Breaking News :

Thursday, May 02
.

ஷூட்டிங் ஸ்பாட்: MGR


அரிதிலும் அரிதான புகைப்படத்தின் வரலாறு வடபழனியில் இருந்த, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில், முன்பு சவுண்டு இன்ஜினியராக பணியாற்றியவர் ரவிசங்கர். கேரள மாநிலம், எர்ணாகுளம், திருப்பூணித்தரா, என்ற ஊரில் பிறந்தவர். ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பணியாற்றியபோது, இவருக்கு கிடைத்த கறுப்பு - வெள்ளை பிலிம் சுருள் ஒன்று, கடந்த, 40 ஆண்டுகளாக இவரிடம் பத்திரமாக இருந்தது. அதில், பதிவாகி இருப்பது ஒரு பிரபலமான மனிதரின் படங்கள் என்று அறியாமலேயே அதை பாதுகாத்து வந்துள்ளார்.

 

இந்த பிலிம் சுருளில், இதுவரை யாரும் பார்க்காத அரிய புகைப்படம் பதிவாகி இருக்கிறது என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பின், அதை, 'டெவலப்' செய்த போது, அதிலிருந்த புகைப்படத்தை பார்த்து அவர் உணர்ச்சிவசப்பட்டார். அப்புகைப் படத்தில் இருந்தவர், எம்.ஜி.ஆர். பிப்., 17, 1970ல், ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் அந்த கறுப்பு - வெள்ளை பிலிமில் இருந்தது. எம்.ஜி.ஆர்., நடித்து, ஜனாதிபதி விருது பெற்ற, ரிக் ஷாக்காரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, இடைவேளையில் படப்பிடிப்பு குழுவினர் எல்லாரும் ஓய்வில் இருந்தனர். படத்தில் எம்.ஜி.ஆர்., ஓட்ட வேண்டிய ரிக் ஷா, அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. ரிக் ஷா ஓட்டத்தெரியாத எம்.ஜி.ஆர. ஓட்டி பழகினால் தேவலை என்று தோன்றியதால் ரிக் ஷாவில் ஏறி, ஓட்டத் துவங்கினார். ஸ்டுடியோ வளாகத்தில் அவர் சைக்கிள் ரிக் ஷா ஓட்டுவதை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்தனர். சிறிது நேரம் ரிக் ஷா ஓட்டியவர், யாரையாவது உட்கார வைத்து ரிக் ஷா ஓட்டினால், படத்தில், இயல்பாக அமையுமே என்று நினைத்தவர், படப்பிடிப்பு குழுவினரை பார்த்து, யாராவது இருவர் ரிக் ஷாவில் வந்து அமரும்படி கூறினார். பல முறை அழைத்தும், யாரும் ரிக் ஷாவில் உட்கார தயாராக இல்லை. மதிப்பிற்குரிய, வாத்தியார் ரிக் ஷா ஓட்டும்போது, நாங்கள் எப்படி உட்காருவது என்ற கூச்சத்தால், ஒதுங்கி நிற்பதை கண்டு எம்.ஜி.ஆர்., நொந்து போனார்.

 

பரிதாபமாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் நாயரை பார்த்தார்; அவர் உடனே தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை பார்த்திருக்கிறார். உடனே, இருவரும் ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்தனர். குஷியான எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டே, ரிக் ஷா ஓட்டத் துவங்கினார். அங்கிருந்த பிரபல புகைப்பட கலைஞர் நாகராஜ் ராவ், இந்த காட்சியை, தன் கேமராவில் பதிவு செய்தார். எம்.ஜி.ஆர்., நடித்த, 132 படங்களின் காட்சிகளை புகைப்படமாக எடுத்தவர் இவர். நாகராஜ் ராவ், ரவிசங்கரின் தாய் மாமனின் நண்பர்.

கடந்த, 1965ல், 12 வயது ரவிசங்கர், சென்னையில் உள்ள மாமன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் நாகராஜ் ராவ் வீட்டில் தான் தங்கியிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்து, ஐ.டி.ஐ., படித்து, சான்றிதழ் காட்டி, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் சவுண்டு இன்ஜினியராக சேர்ந்தார். அங்கே, 20 ஆண்டுகள் பணியாற்றினார்.

 

இதற்கிடையில், புகைப்படக்காரர் நாகராஜ் ராவ், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட பிலிம் சுருளை, ரவிசங்கரிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். அந்த பிலிம் சுருளை வீட்டில் வைத்தவர், அத்துடன் அதைப்பற்றி மறந்து போனார் ரவிசங்கர். நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டன.

 

பாலகாட்டில் எம்.ஜி.ஆர்., குடும்பத்துக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீடு, நினைவுச் சின்னமாக ஆக்கப்பட்டது. அங்கே வைப்பதற்காக, எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் தேவைப்பட்டன. இதுபற்றி ரவிசங்கரிடம் கேட்டு இருக்கின்றனர். அப்போது தான் அவருக்கு, அந்த பிலிம் சுருள் பற்றிய ஞாபகம் வந்தது. அவர், அவசர அவசரமாக, அந்த, பிலிம் சுருளை தேடி கண்டுபிடித்திருக்கிறார். அதை, 'டெவலப்' செய்தபோது, அதில் இருந்த காட்சிகள், அவரை வியக்க வைத்தன. இயக்குனர் கிருஷ்ணன் நாயரையும், ஆர்.எம்.வீரப்பனையும் உட்கார வைத்து, ரிக் ஷா ஓட்டும் புகைப்படம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக இருந்தது.  அந்த புகைப்படத்தை, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில் வைக்க, சந்தோஷமாக கொடுத்துள்ளார், ரவிசங்கர்.

 

 நன்றி: சமூகவலைதளம்


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.