Breaking News :

Tuesday, December 03
.

'நிறங்கள் மூன்று' நவம்பர் 22ல் வெளியீடு!


ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசியதாவது, "கார்த்திக் நரேனின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனாக நடித்திருக்கிறேன். 'கருடன்' படத்தில் வில்லனாக நடித்திருப்பேன். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரம் இந்தப் படத்தில். அதர்வா, சரத்குமார் சார், ரஹ்மான் சார், அம்மு அபிராமி இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி" என்றார்.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுந்தர்ராஜன், "இப்போது சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன்".

கிரியேட்டிவ் புரொடியூசர் மனோஜ், " வித்தியாசமான படம் 'நிறங்கள் மூன்று'. இந்த தலைமுறை இளைஞர்களுக்கு பொருந்திப் போகும் படமாக இது இருக்கும். இயக்குநர் கார்த்திக் நரேனின் ஹைப்பர் லிங்க் அவருக்குப் பிடித்த ஜானர். அதை நன்றாக செய்திருக்கிறார். நியூ ஏஜ், செண்டிமெண்ட், ஹைப்பர் லிங்க் என வலுவான தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதர்வா புதுவிதமாக இதில் தெரிவார். சரத்குமார் சார் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ரஹ்மான் சார் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துஷ்யந்த், அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கின்றனர். தொழில்நுட்ப குழுவும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது. எல்லா வயதினருக்கும் ஏற்ற விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கும். 22 ஆம் தேதி படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

நடிகை அம்மு அபிராமி, "என் கரியரில் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது. வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு. என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி நரேன். மகிழ்ச்சியான படமாக எனக்கு அமைந்தது. தியேட்டரில் கண்டிப்பாக பாருங்கள். வித்தியாசமான படமாக இருக்கும்".

இயக்குநர் கார்த்திக் நரேன், " பல காரணங்களுக்காக 'நிறங்கள் மூன்று' திரைப்படம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், பல வருடங்கள் கழித்து தியேட்டரில் என் படம் வெளியாகிறது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி. கதை கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன். 22 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது".

நடிகர் ரஹ்மான், "இந்த வருடம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். என்னுடைய ஐந்து படங்கள் வெளியாகி இருக்கிறது. 'நிறங்கள் மூன்று' என்ற வித்தியாசமான கதையில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு எனது கரியர் முற்றிலும் மாறியது. இப்போது 'நிறங்கள் மூன்று' படத்திலும் அதே நம்பிக்கை உள்ளது. 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு முன்பே நரேன் வைத்திருந்த கதை இது. படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்".

நடிகர் அதர்வா, "கார்த்திக்கின் 'துருவங்கள் பதினாறு' படம் பார்த்ததில் இருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர் ஒரு காட்சியை அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். நிஜத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திரத்தைதான் எனக்கு இதில் கொடுத்தார். பயம் கலந்த சந்தோஷத்துடன் அவர் மீதுள்ள நம்பிக்கையில் தான் சம்மதித்தேன். உண்மையிலேயே இது வித்தியாசமான படம்.

எந்த ஜானரிலும் இதை அடக்க முடியாது. சரத்குமார் சார், ரஹ்மான் சார் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபிராமி என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படத்தைத் தயாரித்த கருணா சார் மற்றும் மனோஜ் சாருக்கு நன்றி. டெக்னிக்கல் டீம் சிறந்த பணியைக் கொடுத்துள்ளது. நிறைய புது விஷயங்கள் இதில் உள்ளது. 22 ஆம் தேதி இந்தப் படத்தை திறந்த மனதுடன் வந்து திரையரங்குகளில் பாருங்கள்" என்றார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.