Breaking News :

Saturday, December 14
.

JIMMY'S HALL - ஆங்கிலத் திரைப்படம்


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற டைரக்டர் கென்லோச்சின் இயக்கத்தில் உருவாகிய ஆங்கிலத் திரைப்படம். 

கதை 1930-களில் அயர்லாண்டில் நடைபெற்ற உண்மை சம்பவங்களில் அடிப்படையில் எடுக்கப்பட்டது.  கிறித்துவ தேவாலயங்களின்ஆளுமை,  மறுபக்கம் புரியாத, அசாதாரனமாண சூழ்நிலை. வரலாற்றின் ஆழமான பதிப்பு.

ஜிம்மி கிரால்டன் உள்நாட்டு போரில் குற்றவாளியாக வெளியேற்றப்பட்டு 10 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு மீண்டும் அயர்லாந்துக்கு  திரும்புகிறார். அங்கே புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. புதிய நம்பிக்கையுடன் திரும்புகிறார். அவர் தன்னுடைய மக்களாக தெரிந்து கொண்டவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் நகர வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர்கள். இந்த காலகட்டத்தில் ஜிம்மியின்  காதலி ஓனாக் வேறு ஒரு மண வாழ்க்கையில் இணைந்து விட்டார். ஜிம்மி கட்டி வைத்த  உள்ளூர் மக்களின் பல தேவைகளை கொண்டாடிய ஹால் இன்று வெறுமைப்பட்டு கிடக்கிறது.

ஜிம்மி தன் தாயாரை கவனித்துக் கொள்ளவே அங்கு வருகிறார். அங்கே அவருடைய நண்பர்கள்  அனைவரும் குழுமியுள்ளனர். ஜிம்மி ஒரு அமைதியான வாழ்வை நாடி வந்துள்ளார் என்பதை அனைவரும் ஏற்க மறுக்கின்றனர். அவர் உண்மையில் ஒரு போராளிதான்.

சர்ச்சின் அதிகாரத்திற்கு கட்டுப்படாதவர் ஜிம்மி என்றும் அவரை மக்கள் ஆர்வதோடு பின்பற்றுவார்கள் என்றும் ஆடிப்போய் நிற்கிறார் தேவாலய பாதிரி. இளைஞர்களோ ஜிம்மி மீண்டும் அந்த ஹாலை திறந்து நடைமுறைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கின்றனர். ஜிம்மி ஆனால் அதை மறுத்துவிடுகிறார்.

ஆனால் அவர் மனம் அந்த ஹாலை நோக்கி நடைபோடுகிறது. அவர் அங்கு செல்கிறார். உள்ளூர் இளைஞர்களுக்கு அது ஒரு பாதுகாப்பான பாசறையாக செயல்பட்டது அவர் மனக்கண்ணில் தோன்றுகிறது. சர்ச்சுக்கு அப்பால் மறுக்கப்பட்ட உரிமைகளை ஜனநாயக முறையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு நியாய மேடையாக விளங்கியது.

ஜிம்மி மீண்டும் அந்த ஹாலை திறந்துவிட்டார். அமெரிக்காவிலிருந்து ஒரு கிராமபோன் கொண்டு வந்தார். சந்தோஷம் நிரம்பி வழிந்தது. மீண்டும் இளைஞர்களுக்கு வகுப்புகள் ஆரம்பமாயின.  அனைவரும் மீண்டும் பயிற்றுவிக்க வந்து விட்டனர். பாடல்கள் ஒலித்தன. கால்கள் நடனமிட்டன. மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஜிம்மி எனும் தீப்பொறி பற்றி எரிந்தது. பாதிரியோ கம்யூனிஸம் பரவத் தொடங்கிவிட்டது எனத் தவித்தார்.  இளைஞர்கள் ஹாலுக்கு செல்வதை தவிர்க்கும் அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். உள்ளூர்வாசிகளை ஜிம்மிக்கு எதிராக ஏவி விட்டார். ஹாலை மூடும்படி தூண்டிவிட்டார். ஆனால் அரசாங்கமோ  ஜிம்மியும் அவர் நண்பர்களும், கம்யூனிஸ்டுகள் என முத்திரை குத்தி அவர்களை அகற்ற முடிவு கட்டினர்.

இடையே சிறு சலசலப்பு. நிலச்சுவான்தார்களால் அவதியுறும் குடிசைவாசி. அவர்கள் வீட்டை மீட்டுத்தர ஜிம்மி பேசுகிறார். சக்திமிக்க பேச்சு. உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே பிளவு. ஹாலில் குண்டு வெடிக்கிறது. ஹால் நெருப்புக்கு இரையாகிறது. அதற்குள் ஜிம்மி மீண்டும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார். துறைமுகத்தில் இளைஞர் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஹாலில் ஜிம்மியுடன் இணைந்தவர்கள் அனைவரும் தம் பாடலையும், நடனத்தையும் தொடரவேண்டும் என சூளுரைத்தனர். அதுவே அவர்களின் சுதந்திரம். சமுதாயத்தில் போராட்டம் ஒரு அங்கம்தான். போராட்டம்தான் பல மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டுவரும்.

நன்றி டு ராஜேந்திரன்

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.