Breaking News :

Friday, October 11
.

தியேட்டர் ஆப்பரேட்டர் செய்த வேலை.. தலைகீழான ரிசல்ட்!


தமிழ் சினிமாவில் முதல் முறையாக இடைவேளைக்கு பிந்தைய பாகத்தை முதலிலும் முதல் பாகத்தை இடைவேளைக்கு பிறகும் ஓட்டி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் என்றால் அது மோகன், அமலா, ராதா நடித்த ‘மெல்ல திறந்தது கதவு’ என்ற படம்தான். இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்தது இல்லை.

மோகன், ராதா, அமலா நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மெல்லத் திறந்தது கதவு’.

இந்த படம் கடந்த 1986ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி முதல் இரண்டு நாட்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

இந்த நிலையில் தான் மதுரையில் உள்ள திரையரங்கு ஆப்ரேட்டர் இந்த படத்தின் இரண்டாம் பாதியை முதலிலும் முதல் பாதியை இரண்டாவதாகவும் ஓட்டினார். இது தற்செயலாக நடந்த தவறா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஆனால் இந்த மாற்றத்திற்கு பின் இந்த படத்தை பார்த்தவர்கள் ரசிக்க ஆரம்பித்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அதேபோல் முதல் பாதியை இரண்டாவதாகவும் இரண்டாம் பாதியை முதலாவதாகவும் ஓட்டினர்.

அதன் பிறகு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூல் செய்தது.

இந்த படத்தில் மோகன் – ராதா காதல் ஒரு பகுதியாகவும், மோகன் – அமலா காதல் ஒரு பகுதியாகவும் உருவாக்கப்பட்டிருக்கும்.

படம் முதலில் ரிலீஸ் ஆனபோது மோகன் – ராதா காதல் பகுதி முதலாவதாகவும், மோகன் – அமலா காதல் பகுதி இரண்டாவது ஆகவும் வெளியானது. ஆனால் அதன் பிறகு தான் மதுரை தியேட்டர்  ஆபரேட்டர், மோகன் – அமலா காதல் கதையை முதலாவதாகவும், மோகன் – ராதா பாகத்தை இரண்டாவதாகவும் ஓட்டினார். அதன் பிறகு தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


தமிழ் திரை உலக வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு இந்த படத்திற்கு முன்பும் வந்ததில்லை, பின்பும் வந்ததில்லை. இரண்டு பகுதியை மாற்றி ஓட்டியதால் சென்சாரில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக இந்த படம் வெளியாகி சில நாட்கள் கழித்து மறுபடியும் சென்சார் ஆனது.

இந்த படத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்தனர். முதல் முறையாக இருவரும் இணைந்து பணியாற்றிய படம் இதுதான். இரு இசை உலக மேதைகள் இணைந்ததால்தான் என்னவோ இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெற்றிருந்தது. ‘வா வெண்ணிலா’, ‘தேடும் கண் பார்வை’, ‘குழலூதும் கண்ணனுக்கு’, ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 5 பாடல்களை வாலி எழுதினார்.

இரண்டு பாடல்களை கங்கை அமரன் எழுதினார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.