Breaking News :

Saturday, December 14
.

கமலஹாசன்: வறுமையின் நிறம் சிவப்புவில் "தேவை பாவை பார்வை' பாடல் பிறந்த கதை


பாடலற்ற பாடல்கள் என்றொரு வகையறா உண்டு. இப்படியான பாடல்கள் படத்தின் தேவைக்காக உருவாக்கப்பட்டு அதன் முதன்மை ஓட்ட காலம் முடியும் வரை பெரிதும் விரும்பப் படுவது போன்ற தோற்றத்தில்  திகழ்ந்தாலும் சற்றைக்கெல்லாம் மறக்கப்படுகிற அபாயமும் கொண்டவை. கேலி கிண்டல் பாடல்களாகட்டும், வசனம் கலந்த பாடல்கள் சிறப்பு சப்தங்களுக்கு இடமளிக்கப்படுகிற பாடல்களாகட்டும் இவை யாவும் அடுத்து வருகிற காலத்தில் கவனம் இழப்பதற்கான வாய்ப்பே அதிகம். இந்த இடர் ஏற்yபைத் தாண்டி வெகு சில பாடல்களே காலம் கடந்தும் விரும்பப்படுகின்றன. 

அப்படியான சிறப்பு "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தில் இடம்பெற்ற "சிப்பியிருக்குது முத்துமிருக்குது" பாடலுக்கு உண்டு.

கமலஹாசன் முள்ளுமுள்ளாய் தாடி வைத்துக்கொண்டு, டெல்லி மாநகரில் பல்வேறு சிரமங்களுக்கிடையில் மேலும் பல சிரமங்களை அடைகிற திரைக்கதையை சொல்கிற விதத்தில் சொன்னதன் மூலமாக நல்லதொரு வெற்றிப்படமாக மாற்றினார் கே.பாலச்சந்தர். தன்னைத்தானே வழிபட்டுக்கொள்கிற திலீப் என்கிற கதாபாத்திரம் கூடவே வரும் குமார் கதாபாத்திரங்களில் தலைமை குமார் என்று சொல்லும் அளவுக்கு ஒரு எஸ்.வி.சேகர், பிரதாப், பூர்ணம் என எல்லோரும் அளவாய்ச் சிறந்த படம். அப்பழுக்கற்ற பேரழகாய், அன்பும் கருணையும் ததும்புகிற நல்மன நாயகியாய் ஒளிர்ந்தார் ஸ்ரீதேவி. பாரதியார் பாடல்களுக்கு எம்.எஸ்.விசுவநாதன் லட்சணக் கச்சிதமாய் இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை ஒரு பொறுப்புமிக்க முதிய மனிதரின் நெடுங்கால உடனிருத்தல்களாய் படம் முழுவதும் பரிணமித்தது.

தொடக்க இசையாகட்டும், இணைப்பிசைச் சரங்களாட்டும், சரணங்களுக்கு உள்ளே வெளியே பயணிக்கிற மனநிலை ஊசலாட்டத்தை இசை வழியாகவும் ஒருமித்து உறுதிப்படுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். பாடல் முடியும்போது ஏற்படுகிற எண்ணப்பாங்கு விசித்திரமானது. ஏதோ ஒன்று மனதிலிருந்து பாரமற்று அந்த இடத்தில் வேறொன்று கனக்கத் தொடங்கும். மொத்தத்தில் இந்தப் பாடலை, எழுத்திலாகட்டும், இசையிலாகட்டும், எடுத்ததிலாகட்டும், ஒருமித்து காண்பவர் கண்கள் முன் வாழ்வின் மீதான அசட்டு வியப்பு ஒன்றை ஏற்படுத்தினார்கள்.

