Breaking News :

Wednesday, October 16
.

ராஜு முருகன் வசனத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் GK19 படப்பிடிப்பு விரைவில்!


இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பத்து தல' மற்றும் 'ஆகஸ்ட் 16, 1947' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

தற்போது கௌதம் கார்த்திக் 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என இரண்டு படங்களில்  நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் தினா ராகவன் கூறும் போது, “தென்சென்னையில் உள்ள தரமணி போன்ற பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியலை, எளிமையான சம்பவங்களாலும் உண்மைக்கு நெருக்கமாகவும் அரசியல் நையாண்டிகள் கலந்தும் சொல்ல முயற்சிக்கும் படமாக இதை உருவாக்க இருக்கிறோம். சாமானியனின் எதார்த்த வாழ்வியலோடு அரசியலை சற்று காமெடி கலந்து சொல்வது தான் இந்த படம்.

இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை அரசியலில் இருக்கும் ஏரியா பையன் போன்று உருவாக்கி இருக்கிறோம். இதுவரை அவர் நடித்ததில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும். அவரது கதாபாத்திரம் நம் வீட்டில் இருக்கும் ஒருவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்," என்றார்.

தற்போதைக்கு GK19 என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த படத்தை எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து  தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

மேலும் விரைவில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.