Breaking News :

Friday, July 12
.

எம்.ஜி.ஆரின் மனசு யாருக்கும் வராது!


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக சாதாரண நடிகர் ராமச்சந்திரனாக போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவருடன் இருந்தவர்களை பின்னாளில் அவர் வளர்ந்த பிறகு அவருடனேயே வைத்துக் கொண்டார்.

அதில் முக்கியமானவர் நாகராஜ ராவ். இவர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஸ்டில் போட்டோகிராபர். இவருக்கு எம்.ஜி.ஆருடன் நட்பு ஏற்பட்டதே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி காசநோயால் அவதிப்பட்டு வந்தார். அந்தக் காலத்தில் காசநோய் குணப்படுத்த முடியாத ஒரு கொடிய நோய்.

அதற்கு சிறப்பான வைத்தியம் பார்த்த டாக்டர் ஒருவர் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் இருந்தார். வெளியூர்களில் இருந்தெல்லாம் காசநோய் நோயாளிகள் அவரைத் தேடி வருவார்கள். அவரை காண வரும் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.

எம்.ஜி.ஆர். தனது மனைவி சதானந்தவதியை அழைத்துக் கொண்டு அடிக்கடி டாக்டரிடம் செல்வார்.

அந்தக் காலகட்டத்தில் அவர் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த சாதாரண நடிகர் தான். அங்கே நாகராஜ ராவ் என்பவர் சென்னை எழும்பூரில் இருந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு வருவார்.

தங்கள் மனைவிக்காக அங்கே வந்து காத்திருந்த வேளையில் எம்.ஜி.ஆரும், நாகராஜ ராவும் நண்பர்கள் ஆனார்கள்.

“நான் பெரிய நடிகர் ஆனதும், நீங்கதான் என் போட்டோகிராபர்” என்று அடிக்கடி சொல்வாராம் எம்.ஜி.ஆர்.

சொன்னதைப் போலவே, அவர் பெரிய நடிகர் ஆனதும் நாகராஜராவை தன் பர்சனல் போட்டோகிராபராக தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனதும், அவரை முதல் புகைப்படம் எடுத்தது நாகராஜராவ் தான். இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற சினிமா மற்றும் அரசியல் புகைப்படங்களை எடுத்தவர் இவர்.

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர். படங்களில் பணிபுரிய தனது மருமகன் சங்கர்ராவை அனுப்பத் தொடங்கினார் நாகராஜ ராவ்.

சங்கர்ராவின் படங்கள் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்ததால், பல படங்களுக்கு சங்கர்ராவை படமெடுக்க அனுமதித்தார் எம்.ஜி.ஆர்.

இன்றைக்கு நாகராஜ ராவ் உயிருடன் இல்லை. இவருடைய மருமகன் சங்கர் ராவிடம் பழைய அனுபவங்கள் குறித்து நிறைய பேசினோம்.

ஒளிவு மறைவு எதுவுமின்றி சங்கர் ராவ் வெளிப்படையாக பேசியதில் இருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

“என் அப்பாவோட அக்கா பையன் தான் நாகராஜ ராவ். நான் தஞ்சாவூரில் படித்து முடித்துவிட்டு அவரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். சரோஜாதேவி நடித்த ‘தாயின் மடியில்’ படத்தின் ஷூட்டிங் சாத்தனூர் அணையில் நடந்துகிட்டு இருந்தது.

எம்.ஜி.ஆர். என்னை அழைத்து அவரை சில படங்கள் எடுக்கச் சொன்னார். நானும் எனக்கு தெரிந்த அளவில் சில படங்கள் எடுத்து அதை ப்ரிண்ட் போட்டுக் காட்டினேன். “பராவாயில்ல பாஸ் (நாகராஜ ராவை அவர் பாஸ் என்று தான் கூப்பிடுவார்). பையன் நல்லாவே எடுத்திருக்கான். அடுத்த படத்திலிருந்து அவுட்டோருக்கு சங்கரையே அனுப்பிடு” என்றார்.

