Breaking News :

Monday, October 14
.

மக்களை மகிழ்விக்கும் மாயோன் வெளியீட்டு தேதி அறிவிப்பு


ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'மாயோன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான 'மாயோன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் என்றால், தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கு எப்போதும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது. தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும். 'மாயோன்' பட குழுவினர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான முறையில் சிந்தித்து, இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் 'மாயோன்' பட டீஸரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டனர். பட குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது.

இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த 'மாயோனே..' எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர். இந்த பாடலின் லிரிக்கல் வீடியாவில் இடம்பெற்ற ‘ழ்’ என்ற சொல் குறித்து இணையவாசிகளிடம் பெரிய அளவில் விவாதமும் அரங்கேறியது. பாடல் முழுவதும் பரவிய ஆன்மீக உணர்வு, திரையிசை ரசிகர்களை துல்லியமாக சென்றடைந்து, பாடல் வெளியான குறுகிய காலத்தில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்தது.

இதற்குப் பிறகு 'மாயோன்' படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் அதிகரித்துவிட்டது. படக்குழுவினர் ‘மேஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா இசையில் உருவான ' சிங்கார மதன மோகனா..' என தொடங்கும் 'மாயோன்' படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர். இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் 'பகவான் கிருஷ்ணரின் ஆந்தம்' என குறிப்பிட்டு இந்த பாடலையும் இணையத்தில் கொண்டாடினர்.

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி 'யு' சான்றிதழை வழங்கினர். இந்த செய்தி இணையத்தில் வெளியானபோது மக்களிடத்தில் வழக்கத்திற்கு மாறாக படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

 பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மாயோன்' திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் முழுமையான திரைப்பட அனுபவத்தை உணர்ந்து நுகரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் 'மாயோன்' படத்தின் வெளியீட்டை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, என். கிஷோர் (இயக்கம்), பாடல்களுக்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.