Breaking News :

Wednesday, December 04
.

சவப்பெட்டியில் இருந்த நடிகர் அசோகனுக்கு ஜெய்சங்கர் செய்த செயல்?


எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் ஹீரோக்களாக பலர் ஜொலித்தாலும் இவர்களை எதிர்த்து சண்டை போட்ட வில்லன்களும் கூட அதிகம் பெயர் எடுத்திருந்தார்கள். அந்த வகையில், நம்பியார் உள்ளிட்ட பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். அதில் முக்கியமான ஒரு நடிகர் தான் அசோகன். அவர் தனித்துவமான நடிப்பில் வல்லவர் என்பது பலருக்கும் தெரிந்ததே.

அவர் நடிக்கும்போது அவருடைய மேனரிசத்தை இன்றும் மிமிக்ரி கலைஞர்கள் பின்பற்றி வருகிறார்கள். வசனங்களில் தன்னுடைய பேச்சை இழுத்து இழுத்து பேசியே ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் அசோகன். வில்லன், குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கியவர்.

இந்நிலையில், பழம்பெரும் ஜோசப் தளியத் இயக்கத்தில் ஜெய்சங்கர் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான படம் தான் ‘இரவும் பகலும்‘. இந்தப் படத்தில் அசோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் அசோகன் தனது சொந்தக் குரலில் டி.ஆர். பாப்பா இசையில் ஒரு பாடலைம் பாடியிருப்பார்.  எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்துடன் இரவும் பகலும் மோதி வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தனர். குறிப்பாக கௌபாய் படங்களில் வில்லனாக அசோகன் அசத்தியிருப்பார்.

அன்று ஆரம்பித்த இவர்களின் நட்பு அசோகனின் இறுதி நாள் வரை தொடர்ந்தது. இந்நிலையில் தனது 51-ம் வயதிலேயே இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்த அசோகனின் இறுதிச் சடங்கில் உற்ற தோழனாகப் பங்கேற்ற ஜெய்சங்கர் ஒரு காரியத்தைச் செய்து தங்களது நட்பின் ஆழத்தினை வெளிப்படுத்தினார்.

கிறிஸ்தவரான அசோகனின் உடலானது சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரை இறுதியாகக் காண வந்தவர்கள் எல்லாம் மாலை போட்டு வணங்கி தங்கள் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்க சோகத்தில் அமர்ந்திருந்த ஜெய்சங்கர் தாடியும், மீசையுமாக வாடிப் போயிருந்த தனது நண்பனின் முகத்தைக் கண்டு துயரமடைந்து உடனடியாக முகச்சவரம் செய்பவரை வரவழைத்து அவருக்கு முகச் சவரம் செய்து அசோகனுக்கு கௌரவமான தோற்றத்தினை ஏற்படுத்தி இறுதியாக வழியனுப்பி வைத்திருக்கிறார்.

நண்பனின் உடல் சவக்குழியில் இறக்கப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுது தங்களது உணர்வுப்பூர்வமான நட்பினை வெளிப்படுத்தினார் ஜெய்சங்கர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.