Breaking News :

Sunday, October 06
.

’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீடு!


இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன்.

இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது நடக்காமல் போனது. அவரது மறைவுக்குப் பின் ஏஐ தொழில்நுட்பத்திலாவது அவரைக் கொண்டு வருகிறோம் என அவரது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டோம். அந்த அளவுக்கு விஜயகாந்த் சார் படத்தில் வரவேண்டும் என்று விரும்பினோம்.

ஆனால், அதில் சில பிரச்சினைகள் இருந்ததால் அவரைப் போன்ற லெஜெண்ட் சத்யராஜ் சாரிடம் அந்த கதாபாத்திரத்திற்காக கேட்டோம். உடனே ஒத்துக் கொண்டார். விஜய் ஆண்டனி சார் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மேகா ஆகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். மூன்று வருடங்கள் உழைத்து விஜய் மில்டன் நல்ல படத்தைக் கொடுத்துள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுங்கள்”.

இயக்குநர் விஜய் மில்டன், “தனஞ்செயன் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும்தான் இந்தப் படம் தொடங்க முக்கிய காரணம். விஜய் ஆண்டனி சாரை ஹீரோவாக நான் தான் அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது. நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். ’மழை பிடிக்காத மனிதன்’ வெறும் ஆக்‌ஷன் படம் மட்டும் கிடையாது. அது பொயட்டிக் ஆக்‌ஷன் ஜானர்.

இந்த வார்த்தையை தனஞ்செயன் சார்தான் சொன்னார். என்னுடைய எல்லாப் படங்களிலும் கெட்டவன் சாகக் கூடாது. கெட்ட விஷயம்தான் சாக வேண்டும் என்று சொல்வேன். அது இந்தப் படத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். அந்தமான், டையூ என லொகேஷனை போராடி எங்களுக்கு தனஞ்செயன் சார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சார் போன்ற திறமையான நடிகரைப் பார்க்கவே முடியாது.

அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அசத்தினார். சரத்குமார் சாரிடம் நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கும். ‘சூர்யவம்சம்’ காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். கதை கேட்டதும் உடனே ஓகே சொல்லி விட்டார். விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், என்னுடைய தொழில்நுட்பக் குழு என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்”.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, “அருமையான படம் செய்துள்ளோம். இயக்குநர், தயாரிப்பாளர், விஜய் ஆண்டனி சார், சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை மேகா ஆகாஷ், “எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் லொகேஷன் புதுசாக இருந்தது. நடிப்பதற்கு போகும்போதே பாசிட்டிவாக மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது பெரிய கற்றல் அனுபவம். விஜய் மில்டன் சார் மற்றும் குழுவினருக்கு நன்றி”.

நடிகர் சத்யராஜ், “எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான்  வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது.

அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம். இதற்காக விஜய் ஆண்டனி, தனஞ்செயன், விஜய் மில்டன் மூவருக்கும் நன்றி. நல்லவேளை நான் முடியில்லாமல் பிறந்தேன். இதனால்தான் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது.

கட்டப்பா கிடைத்ததும் அப்படித்தான். சில மைனஸ்தான் பிளஸ். கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏனெனில், அவரை நான் டிஸ்டர்ப் செய்வதில்லை. எல்லோரையும் போல, ‘என் படம் வெற்றி பெற வேண்டும், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என்று கெடுபிடி போட மாட்டேன். மற்றப் படங்களைப் போல அல்லாமல், நிஜமாகவே இந்தப் படம் நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பதுபோல, எனக்கு இருக்கும் நக்கல் திரையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு வில்லத்தனம் கலந்து வந்தால் இனி கொள்கையை தளர்த்தி வில்லனாக நடிக்கலாம் என்று நினைக்கிறேன். என் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட பி. வாசு, பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் என எல்லா இயக்குநர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி, “பல மேடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், எல்லாருமே இந்த மேடையில் எல்லோரும் பேசியிருப்பது கவிதை போல மனதில் இருந்து வந்திருக்கிறது. கொரோனா உள்ளிட்டப் பல விஷயங்களைத் தாண்டி விஜய் மில்டன் இந்தப் படத்தை கஷ்டப்பட்டு செய்திருக்கிறார். அவருடைய உழைப்பிற்காக இந்தப் படம் பெரிய வெற்றிப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலருடனும் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. சத்யராஜ் சாருக்கும் எனக்கும் நல்ல கனெக்‌ஷன் உள்ளது. மேகா ஆகாஷூக்கு நல்ல குரல் வளம் உள்ளது. டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அவர் முயற்சி செய்யலாம். படக்குழுவினர் எல்லோரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களுக்கு பெரிய வெற்றிப் படமாக இது அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”.

Mazhai Pidikkatha Manithan, Teaser launch,Trend Music South, Vijay Antony,  megha akash, Sathyaraj

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.