Breaking News :

Tuesday, November 05
.

வாலி எழுதிய பாடல் ஹிட் - சம்பளம் தராமல் டிமிக்கி கொடுத்த தயாரிப்பாளர்?


சம்பளம் தராமல் இழுத்தடித்த தயாரிப்பாளர் ஒருவரை திட்டி கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒன்று பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதையை பார்க்கலாம்.

கே.ஆர்.பாலன் தயாரிப்பில் காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த படம் சக்கரம். சுப்பையா நாயுடு இசையமைத்த இந்த படத்தில் ஜெமினி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா, ஏவிஎம் ராஜன், செளகார் ஜானகி, நாகேஷ், மனோரமா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் முழுக்க பணத்தை மையமாக வைத்து தான் எடுத்திருப்பார்கள்.

இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் பணம் தான் முக்கியம் என அதை அடைவதற்கு ஓடிக்கொண்டே இருக்கும்.
இதில் ஒரு பெரிய கொள்ளைக்காரனாக ஏவிஎம் ராஜன் இருப்பார். அவர் காட்டுக்குள் இருந்துகொண்டு, அவ்வழியே வருபவர்களை வழிப்பறி செய்து, அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பவராக நடித்திருப்பார்.

பல கொலைகள் பண்ணியவர் என்பதால் இவரது தலைக்கு அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்கும். இந்த சமயத்தில் வறுமையில் இருக்கும் ஜெமினி கணேசன், ஏவிஎம் ராஜனை பிடித்துக் கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் வாங்க முடிவு செய்கிறார்.

தனியாக அல்லாமல் ஒரு குழுவாக சென்று ஏவிஎம் ராஜனை பிடித்துவிடும் ஜெமினி கணேசன், அவரை ஜீப்பில் அழைத்து வரும்போது, அவர் உடன் வந்தவர்கள் பணத்துக்கு எந்தமாதிரி ஆசைப்படுகிறார்கள் என்பதை விவரித்து ஏவிஎம் ராஜன் பாடும்படியான பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கும். இந்த பாடலுக்கு லிரிக்ஸ் எழுதியது கவிஞர் வாலி தான். இப்பாடலை டிஎம் செளந்தர்ராஜன் பாடி இருப்பார். பணத்தை பற்றி பட்டிமன்றம் நடந்தால் இந்த பாட்டு இல்லாம இருக்காது.

அந்த அளவுக்கு பேமஸ் ஆன பாடல் இது. அது என்னவென்றால்... காசேதான் கடவுளடா என்கிற பாடல் தான். இந்தப்பாடலில் ஒரு வரி இடம்பெற்று இருக்கும், அதில் அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவரும் திருடரும் ஒன்றாகும்... வரவுக்கு மேலே செலவு செய்தால் அவரும் குருடரும் ஒன்றாகும். களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு கொடுத்தால் அது தர்மமடா, பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா என்கிற வரியை வாலி ஒரு உள்நோக்கத்தோடு எழுதி இருக்கிறார்.

அது வேறெதுவும் இல்லை. இப்பாடலை அப்படத்தின் தயாரிப்பாளரான கே.ஆர்.பாலனை திட்டி தான் வாலி இந்த வரிகளை எழுதி இருந்தாராம். வாலியும், பாலனும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதில் கே.ஆர்.பாலனுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பணத்தை இழுத்தடித்து கொடுப்பதை அவர் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். அதேபோல் வாலி முந்தை படத்திற்கு எழுதிய பாடல்களுக்கே பணம் கொடுக்காமல் இழுத்தடித்து இருக்கிறார் பாலன்.

பாலன் தன் நெருங்கிய நண்பன் என்பதால் அவரிடம் நேரடியாக பணத்தை கேட்க தயங்கி பாடல் வழியாக அதை சொல்ல தான் காசேதான் கடவுளடா என முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து இந்த பாடலை எழுதி இருக்கிறார் வாலி. இப்படி வாலி தன்னை திட்டி பாடல் எழுதிய விஷயம் பாலனுக்கு தெரியவர, அவர் உடனடியாக வாலிக்கு கொடுக்கவேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க ஓடோடி வந்திருக்கிறார். இப்படி தயாரிப்பாளரை திட்டி வாலி எழுதிய இந்த பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.