Breaking News :

Friday, October 11
.

நினைவு தினம்: செல்வி ஜெ. ஜெயலலிதா: நான் தேடிய தலைவியோ!


எம்ஜிஆர் படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின் நாட்களில் அப்படியே நடந்தது வரலாறு.  அதற்கு ஒரு உதாரணம் தான் "திருவளர் செல்வியோ.. என்று ராமன் தேடிய தலைவியோ... என்ற 'ராமன் தேடிய சீதை' படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவை பார்த்து எம்ஜிஆர் பாடிய பாடல்.

 

ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்ஜிஆர் தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்ல தெரியும். இதே 'ராமன் தேடிய சீதை' படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கையை பார்த்துவிட்டு எம்ஜிஆர் "அம்மு நீ அரசியலுக்கு வருவாய்" என்று கூறினார். 

 

அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். 'நானாவது அரசியலுக்கு வருவதாவது? அதற்கு சான்சே இல்லை' என்றார். எம்ஜிஆர் விடாமல் "எழுதி வைத்துக் கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்" என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.

 

எம்ஜிஆர் நடித்த "பாக்தாத் திருடன்" படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்ஜிஆர் முதல்முறையாக பார்த்தார். ஜெயலலிதாவின் துறு துறுப்பும், சுட்டித்தனமும் எம்ஜிஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் மூலம் எம்ஜிஆருக்கு ஜோடி ஆக நடிப்போம் என்ற ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்ஜிஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் பெரும் வரவேற்பு பெற்றது.

 

சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்ஜிஆர் ஜெயலலிதா, வாணிஸ்ரீ நடித்த திரைப்படம் "கண்ணன் என் காதலன்" படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரை போல் நடிப்பார். ஒருநாள் காலைப் படபிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மதியம் எம்ஜிஆர் புறப்பட தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும் போது இயக்குனரிடம் மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார். "சக்கர நாற்காலியில் இருந்து மாடிப்படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி" இயக்குனரிடமிருந்து பதில் வந்ததும், காரில் ஏறப் போன எம்ஜிஆர் இறங்கிவிட்டார். "அது ரிஸ்க்கான காட்சி நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் விழுந்துவிட்டால் என்ன ஆவது" என்று கூறி வந்து விட்டார். படியில் உருளுவது டூப் தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலி உருண்டு வரவேண்டும் சில அங்குலங்கள் கூடுதலாக  நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்து விடுவார். எனவே முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாதபடி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்ஜிஆர்.

 

ஒத்திகையின் போது அந்த நாற்காலியில் எம்ஜிஆர் தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்கு மேல் நாற்காலி உருண்டு விடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒரு முறைக்கு பத்து முறை உறுதி செய்த பின்னர் தான் அந்த காட்சி படமாக்கப்பட்டது.

 

ஜெயலலிதா இனிமையாக பாடக்கூடியவர். அதை அறிந்து 'அடிமைப்பெண்' படத்தில் 'அம்மா என்றால் அன்பு' பாடலை இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவை பாட செய்தவர் எம்ஜிஆர் தான்.

 

1971 ஆம் ஆண்டு "ரிக்ஷாக்காரன்" படத்தில் நடித்ததற்காக எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்ஜிஆர் சென்றதன் காரணம் என்ன? 'பாரத்' விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்ஜிஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார்.

 

அவரது பேச்சு... "மக்கள் திலகம் எம்ஜிஆர் பாரத் விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட்டால் தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்ஜிஆர் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. அந்த பிடிவாத குணம் தான் அவரை சிறந்த நடிகர் ஆக்கியுள்ளது என்றார்.

 

ஜெயலலிதாவை பற்றி எம்ஜிஆர் கணித்தது சரி. எம்ஜிஆர் பற்றி ஜெயலலிதா கூறியதும் மிகச் சரி.

 

இந்திய அளவில் இந்திராகாந்தி..தமிழக அளவில் எம்.ஜி.ஆர்!

 

2016 ஆம் ‌ஆண்டு டிசம்பர் 5 இல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிசைக்கு பிறகு மறைந்த தினம்..

 

1998 இல் ஜூனியர் விகடன் இதழில் வெளியான ‘மக்கள் பேட்டி’யில் ஜெயலலிதா அளித்த சில பதில்கள்..

 

கே : உங்கள் கண்ணோட்டத்தில் அரசியல்வாதி என்பவர் யார்? உங்களைக் கவர்ந்த அரசியல்வாதி யார்?

 

ஜெ பதில் : மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு புரிந்து கொண்டு மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு அயராது பாடுபடுபவரே உண்மையான அரசியல்வாதி.

 

என்னைக் கவர்ந்த அரசியவாதி – சர்வதேச அளவில் திருமதி. மார்க்ரெட் தாட்சர் அவர்கள். இந்திய அளவில் அன்னை இந்திரா காந்தி அவர்கள். தமிழக அளவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

 

கே: திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்பது சரியா?

 

ஜெ பதில் : ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத் தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்க செய்வதே திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தான்.

 

கே : ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம் எது?

 

ஜெ பதில் : விடா முயற்சி

 

கே: புரட்சித் தலைவர் அவர்களுடன் சினிமாவில் இணைந்து நடித்தது, அரசியலில் இணைந்து பணியாற்றியது – எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்?

 

ஜெ பதில் : இரண்டுமே பெருமைக்குரியது தான். கலைத்துறையில் இணைந்ததன் தொடர்ச்சி தான் பொது வாழ்வின் வளர்ச்சி.

 

கே : துணிச்சலாக பதில் சொல்லுங்கள் பார்ப்போம். காந்திஜி, நேருஜி, ஈ.வெ.ரா, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்-இவர்களில் ஒருவருக்கு உங்களால் உயிர் கொடுக்க முடியும் என்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?

 

ஜெ பதில் : நிச்சயமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தான்.

 

காரணம், அவர் இருந்தால் இந்தத் தலைமைப் பொறுப்பு, பணிச்சுமை, மன உளைச்சல் இவற்றில் இருந்து நான் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?”

 

நன்றி: தாய்.

 

அன்னாரின் நினைவு தினம் இன்று... நினைவு கூர்வோம்..

 

"எம்ஜிஆர் நூறு" காலத்தை வென்ற காவியத் தலைவர். என்ற நூலிலிருந்து.

 

நன்றி.. ஸ்ரீதர் சுவாமிநாதன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.