அடுத்த படமான ‘படகோட்டி’யில் இருந்து, நான் அவரது ஸ்டில் போட்டோகிராபர் ஆனேன். படமும் சூப்பர் ஹிட் ஆனதால், சென்டிமென்டாக என்னையே அடுத்தடுத்த படங்களுக்கும் போட்டோ எடுக்கச் சொன்னார். இப்படித் தான் ஆரம்பித்தது என் கேமரா வாழ்க்கை” என்று தொடங்கிய சங்கர் ராவ், 37 எம்.ஜி.ஆர். படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

“20 வயதிலேயே நான் போட்டோகிராபராகி விட்டேன். இள ரத்தம். யாராவது லேசா என்னிடம் முகம் சுளிச்சாகூட எனக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடும். யார், என்னவென்று பார்க்க மாட்டேன். முகத்துக்கு நேராக பேசிவிட்டு, அங்கிருந்து விலகிடுவேன். அந்த வயது அப்படி.

ஒருமுறை எம்.ஜி.ஆரிடமே நான் கோபமாக பேசிவிட்டேன். அதை இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கும்” என்று சொன்னவர், அந்த சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

“தேவரின் ‘தனிப்பிறவி’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. வாஹினி ஸ்டுடியோவின் 5-வது தளத்தில் காலை நேரத்தில் தொடங்கியது.

தேவருக்கு ஒரு பழக்கம். காலையில் எடுக்கும் போட்டோக்களை மாலையே பார்த்துவிட வேண்டும். என்னை அழைத்து, “டேய் சங்கர், எம்.ஜி.ஆர். விக் எப்படி வந்திருக்குனு பார்க்கணும்டா. நீ படம் எடுத்து சாயங்காலமே காட்டிடு” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

நானும் படம் எடுக்க எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டே இருந்தேன். அவர் அன்று ரொம்ப டென்ஷனாக இருந்தார். அதனால் போட்டோ எடுத்துக் கொள்ள அவர் ஆர்வம் காட்டாமல் தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தார்.

மதியம் லஞ்ச் ப்ரேக் வந்துவிட்டது. நான் ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை. ஏன் இப்படி பண்றார் என்று எனக்கு ஒரு பக்கம் கோபம். “எப்படியாவது எடுத்துடு சங்கர்” என்று சொல்லிவிட்டு தேவர் சாப்பிடப் போய்விட்டார்.

ப்ரேக் முடிந்து 2 மணிக்கு எம்.ஜி.ஆர். செட்டுக்குள் வந்தார். 2.05க்கு ஷாட் வைக்கிறார்கள். ஸாங் ஷூட்டிங் போய்ட்டு இருந்தது. போட்டோவுக்கு போஸ் தானே தர மாட்டேங்குறார்.

ஷூட் பண்ணும்போது எடுத்தா என்ன பண்ண முடியும் என்று ஷாட்டுக்கு நடுவுலயே ஆக்ஷன்ல நான் க்ளிக் பண்ணிட்டேன். ஷாட் முடிந்ததும், நேராக என்னிடம் வந்தார் எம்.ஜி.ஆர்.

“ஷாட்ல போட்டோ எடுத்தியா?” என்று கேட்டார்.
“ஆமாம்” என்றேன்.
“யாரைக் கேட்டு எடுத்த?” என்றார்.
“யாரையும் கேட்கல சார்… காலையில இருந்து உங்களை போட்டோ எடுக்க ட்ரை பண்றேன். நீங்க போஸ் தரவே மாட்டிங்கறீங்க. அதனால தான் ஷாட்டுக்கு நடுவுல எடுத்துட்டேன்” என்றேன்.

சில விநாடிகள் என் கண்களையே உற்றுப் பார்த்தவர், “போகும்போது ரோலை கழட்டி கொடுத்துட்டு போ” என்றார்.

