாம். அப்படித் தான் தொடங்குகிறது. யாகூசா என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டு முதல் காட்சியில் வருகிறார். பின்னர் படம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஒரு துப்பாக்கிச் சூட்டில் தந்தையை இழந்த அமரன் (சிம்பு) என்ற சிறுவனைத் தனது மகன்போல் வளர்க்கிறார் கமல். அதில் தனது தங்கையைக் காணாமல் போக்கிய சிம்புவிற்கு அவளை மீட்டுத் தருவதாக வாக்களிக்கிறார். அவரையும் ஒரு வாரிசுபோல உருவாக்குகிறார். இதில் கமலின் அண்ணனான நாசர், அவர் கூட்டத்தைச் சேர்ந்த ஜோஜு ஜார்ஜ், பக்ஸ், போன்றவர்களுக்கு மாற்று கருத்து. கமலுக்கும் சிம்புவிற்கும் பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காய நினைக்கிறார்கள். சிம்பு என்ன செய்தார். அவரது தங்கையை அவருடன் கமல் சேர்த்து வைத்தாரா. சக தாதாவான மகேஷ் மஞ்சரேக்கர், அலி பைசல் இவர்களுடன் மோதிய மோதல் என்ன ஆனது இது எல்லாம் தான் தக் லைப்.
ரங்கராயச் சக்திவேலாகக் கமல். விதவிதமான கெட்டப்புகளில் வருகிறார். சண்டை போடுகிறார். திரிஷா அபிராமியுடன் கொஞ்சுகிறார். சில இடங்களில் நடிக்க முயல்கிறார். ஆமாம் இதில் அவர் நடிப்பதற்கு வாய்ப்புகள் அவ்வளவு தான். இது போன்ற பாத்திரங்கள் எல்லாம் அவருக்குத் தூக்கத்தில் செய்யக்கூடிய விஷயம். ஒரு நல்ல விஷயம் அவரது டீ ஏஜிங். அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள். இளமையான கமலைப் பார்க்கப் பளிச்சென்று இருக்கிறது. அமராகச் சிம்பு. தனது ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம் விட்டுவிட்டு ஒரு பாத்திரமாக மட்டும் வந்து போவது வித்தியாசமாக இருக்கிறது. கமல் போன்ற ஒரு ஆளுமையுடன் நடிக்கிறோம் அடிக்கிறோம் என்றெல்லாம் யோசிக்காமல் நடித்ததற்கே பாராட்டு. இருவரும் குழந்தையிலிருந்து நடித்துக் கொண்டிருப்பதால் அவரிடம் ஒரு மிரட்சி தெரியவில்லை. கமலிடம் மட்டும் அடி வாங்குவது போல் காட்சி வைத்ததில் தெரிகிறது இயக்குனரின் சாமர்த்தியம். அதில் மட்டும்.
மனைவி ஜீவாவாக அபிராமி. காதலி இந்திராணியாகத் திரிஷா. மகள் மங்கையாகச் சஞ்சனா, இதைத் தவிரத் தனிகலபரணி, அசோக் செல்வன், சேத்தன், எனப் பலர். தாதாக்கள் குறித்த கதை என்று முடிவு செய்தபிறகு சண்டைக்காட்சிகள் தவிர்க்க முடியாதது. அந்த வகையில் இந்தப்படத்தில் கார் துரத்தல்களும், சண்டைக்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மணிரத்னம் படத்தில் சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு நன்றாக இருந்தது என்று சொல்வது சிறு பிள்ளைத் தனம். அக்கிரமம் என்று குரல் கொடுப்பவர்களுக்கு இந்தப் படத்தில் அதை மட்டுமே சொல்ல முடியும். முதல் அரை மணி நேரம் படத்தின் ஓட்டத்தோடு நம்மால் ஓட்ட முடிந்தது. இருபது வருடங்களுக்குப் பிறகு என்று போட்ட அடுத்த காட்சியிலிருந்து படத்திலிருந்து விலகத் தொடங்குகிறோம். என்ன தான் பாசம் காட்டி வளர்த்தாலும் கமல், சிம்பு இடையே உள்ள ஒரு அந்நியோன்னியம் படத்தில் தென்படவில்லை. ஒரு சிறிய விஷயத்தில் இருவரும் முட்டிக் கொள்வதும் நடக்கும் மனமாற்றங்களும் திரைக்கதைக்கு வசதியாக எழுதப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.