பொதுவாகவே பாடல்களை எண்ணத்திலிருந்து எடுப்பது வரைக்கும் அவற்றின் சாத்தியங்களை என்னவெல்லாம் செய்து விரிவுபடுத்தலாம் என்பதைத் தன் படங்களின் நித்திய ஆகமமாகவே கடைபிடித்தவர் பாலச்சந்தர். உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இமைசிமிட்டி திறப்பதற்குள் மலர்ந்துவிடுகிற தன்விருப்பப் பூ ஒன்றைப் போல் காதலின் சின்னஞ்சிறிய மின்னல் கணம் ஒன்றைக் கொடுத்து பெற்றுக்கொள்ளக் கூடிய சிச்சுவேஷன். அந்த இடத்துக்கு வரும்வரை அல்லது அந்த இடத்துக்கு வருகிற வழியெல்லாம் பாடுகிறாற் போல் ஏற்பாடு. இந்த இடத்தில் நாயகி சொல்லுகிற சந்தத்துக்கேற்ப நாயகன் வார்த்தைகளை வரவழைத்துக்கொண்டே செல்லவேண்டும். கேட்டதை கொடுப்பது வேறு, அள்ளித் தருவது வேறு. கண்ணதாசன் காதல் வள்ளல். எல்லா பாடல்களிலும் அவருக்கு நிகழ்வதை ஒருமுறை நாயகன் நாயகிக்கு நிகழ்வது என்று யூகிப்பது அவருக்கு ஒன்றும் கடினமில்லை.

இந்தப் பாடலில் விளிக்கும் ராஜாத்தி மென்மையான அபூர்வமாக ஒலிப்பது இதன் இன்னோரழகு.

"சிரிக்கும் சொர்க்கம் தங்கத் தட்டு எனக்கு மட்டும்" என்ற வரி எளிதாக தோன்றலாம். இதிலிருக்கிற தங்கத் தட்டு என்பது அத்தனை தூரம் பாடல்களில் இடம்பெறக் கூடிய வழமைச் சொல் அல்ல. அது இடம்பெற அதற்குத் தக்க சிறப்பு உண்டனால் மட்டுமே இயலும். அத்தகைய சொற்கூட்டை லேசான மயக்க வாக்கியமாகவே வரவழைத்தது கவிச்சிறப்பு. 

தேவை பாவை பார்வை 

நினைக்க வைத்து 

நெஞ்சில் நின்று நெருங்கி வந்து 

மயக்கம் தந்தது யார், 

தமிழோ அமுதோ கவியோ  

 

என்று  நிறைகிற இடம் வரிசை தப்புகிற பல் அழகை குறைப்பதற்கு பதிலாக ஒவ்வொரு புன்னகையும் கவன ஈர்ப்புத் தீர்மானமாக மாறுகிறாற் போல் வெட்டி வெட்டிச் சந்தத்துக்கு எழுதுகிறாற் போல் அமைந்த இந்தப் பாடல் மறக்கமுடியாத நல்லிசை பாடலாயிற்று. 

இப்ப பார்க்கலாம் என்று தயாராகும் தோழியிடம் தோற்பதற்குத் தான் அந்த கவிதையை பாடுகிறான் தோழன். தோல்வி பெற வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற வினோத ஆட்டத்தில் அவனும் என்ன தான் செய்வான்..?

 மழையும் வெயிலும் என்ன 

உன்னைக் கண்டால் 

மலரும் முள்ளும் என்ன

இதுவரை சுமூகமாய் செல்லும் பேச்சுவார்த்தை அடுத்து தீவிரமடைகிறது

ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்

என்றதும் சரிந்து சமாதானமாகிறது

கவிதை உலகம் கொஞ்சும் 

உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்

என்று முடிவை நோக்குகிறது

கொடுத்த சந்தங்களில் 

என் மனதை நீ அறிய நான் உரைத்தேன் 

என்று இத்தனை நேர்வாக்கியத்தை இத்தனை இசைவயமாக்கி இத்தனை கவிச்செறிவுடன் ஒலிக்கச் செய்தது விஸ்வநாத மகாமேதமைக்கு இன்னுமோர் சான்று.

திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது என்றதும் சிப்பியும் முத்தும் சேர்ந்து காதலாகின்றன.

சிந்தையும் சந்தமும் கவிதை பாடிக் கலந்திருப்பது எப்போது என்ற வினாவுக்கு எதற்கு தனியே விடை...? சேர்ந்தொழுகுகிற மௌனம் தானே விடை?

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கமலுக்கும் ரஜினிக்கும் கச்சிதமாய் பொருந்தியது. இந்தப் பாடல் பாலுவின் மரகதஃபலூடா.அதிலும் எஸ்.ஜானகியின் புன்னகை கூட கானவரிசையில் தான் இடம்பெறும். இருவரும் உயிரிலிருந்து பாடிய இன்னொரு நல்ல பாடலாயிற்று "சிப்பியிருக்குது" பாடல்!

ஆத்மார்த்தி.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.