எனக்கு சுளீரென்று கோபம் தலைக்கேறியது. “சார்… நீங்க ப்ரொட்யூஸர் இல்ல. உங்களுக்கு ஸ்டில்ஸ் சம்மந்தமா பேசணும்னா நாகராஜ ராவ்கிட்ட பேசுங்க. இல்லனா தேவர்கிட்ட பேசுங்க”னு எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷ்ல தாட்பூட்னு அதிகப்பிரசங்கித்தனமா பேசினதும்,

அங்கு நின்று கொண்டிருந்த நடிகர் நாகேஷ், தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி, கோவை செழியன் எல்லாரும் பதறிப்போய் பத்தடி தள்ளிப் போய்ட்டாங்க. நான் இப்படிப் பேசுவேன்னு யாருமே எதிர்பார்க்கவே இல்ல.

2.05க்கு ஆரம்பிச்ச ஷூட்டிங் 2.15க்கு நின்னுடுச்சு. எம்.ஜி.ஆர். செட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். அதற்குள் தேவருக்கு தகவல் போய் அவர் பதறி அடித்துக் கொண்டு “என்னண்ணே…” என்று ஓடி வர, எம்.ஜி.ஆர். மேக்கப் அறைக்கு சென்று விக்கை கழட்டிவிட்டார்.

எம்.ஜி.ஆரை நான் எதிர்த்துப் பேசிய விஷயம் வாஹினி முழுவதும் பரவியது. முதல் தளத்தில் என்.டி.ஆர். படப்பிடிப்பில் இருந்த என் மாமா நாகராஜராவ் அலறியடித்துக் கொண்டு வந்தார்.

“என்னண்ணே நடந்துச்சு” என்று தேவரிடம் கேட்டார். “சின்னவர் ரொம்ப கோபமா இருக்கார்” என்று மேக்கப் அறை வாசலில் இருந்த தேவர் சொன்னார்.

உள்ளே போன நாகராஜ ராவ், “அண்ணே… சின்ன பையன் தெரியாம பேசிட்டான்… மன்னிச்சிடுங்க” என்று சொன்னதும், எம்.ஜி.ஆர். என்ன சொன்னார் தெரியுமா?

“எனக்கும் சங்கருக்கும் ஆயிரம் இருக்கும். நீங்க யார் நடுவுல வந்து பஞ்சாயத்து பேச, போய் அவனையே வர சொல்லுங்க” என்று சொல்லிவிட்டார்.

என்.டி.ஆர். படப்பிடிப்பில் இருந்த என்னிடம் வந்து விஷயத்தை சொன்னார் மாமா. நானோ “நீங்க வேணும்னா அவர் படங்கள்ல வேலை பாருங்க. நான் ஜெய்சங்கர் படம், சிவாஜி படம், தெலுங்கு படம்னு வொர்க் பண்றேன்” என்று சொல்லிவிட்டேன்.

“இல்லல்ல… நீ தான் இந்தப் படத்துல வொர்க் பண்ணனும்னு எம்.ஜி.ஆர். சொல்லிட்டார்” என்று வலுக்கட்டாயமாக என்னை அனுப்பிவைத்தார் மாமா.

சொன்னா நம்பமாட்டீங்க ‘தனிப்பிறவி’ படப்பிடிப்பு முழுவதும், செட்டுக்குள் எம்.ஜி.ஆர். வந்ததும் நான் வெளியே போயிடுவேன். அவரை விஷ் பண்ண மாட்டேன். இப்படியே போச்சு. எவ்வளவு பெரிய கிரேட் மேன் அவர். அந்த வயசு என்னை அப்படி நடந்துக்க வச்சது.

ஆனா கொஞ்ச நாட்களிலேயே என் தவறை நான் உணர்ந்து அவர் முன் கதறி அழுத சம்பவமும் நடந்தது. 

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.