வில்லன் மகேஷ் மஞ்சரேக்கரைப் பற்றி அவ்வளவு சிலாகித்துப் பேசினார் கமல். இதில் அவர் வில்லன் என்றால் எங்கே என்று தான் தேட வேண்டியதிருக்கும். அந்த அளவு தான் அதன் வடிவமைப்பு. அலி பைசல் பாத்திரமும் அப்படித் தான். வருகிறார். காணாமல் போகிறார். கடைசியில் வருகிறார். ஆள் காலி. இப்படி வலுவில்லாத வில்லன்களை எதிர்க்கத் தான் கமல் சிம்பு கும்பல் போராடுகிறதா என்ன. அதுவும் இரண்டு தலைமுறையாக,
அது மட்டுமல்லாமல் காவல் நிலையத்தில் அதிகாரியின் அறையில் அமர்ந்து மீட்டிங் போடுமளவு இந்தக் கும்பலும் வலுவானது என்றால் அது நிறுவப்படவே இல்லை. இந்தக் கால ரசிகர்களுக்குச் சுட்டிக் காட்டினால் போதும் புரிந்து கொள்வார்கள் என நினைத்து விட்டார் போல மணி ரத்னம்.
முதலிலேயே சொன்னது போல வலுவில்லாத கதை திரைக்கதையை தூக்கி நிறுத்தப் போராடுபவர்கள் ஏ ஆர் ரகுமானும், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனும் தான். இவர்கள் இருவரால் தான் படத்தைச் பல இடங்களில் நெளியாமல் பார்க்க முடிகிறது. குறிப்பாகச் சண்டைக்காட்சிகள், பனி மூடிய பகுதிகளில் ஒளிப்பதிவு தரம். ஆனால் அந்தக் காட்சிகளில் கிராபிக்சில் கோட்டை விட்டு விட்டார்கள். பனிச்சரிவு காட்சிகள் எல்லாம் தேவையே இல்லாத ஆணி. திரிஷாவின் கதா பாத்திரம் நாயகன் சரண்யாவின் நீட்சி என்று வைத்துக் கொள்ளலாம். அதில் விடுதிபோல் இதில் பார் டான்சராக இருக்கும் அவரைக் காப்பாற்றி வந்து தனது பாதுகாப்பில் இருக்க வைக்கிறார் கமல். இது தொடர்பாக அபிராமிக்கும் கமலுக்கும் நடக்கும் சம்பாஷணைகளும் காட்சிகளும் சற்று புன்னகை வரவழைக்கிறது. ஆனால் சிம்பு கமல் திரிஷா உறவுக் குழப்பங்களைப் பற்றிப் பேசவே கூடாது.
அவ்வளவு பிரபலமான தாதாவான கமலுக்கு நடக்கும் ஒரு விஷயத்திற்கு எந்தவிதமான பின் விளைவும் கிடையாதா.
அப்படியே மக்கள் ஏற்றுக் கொண்டுவிடுவார்களா. தனது படத்தில் லாஜிக் குறித்தெல்லாம் மக்கள் பேசுவார்கள், எழுதுவார்கள் என்று நினைத்தே பார்த்திருக்க மாட்டார் மணி ரத்னம். பின்னணி இசையில் அசத்தினாலும் ரகுமான் பாவம். படத்தில் வரப் போவதில்லை என்றால் ஒவ்வொரு பாடலும் எதற்கு என்ற கேள்வி அவருக்கு இன்னும் வராமல் போவது தான் ஆச்சரியம். ஜிங்குச்சா பாடல் மட்டுமே ஒரு ஆறுதல். பரபரப்பான முத்த மழை பாடல் எங்கே என்று தேட வேண்டும். விண்வெளி நாயகா பாடல் ஒலிக்கும்போது எண்டு கார்டு ஓடுகிறது. பாவம் தானே ரகுமான்.
இரண்டு ஆளுமைகள் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கழிந்து இணையும்போது அவர்கள் சொன்னது போல் அவர்களது அனுபவம் ஒவ்வொரு காட்சியிலும் பேச வேண்டாமா. பல இடங்களில் அவர்களின் தடுமாற்றம் தான் பிரதானமாகத் தெரிகிறது. கிளைமாக்சில் அது இன்னும் தெளிவாக. நாயகனைத் தாண்டுவது என்பது சந்தகத்திற்கிடமற்றது. எந்த அளவு என்பதில் தான் படத்தின் வெற்றி இருக்கிறது என்றார் கமல். படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொரு ரசிகனிடமும் இதற்கு நாயகனையே இன்னொரு முறை பார்த்திருக்கலாமோ என்ற கேள்வி தான் இருந்திருக்கும். அந்த அளவு இது கமல் படமாகவும் இல்லாமல் மணி ரத்னம் படமாகவும் இல்லாமல் பயணித்து விட்டது தான் மிகப் பெரிய சோகம்.